ஆட்டிசம் திட்டத்தில் நீண்டகால காத்திருப்பு – பெற்றோர் கடும் அதிருப்தி

ஒன்ராறியோ அரசின் ஆட்டிசம் சேவைகளுக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ள போதிலும், முக்கியமான சிகிச்சை மற்றும் ஆதரவு சேவைகளைப் பெறுவதற்கு குழந்தைகள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்வதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோ ஆட்டிசம் திட்டமான Ontario Autism Program (OAP) மூலம் வழங்கப்படும் முக்கிய மருத்துவ சேவைகளைப் பெறுவதற்கான சராசரி காத்திருப்பு காலம் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக இருப்பதாக பெற்றோர் தலைமையிலான End the Wait Ontario பிரசாரம் தெரிவித்துள்ளது. மாகாணம் முழுவதும் 70,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
Vaughan பகுதியைச் சேர்ந்த Amy Jones, தனது ஆறு வயது மகன் Elijah ஆட்டிசம் மற்றும் பேச்சு இயக்கக் கோளாறான speech apraxia ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக பேச்சுப் பயிற்சி சிகிச்சை தேவை என கூறியுள்ள போதிலும், OAP மூலம் அதற்கான நிதியுதவியைப் பெற முடியாமல் பல ஆண்டுகளாக காத்திருப்பதாக அவர் கூறினார்.
தங்களுக்கு எப்போது நிதியுதவி கிடைக்கும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவைக் கூட அதிகாரிகள் வழங்க முடியவில்லை என Jones தெரிவித்தார்.
தனியார் முறையில் பேச்சுப் பயிற்சி சிகிச்சையைப் பெறுவதற்கு 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேர அமர்வுக்கு $125 முதல் $175 வரை செலவாகிறது. குழந்தைக்கு வாரத்திற்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு முறை சிகிச்சை தேவைப்படுவதாகவும், அந்தச் செலவைத் தொடர்ந்து தங்களால் ஏற்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, ஆட்டிசம் சேவைகளுக்கான காத்திருப்பு காலத்தைக் குறைப்பதற்காக மாகாண அரசு தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக Children, Community and Social Services அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டில் Ontario Autism Program-க்காக சுமார் $1 பில்லியன் செலவிடப்படுவதாகவும், இந்த ஆண்டுக்கான மாகாண வரவு-செலவுத் திட்டத்தில் மேலும் $186 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டிலிருந்து OAP நிதி சுமார் $674 மில்லியன் அல்லது 232 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அரசு கூறுகிறது.
மேலும், ஆட்டிசம் சேவைகளுக்கான பணியாளர் திறனை அதிகரிக்கும் திட்டங்களுக்காக 2022ஆம் ஆண்டிலிருந்து சுமார் $70 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 350-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
எனினும், இந்த அதிகரிக்கப்பட்ட நிதி எப்போது குழந்தைகளுக்கான உடனடி சேவைகளாக மாறும் என்பது இன்னும் தெளிவாகவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
ஆட்டிசம் கொண்ட குழந்தைகளின் வளர்ச்சியில் ஆரம்பகால பேச்சுப் பயிற்சி, நடத்தைச் சிகிச்சை மற்றும் பிற மருத்துவ சேவைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், பல ஆண்டுகள் நீடிக்கும் காத்திருப்பு குழந்தைகளின் வளர்ச்சியையும் குடும்பங்களின் நிதிநிலையையும் கடுமையாக பாதிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
ஒன்ராறியோ அரசு ஆட்டிசம் திட்டத்திற்கான நிதியை அதிகரித்து வருவதாக கூறினாலும், காத்திருப்புப் பட்டியலில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அந்த உதவி எப்போது நடைமுறையில் கிடைக்கும் என்பதே தற்போது பெற்றோர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.
