Saturday, 29 August 2026
BREAKING NEWS
கனடா தேசிய செய்திகள்

நேபாள வெள்ளப் பேரழிவு: மீட்கப்பட்ட 121 வெளிநாட்டவர்களில் கனடியர்கள் எவரும் இல்லை

ஒட்டாவா: நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை மீட்கப்பட்ட 121 வெளிநாட்டவர்களில் கனடியர்கள் எவரும் இல்லை என நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெள்ளத்தில் காணாமல் போனதாகக் கருதப்படும் கனடியர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமையாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நேபாளத்திற்கு கனடா $5 மில்லியன் அவசர உதவி

பேரழிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசர மனிதாபிமான உதவியாக $5 மில்லியன் கனடிய டொலர்களை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த நிதி செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் அவசர உதவிகளை வழங்க பயன்படுத்தப்படும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.

கனடாவின் Global Affairs Canada அமைப்பு, கனடியர்களுக்கு உதவுவதற்காக ஐந்து தூதரக அதிகாரிகளை காத்மாண்டுவுக்கு அனுப்பியுள்ளது. தேவை ஏற்பட்டால் மேலும் அதிகாரிகள் அனுப்பப்படலாம் என அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

“நேபாளம் மிகப் பேரழிவான மனிதாபிமான அவசரநிலையை எதிர்கொண்டுள்ளது. வீடுகளும் குடும்பங்களும் அழிக்கப்பட்டுள்ளன. மண்சரிவுகள் கிராமங்களையும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளையும் அழித்துள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் 866 கனடியர்கள்

Global Affairs Canada-வின் தகவலின்படி, தற்போது 866 கனடியர்கள் நேபாளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் அவசரநிலை ஏற்படும் போது கனடியர்களைத் தொடர்புகொண்டு உதவி வழங்குவதற்கான இலவச சேவையான Registration of Canadians Abroad திட்டத்தில் பதிவு செய்யுமாறு பிரதமர் மார்க் கார்னி கனடியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

1,924 பேர் காணாமல் போனதாக பதிவு

நேபாள பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் தகவலின்படி, மொத்தம் 1,924 பேர் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களில் பலர் திபெத்தில் உள்ள இந்துக்கள், புத்தமதத்தினர் உள்ளிட்ட பலராலும் புனிதமாகக் கருதப்படும் கைலாஷ் மலையை நோக்கிய யாத்திரையில் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனிப்பாறை சரிவால் பேரழிவு?

காத்மாண்டுவை தளமாகக் கொண்ட International Center for Integrated Mountain Development அமைப்பின் காலநிலை நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, பனிப்பாறையில் ஏற்பட்ட பனிச்சரிவு இந்த திடீர் வெள்ளத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

நேபாளம்–சீனா எல்லையோர இமயமலைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட இந்த பேரழிவில் குறைந்தது 570 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆதாரம்: The Canadian Press / CityNews Toronto

பகிர்: