பிரான்ஸ் முழுவதும் உள்ள 517 லிடில் (Lidl) பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளில் நச்சுத்தன்மை கொண்ட பொருள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு இணையதளமான ‘ரப்பல் கொன்சோ’ (RappelConso) நேற்று (சனிக்கிழமை, நவம்பர் 21) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உருளைக்கிழங்குகளில் இயற்கையாகவே காணப்படும் ‘கிளைக்கோஅல்கலாய்டுகள்’ (glycoalcaloïdes) எனப்படும் வேதிப்பொருள் இதில் அதிக அளவில் இருப்பதே இதற்குக் காரணமாகும்.
கடந்த ஒக்டோபர் 22 முதல் நவம்பர் 9 வரையிலான காலப்பகுதியில், பிரான்சின் 37 மாவட்டங்களில் உள்ள 517 லிடில் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட ‘கோத்தே மார்ஷே’ (Côté Marché) நிறுவனத்தின் 2.5 கிலோ பைகளில் அடைக்கப்பட்ட ‘ஷெரி’ (Chérie) ரகச் சிவப்பு உருளைக்கிழங்குகளே திரும்பப் பெறப்படுகின்றன. இதன் பட்டைக்குறியீடு (Code-barres) 20253400 மற்றும் தொகுதி எண் (Numéro de lot) 26128774 ஆகும்.
இந்த வேதிப்பொருள் அதிக அளவில் உடலுக்குள் செல்லும்போது குமட்டல், வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு இது கூடுதல் உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தும் என ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (EFSA) சுட்டிக்காட்டியுள்ளது. தோலை உரித்தல் (25-75%), நீரில் வேகவைத்தல் (5-65%) அல்லது பொரித்தல் (20-90%) மூலம் இந்த வேதிப்பொருளின் அளவை ஓரளவிற்குக் குறைக்க முடியும் என்றாலும், திரும்பப் பெறப்பட்ட இந்த உருளைக்கிழங்குகளை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம் எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்தத் தொகுதி உருளைக்கிழங்குகளை வாங்கிய நுகர்வோர் அவற்றைச் சமைத்து உண்பதைத் தவிர்த்து, அழித்துவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அல்லது வாங்கிய கடைகளில் அவற்றைத் திருப்பிக் கொடுத்துத் தமது பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு 0800 543 554 35 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




