ஒன்ராறியோ லிபரல் கட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி

ஒன்ராறியோ லிபரல் கட்சியின் அடுத்த தலைவரைத் தெரிவு செய்வதற்கான போட்டியில் இடம்பெறும் ஐந்து வேட்பாளர்களுக்கிடையிலான முதலாவது தலைமைத்துவ விவாதம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து வேட்பாளர்கள் தங்களது கொள்கைகளையும் திட்டங்களையும் முன்வைத்தனர்.
எனினும், அடுத்த லிபரல் கட்சித் தலைவருக்கு ஒன்ராறியோ சட்டமன்றத்தில் ஆசனம் இருக்க வேண்டுமா என்பது விவாதத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது.
“சட்டமன்ற ஆசனம் முக்கியம்”
Etobicoke-Lakeshore தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் லிபரல் சட்டமன்ற உறுப்பினர் Lee Fairclough மற்றும் Stephanie Bowman ஆகியோர், புதிய தலைவருக்கு சட்டமன்ற ஆசனம் இருப்பது முக்கியமான விடயம் என வலியுறுத்தினர்.
லிபரல் கட்சி கடந்த காலத்தில் மேற்கொண்ட அதே அணுகுமுறையை மீண்டும் தொடர முடியாது என Fairclough தெரிவித்தார்.
சட்டமன்ற அனுபவமும் தலைமைத்துவ அனுபவமும் கொண்ட ஒருவர் கட்சிக்குத் தலைவராக வருவது தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.
“வாக்காளர்களுக்கு ஆசனம் முக்கியமல்ல”
மறுபுறம், வீடமைப்பு தொடர்பான செயற்பாட்டாளர் Eric Lombardi மற்றும் முன்னாள் அரசியல் பணியாளர் Dylan Marando ஆகியோர், லிபரல் தலைவருக்கு சட்டமன்ற ஆசனம் உள்ளதா என்பது வாக்காளர்களின் முக்கிய கவலை அல்ல என தெரிவித்தனர்.
அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் பெற்றோர், “லிபரல் கட்சித் தலைவருக்கு சட்டமன்றத்தில் ஆசனம் உள்ளதா?” என்று கேட்கப் போவதில்லை என Marando குறிப்பிட்டார்.
அதற்கு பதிலாக, தங்கள் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தவும், பெற்றோருக்கான சுகாதார சேவையை பாதுகாக்கவும், வேலைவாய்ப்புகளை காப்பாற்றவும் அந்தத் தலைவரால் முடியுமா என்பதையே வாக்காளர்கள் கருத்தில் கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.
நவ்தீப் பெயின்ஸ் முன்னணியில்?
முன்னாள் கனேடிய மத்திய அமைச்சரான Navdeep Bains, புதிய ஒன்ராறியோ லிபரல் தலைவருக்கு சட்டமன்ற ஆசனம் அவசியமா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
எனினும், மத்திய அரசிலும் அமைச்சரவையிலும் பெற்றுள்ள தனது அரசியல் அனுபவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
ஒன்ராறியோ மக்கள் தற்போதைய அரசாங்கத்தால் சோர்வும் விரக்தியும் அடைந்துள்ளதாகவும், அதற்கு மாற்றாக நம்பகமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் Bains தெரிவித்தார்.
தலைமைப் போட்டியில் தாம் முன்னணி வேட்பாளர் என்ற கருத்து நிலவுவதை அவர் ஒப்புக்கொண்டாலும், அது ஒரு தவறான கருத்து எனக் குறிப்பிட்டார்.
“துணிச்சலான கொள்கைகள் தேவை”
Eric Lombardi, அடுத்த லிபரல் தலைவரிடம் துணிச்சலான புதிய யோசனைகளை முன்வைக்கும் திறன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கடந்த கால தலைவர்களுக்கு சட்டமன்ற ஆசனம் இல்லாதது மட்டும் பிரச்சினை அல்ல என்றும், தேர்தல் பிரசாரங்களில் புதிய யோசனைகளையும் அரசியல் ஆபத்துகளை ஏற்கும் அணுகுமுறையையும் மையமாக்கத் தவறியதே முக்கிய பிரச்சினை என்றும் அவர் கூறினார்.
நவம்பர் 21ஆம் தேதி புதிய தலைவர்
2018ஆம் ஆண்டு ஒன்ராறியோவில் லிபரல்கள் ஆட்சியில் இருந்த காலத்திற்குப் பின்னர், கட்சியின் நான்காவது தலைவராக புதிய ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
Steven Del Duca மற்றும் Bonnie Crombie ஆகிய முந்தைய இரு தலைவர்களுக்கும் சட்டமன்ற ஆசனம் இல்லாத நிலையில், 2022 மற்றும் 2025 பொதுத் தேர்தல்களில் லிபரல் கட்சி மூன்றாவது இடத்திலேயே இருந்தது.
ஒன்ராறியோ லிபரல் கட்சியின் புதிய தலைவர் 2026 நவம்பர் 21ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளார்
