Tuesday, 11 August 2026
BREAKING NEWS
கனடா செய்திகள்

இந்தியா–கனடா உறவில் புதிய கட்டம்

ஒட்டாவா: கனடாவில் வெளிநாட்டு தலையீடு மற்றும் நாடுகடந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான சகிப்புத்தன்மையும் இல்லை என்பதை இந்திய அரசாங்கத்திடம் தெளிவாகத் தெரிவித்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடாவின் பொது பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கனடாவில் உள்ள சீக்கிய சமூகத்தினரையும், காலிஸ்தான் ஆதரவு செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து இந்திய அதிகாரிகளால் அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sikhs for Justice (SFJ) அமைப்புக்கு கனடாவின் பொது பாதுகாப்புத் துறை உதவி துணை அமைச்சர் ரிச்சர்ட் பிலோடோ அனுப்பிய கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படும் நாடுகடந்த ஒடுக்குமுறை அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் ‘பூச்சிய சகிப்புத்தன்மை’ கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், இந்த நிலைப்பாடு இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சட்டம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நாட்டின் இறையாண்மை ஆகியவற்றை மதிக்க வேண்டும் என இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் கனேடிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாட்டு தலையீடு மற்றும் நாடுகடந்த ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் வகையில் கனடா அரசாங்கம் தேவையான சட்ட மற்றும் கொள்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SFJ கடும் விமர்சனம்

எனினும், கனேடிய அரசாங்கத்தின் இந்த உறுதிமொழியை Sikhs for Justice அமைப்பு நிராகரித்துள்ளது.

இந்தியாவுடன் கனடா மீண்டும் இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த முயற்சிப்பது குறித்து அந்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

கனடாவில் சில சீக்கிய செயற்பாட்டாளர்களுக்கு காவல்துறையினரால் தொடர்ச்சியாக ‘Duty to Warn’ எனப்படும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இது கனடாவின் ‘பூச்சிய சகிப்புத்தன்மை’ கொள்கை நடைமுறையில் எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நிஜ்ஜார் படுகொலை

இந்த விவகாரம் கனேடிய சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் மேலும் தீவிரமடைந்தது.

நிஜ்ஜார் கடந்த 2023ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக இந்திய அரசுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக கனேடிய அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

எனினும், நிஜ்ஜார் படுகொலை உள்ளிட்ட கனடாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நாடுகடந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளுடன் இந்திய அரசாங்கத்துக்கு தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியா தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

ஐ.நா. நிபுணர்களும் எச்சரிக்கை

இதனிடையே, பல்வேறு நாடுகளில், குறிப்பாக கனடாவில், சீக்கிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இந்திய அதிகாரிகளால் நாடுகடந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்கள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

கனடாவில் உள்ள சில சீக்கிய செயற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் காவல்துறையினரால் பாதுகாப்பு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியா–கனடா உறவில் புதிய கட்டம்

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த இந்தியா–கனடா இராஜதந்திர உறவுகளை மீண்டும் சீரமைப்பதற்கு பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான தற்போதைய கனேடிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்தும் அதேவேளையில், கனடாவில் வெளிநாட்டு தலையீடு, சமூகங்களை அச்சுறுத்துதல் மற்றும் நாடுகடந்த ஒடுக்குமுறை போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கப் போவதில்லை என கனேடிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவுடனான உறவுகளை மீளக் கட்டியெழுப்பும் கனடாவின் முயற்சிகளுக்கும், கனடாவில் வாழும் சீக்கிய மற்றும் ஏனைய புலம்பெயர் சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளுக்கும் இடையில் அரசாங்கம் எவ்வாறு சமநிலையைப் பேணப் போகிறது என்பது தற்போது முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது

பகிர்: