சமூக உதவித் திட்டங்களுக்கான தகுதி விதிகளில் முக்கிய மாற்றத்தை Ontario Works அறிவித்துள்ளது

ஒன்ராறியோ மாகாண அரசு Social Assistance எனப்படும் சமூக உதவித் திட்டங்களுக்கான தகுதி விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, கனடாவில் நிரந்தரமாக வசிக்கும் சட்டபூர்வ தகுதி இல்லாதவர்கள் மட்டுமின்றி, தற்காலிக குடியிருப்பு அந்தஸ்தில் உள்ள சிலரும் Ontario Works (OW) மற்றும் Ontario Disability Support Program (ODSP) ஆகிய திட்டங்களின் உதவிகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் 2026 ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. Ontario அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மாகாணத்தின் சமூக உதவித் திட்டங்கள் வரி செலுத்துவோரின் பணத்தை தகுதியுடையவர்களுக்கு வழங்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் கீழ், கனடாவில் சட்டபூர்வமாக தங்குவதற்கான அனுமதி இல்லாதவர்கள் Ontario Works அல்லது ODSP உதவிகளைப் பெறத் தகுதியற்றவர்களாகின்றனர். அதேபோல், மாணவர் அனுமதி (Study Permit), வேலை அனுமதி (Work Permit), Visitor அல்லது Tourist status போன்ற தற்காலிக அனுமதியுடன் கனடாவில் இருப்பவர்களும் இந்த சமூக உதவித் திட்டங்களுக்கு தகுதியற்றவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றம் குறிப்பாக சர்வதேச மாணவர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள், பார்வையாளர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மற்றும் குடிவரவு நிலை தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்பவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த மாற்றத்துக்கு பின்னணியாக, Ontario Social Benefits Tribunal வழங்கிய தீர்ப்பு ஒன்றும் குறிப்பிடப்படுகிறது. காலாவதியான Temporary Work Permit கொண்டிருந்த ஒருவர் Ontario Works உதவிக்கு தகுதியுடையவர் என தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண அரசு விதிகளை மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ontario Children, Community and Social Services அமைச்சர் Michael Parsa, வரி செலுத்துவோரின் பணத்தில் வழங்கப்படும் சமூக உதவிகள் கனடாவில் தங்குவதற்கு சட்டபூர்வ தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்படக்கூடாது என்ற அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.
Ontario Works என்பது பொருளாதார நெருக்கடியில் உள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நிதியுதவி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகளை வழங்கும் திட்டமாகும். ODSP என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவை வழங்கும் மாகாணத் திட்டமாகும்.
எனினும், இந்த புதிய விதிகள் குறித்து குடியேற்ற சமூகங்களிடையே கவலைகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, சட்டபூர்வமான Work Permit அல்லது Study Permit வைத்திருந்தாலும் சமூக உதவி பெற முடியாத நிலை உருவாகியிருப்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. சட்டபூர்வமாக கனடாவில் தற்காலிகமாக வசிப்பவர்கள் மற்றும் சட்ட அந்தஸ்து இல்லாதவர்கள் இருவரும் புதிய தகுதி விதிகளின் கீழ் வேறுபட்ட நிலைகளைக் கொண்டிருந்தாலும், சமூக உதவி பெறுவதில் இருவருக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போது Ontario Works அல்லது ODSP பெறுபவர்கள், அல்லது விண்ணப்பிக்கத் திட்டமிடுபவர்கள், தங்களுடைய குடிவரவு அந்தஸ்து மற்றும் ஆவணங்களின் நிலையை கவனமாக பரிசீலிப்பது முக்கியமாகும். தனிப்பட்ட சூழ்நிலைக்கேற்ப தகுதி மாறக்கூடியதால், குடிவரவு அல்லது சமூக உதவி தொடர்பான சட்ட ஆலோசனையைப் பெறுவது பயனுள்ளதாக இருக்கும்.
