தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது நற்பணி இயக்கத்தைத் தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் 58 அமைப்பு ரீதியான மாவட்ட அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக 38 வருவாய் மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட மாவட்ட அலகுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள 43 வயதான தனுஷ், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், ரசிகர் மன்றத்தை மாநிலம் தழுவிய மக்கள் நல இயக்கமாகக் கட்டமைக்கும் இவரது நடவடிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஊகங்களைத் தோற்றுவித்துள்ளதுடன், தவெக அமைச்சர்கள், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த திமுக தலைவர்கள் மட்டத்திலும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தி, கிளைகள் இல்லாத பகுதிகளில் புதிய அலகுகளைத் தொடங்குமாறு தனுஷ் தமது நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் முதற்கட்டமாக, கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி கோயம்புத்தூரில் மாவட்ட நிர்வாகிகளுடனும், ஒக்டோபர் 25ஆம் திகதி சென்னை ஓ.எம்.ஆர் சாலையிலுள்ள தனியார் கல்லூரியொன்றில் மகளிர் அணி நிர்வாகிகளுடனும் அவர் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.
அரசியல் பிரவேசம் குறித்து தனுஷ் வெளிப்படையாக அறிவிக்காத போதிலும், 2031 சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருக்காமல் எதிர்வரும் 2027 உள்ளாட்சித் தேர்தலிலேயே களமிறங்குவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இயக்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகுதியான வேட்பாளர்களை அடையாளம் காணும் பணிகளும் இடம்பெற்று வருவதுடன், மகளிர் அணியை மேலும் வலுப்படுத்துமாறும் தனுஷ் உத்தரவிட்டுள்ளார்.
தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையிலான நேரடிப் போட்டியாக மாறியுள்ள தமிழக அரசியல் களத்தில், தனுஷ் நற்பணி இயக்கம் கணிசமான ஆதரவுத் தளத்துடன் களமிறங்கினால் அது அரசியல் விவாதப் போக்கையே மாற்றக்கூடிய புதிய சக்தியாக உருவெடுக்கும் என நிர்வாகிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.




