மார்பகப் புற்றுநோயாளிகளின் ‘ஹாட் ஃபிளாஷ்’ அறிகுறி புதிய மருந்துக்கு ஹெல்த் கனடா அனுமதி

மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு ஏற்படும் மிதமானது முதல் கடுமையானது வரையிலான திடீர் உடல் சூடு மற்றும் இரவு நேர வியர்வை (Hot Flashes & Night Sweats) ஆகிய அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்துக்கு ஹெல்த் கனடா அனுமதி வழங்கியுள்ளது.
Elinzanetant எனப்படும் இந்த மருந்து, Lynkuet என்ற வர்த்தகப் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை Bayer நிறுவனம் தயாரிக்கிறது. மாதவிடாய் நிறுத்தக் காலத்தில் ஏற்படும் அறிகுறிகளுக்காக இந்த மருந்து ஏற்கனவே 2025 ஜூலை மாதம் அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், மார்பகப் புற்றுநோயாளிகளுக்கான அதன் பயன்பாட்டை ஆதரிக்கும் புதிய ஆய்வைத் தொடர்ந்து ஹெல்த் கனடா தற்போது அனுமதியை விரிவுபடுத்தியுள்ளது.
மார்பகப் புற்றுநோய்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு ஹார்மோன் ஏற்பி நேர்மறை (hormone-receptor positive) வகையைச் சேர்ந்தவை. இவ்வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை குறைக்கும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதன் விளைவாக பல பெண்களுக்கு திடீர் உடல் சூடு மற்றும் இரவு நேர வியர்வை போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
Elinzanetant ஒரு ஹார்மோன் அல்லாத மருந்தாகும். ஈஸ்ட்ரோஜன் குறைவால் அதிகமாகச் செயல்படக்கூடிய குறிப்பிட்ட நரம்பு செல்களை குறிவைத்து இந்த மருந்து செயல்படுகிறது. இதன் மூலம் ஹாட் ஃபிளாஷ் மற்றும் இரவு நேர வியர்வை போன்ற அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இதுபோன்ற அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் இதுவரை சிகிச்சை வாய்ப்புகள் குறைவாக இருந்ததாக டொராண்டோவில் உள்ள Sinai Health நிறுவனத்தின் புற்றுநோய் திட்ட மருத்துவ இயக்குநர் டாக்டர் Christine Brezden-Masley தெரிவித்துள்ளார். ஹார்மோன் மாற்று சிகிச்சை (Hormone Replacement Therapy) பல மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு பொருத்தமானதாக இல்லாததால், அறிகுறிகளைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் வேறு மருந்துகளை பயன்படுத்தி வந்தனர்.
மார்பகப் புற்றுநோயாளிகள் பொதுவாக 5 முதல் 10 ஆண்டுகள் வரை anti-estrogen அல்லது endocrine therapy மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். Tamoxifen மற்றும் aromatase inhibitors ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.
கடுமையான ஹாட் ஃபிளாஷ் மற்றும் இரவு வியர்வை பெண்களின் அன்றாட வாழ்க்கையையும் தூக்கத்தையும் பெரிதும் பாதிக்கக்கூடும். சில நேரங்களில் அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருப்பதால், புற்றுநோய் மருந்துகளை நிறுத்தும் நிலைக்கும் நோயாளிகள் செல்லக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது புற்றுநோய் மீண்டும் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடியதால், அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதுவரை சில நோயாளிகளுக்கு gabapentin மற்றும் Effexor போன்ற மருந்துகள் off-label முறையில் பயன்படுத்தப்பட்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Princess Margaret Cancer Centre-ஐச் சேர்ந்த மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் Dave Cescon, மாதவிடாய் நிறுத்த அறிகுறிகள் பல மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும், இந்த அறிகுறிகளுக்கான சிகிச்சை வரலாற்றில் போதுமான அளவில் கவனிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். Elinzanetant-க்கு ஹெல்த் கனடா வழங்கிய புதிய அனுமதி நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மருந்தின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்ட OASIS-4 கட்டம் 3 மருத்துவ ஆய்வில், endocrine therapy பெற்று வந்த 18 முதல் 70 வயதுக்குட்பட்ட 395 பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு வாரத்திற்கு குறைந்தது 35 மிதமான அல்லது கடுமையான ஹாட் ஃபிளாஷ் அல்லது இரவு வியர்வை அறிகுறிகள் இருந்தன.
ஆய்வில் Elinzanetant எடுத்த பெண்களுக்கு தினசரி ஹாட் ஃபிளாஷ் மற்றும் இரவு வியர்வை கணிசமாகக் குறைந்ததுடன், தூக்கக் கோளாறுகளும் குறைந்ததாக தெரியவந்தது. ஆய்வு முடிவில் 91.6 சதவீத பங்கேற்பாளர்கள் மேலும் இரண்டு ஆண்டுகள் மருந்தைத் தொடர விருப்பம் தெரிவித்தனர்.
இந்த மருந்தின் பொதுவான பக்கவிளைவுகளில் பகல் நேர தூக்க கலக்கம், சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்குகின்றன.
எனினும், Elinzanetant மருந்து தற்போது கனடாவில் பொதுமக்களுக்கான அரசாங்க மருந்துத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறவில்லை என்றும் Bayer நிறுவனம் தெரிவித்துள்ளது. மருந்தின் விலை குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
இந்த மருந்து ஒவ்வொரு நோயாளிக்கும் பொருத்தமானதா என்பதை அவர்களின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர் தீர்மானிக்க வேண்டும்.
