Sunday, 16 August 2026
BREAKING NEWS
டொரண்டோ செய்திகள்

டொராண்டோ சைக்கிள் பாதைகள் விவகாரம்: FORD அரசுக்கு நீதிமன்றத்தில் வெற்றி

டொராண்டோ, ஆகஸ்ட் 15, 2026: டொராண்டோ நகரின் முக்கிய வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சைக்கிள் பாதைகளை அகற்றும் ஒன்ராறியோ அரசின் திட்டத்திற்கு எதிரான வழக்கில், ஃபோர்ட் அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஒன்ராறியோவின் மேல்முறையீட்டு நீதிமன்றம், சைக்கிள் பாதைகளை அகற்றும் அரசின் திட்டத்திற்கு வழிவகுக்கும் வகையில் கீழ்நிலை நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மாற்றியுள்ளது. இதன் மூலம் டொராண்டோவின் Bloor Street, Yonge Street மற்றும் University Avenue ஆகிய முக்கிய வீதிகளில் உள்ள சுமார் 19 கிலோமீட்டர் பாதுகாக்கப்பட்ட சைக்கிள் பாதைகளை அகற்றுவதற்கான சட்டத் தடைகள் நீங்கியுள்ளன.

“பொது அறிவுக்குக் கிடைத்த வெற்றி” – ஃபோர்ட் அரசு

இந்தத் தீர்ப்பை வரவேற்ற ஒன்ராறியோ போக்குவரத்து அமைச்சர் பிரப்மீத் சர்காரியா, இது “பொது அறிவுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் உரிய அதிகாரத்துக்கும் கிடைத்த வெற்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டொராண்டோவின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே அரசின் நோக்கம் என்றும், சைக்கிள் பாதைகள் வாகனப் பாதைகளைக் குறைக்கும் வகையில் முக்கிய வீதிகளில் அமைக்கப்படுவதற்குப் பதிலாக, பொருத்தமான இரண்டாம் நிலை வீதிகளில் அமைக்கப்பட வேண்டும் என்றும் அரசு வாதிட்டு வருகிறது.

சைக்கிள் உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு

எனினும், இந்தத் தீர்ப்பை சைக்கிள் பயணிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

சைக்கிள் பாதைகளை அகற்றினால் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்றும், போக்குவரத்து நெரிசலை அது தீர்க்காது என்றும் Cycle Toronto உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்துள்ளன.

வழக்கு விசாரணையின்போது வெளியான ஒன்ராறியோ அரசின் உள்துறை ஆவணங்களின்படி, டொராண்டோ நகரின் மையப்பகுதிகளில் சைக்கிள் பாதைகளை அகற்றுவது அனைத்து சாலைப் பயனாளர்களையும் உள்ளடக்கிய விபத்துகளை 54 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வாய்ப்பு குறைவு என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது.

மேயர் ஒலிவியா சோவின் நிலைப்பாடு

டொராண்டோ மேயர் ஒலிவியா சோ தலைமையிலான நகர நிர்வாகம், வாகன ஓட்டிகள், சைக்கிள் ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் என அனைத்து சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மாகாண அரசுடன் இணைந்து தீர்வு காண முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

சாலைப் பயனாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவராக நிறுத்தும் அணுகுமுறை அனைவரின் பாதுகாப்பையும் பாதிக்கும் என மேயரின் அலுவலகம் எச்சரித்துள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

நீதிமன்றத் தீர்ப்பு ஃபோர்ட் அரசுக்கு சைக்கிள் பாதைகளை அகற்றும் சட்ட அதிகாரத்தை வழங்கியுள்ள போதிலும், அந்தப் பாதைகளை உடனடியாக அகற்றுவது குறித்து அரசு இன்னும் இறுதி நடவடிக்கைத் திட்டத்தை அறிவிக்கவில்லை.

இதனால், டொராண்டோவின் Bloor, Yonge மற்றும் University வீதிகளில் உள்ள சைக்கிள் பாதைகளின் எதிர்காலம் மீண்டும் நகரம் மற்றும் மாகாண அரசுக்கு இடையிலான முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

இந்த விவகாரம், டொராண்டோவில் போக்குவரத்து நெரிசல், சாலைப் பாதுகாப்பு, சைக்கிள் பயணிகளின் உரிமை மற்றும் நகராட்சி அதிகாரம் ஆகியவை தொடர்பான பரந்த விவாதத்தையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆதாரம்: CityNews Toronto / The Canadian Press.

பகிர்: