செப்டம்பர் 1 முதல் TTC பயணிகளுக்கு புதிய கட்டணச் சலுகை – 47 பயணங்களுக்குப் பிறகு இலவச பயணம்

டொராண்டோ: டொராண்டோவில் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், டொராண்டோ போக்குவரத்து ஆணையம் (TTC) வரும் செப்டம்பர் 1, 2026 முதல் புதிய மாதாந்திர கட்டண வரம்பு முறையை (Monthly Fare Capping) அறிமுகப்படுத்துகிறது.
இந்த புதிய முறையின் கீழ், ஒரு மாதத்தில் 47 கட்டணப் பயணங்களை செலுத்திய பின்னர், அந்த மாதம் முழுவதும் TTC-யில் மேற்கொள்ளும் அடுத்தடுத்த பயணங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே மாதாந்திர பாஸ் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
எப்படி செயல்படும்?
PRESTO அட்டை, மொபைல் வாலெட்டில் உள்ள PRESTO, Interac Debit அல்லது Credit Card, அல்லது அவற்றின் மொபைல் வாலெட் ஆகியவற்றில் ஒரே அட்டை அல்லது ஒரே சாதனத்தை தொடர்ந்து பயன்படுத்தி TTC-யில் பயணம் செய்ய வேண்டும்.
ஒரு மாதத்தில் 47 கட்டணப் பயணங்கள் நிறைவடைந்தவுடன், அந்த மாதத்தின் மீதமுள்ள TTC பயணங்கள் இலவசமாகும். ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் பயண எண்ணிக்கை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும்.
மேலும், இரண்டு மணி நேர இலவச transfer காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் இணைப்பு பயணங்கள் தனித்தனி கட்டணப் பயணங்களாகக் கணக்கிடப்படாது. முதல் tap மட்டுமே ஒரு paid trip ஆகக் கணக்கிடப்படும்.
மாதாந்திர பாஸ்கள் நிறுத்தம்
இந்த புதிய கட்டண முறையுடன், ஆகஸ்ட் 31, 2026 முதல் Youth, Adult, Senior மற்றும் Fair Pass மாதாந்திர TTC பாஸ்கள் நிறுத்தப்படுகின்றன. Youth மற்றும் Senior 12-month passes-களும் நிறுத்தப்படும்.
அதேவேளை, Adult 12-Month Pass மற்றும் Post-Secondary Monthly Pass தொடர்ந்து கிடைக்கும் என TTC தெரிவித்துள்ளது.
2027-ல் மேலும் குறையலாம்
தற்போது 47 பயணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண வரம்பு, 2027ஆம் ஆண்டில் 40 பயணங்களாகக் குறைக்கப்படும் என மேயர் ஒலிவியா சோ கூறியுள்ளார். இதனால் அடிக்கடி TTC-யைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு மேலும் சேமிப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேயர் ஒலிவியா சோவின் கருத்துப்படி, தினமும் வேலைக்காக TTC-யைப் பயன்படுத்தும் ஒருவர் ஒரு மாதத்தில் சுமார் 44 பயணங்களை மேற்கொள்ளலாம். அதனுடன் சில கூடுதல் பயணங்களைச் சேர்த்தால் 47 பயணங்களின் வரம்பை எட்டிவிடலாம்; அதன் பின்னர் அந்த மாதத்தின் மீதமுள்ள TTC பயணங்கள் இலவசமாகும்.
இந்த fare-capping முறை ஏற்கனவே ஹாமில்டன், யோர்க் பிராந்தியம் மற்றும் ஒட்டாவா உள்ளிட்ட சில பகுதிகளின் பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் நடைமுறையில் உள்ளது.
முக்கிய குறிப்பு: TTC-யின் கட்டண வரம்பும், MiWay, York Region Transit, Brampton Transit, Durham Region Transit போன்ற பிற போக்குவரத்து அமைப்புகளின் கட்டண வரம்புகளும் தனித்தனியாக கணக்கிடப்படும். TTC-யில் தொடங்கும் பயணங்களே TTC-யின் 47 பயண வரம்பில் சேரும்.
செப்டம்பர் 1 முதல்: “47 முறை செலுத்துங்கள் – அதற்குப் பிறகு அந்த மாதம் TTC-யில் இலவசமாகப் பயணம் செய்யுங்கள்” என்ற புதிய முறை டொராண்டோ பயணிகளுக்கு நடைமுறைக்கு வருகிறது.
