வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை ,குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்பதனை அரசு வெளிப்படுத்த வேண்டும் .அத்துடன் 1983 ஜூலை இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்த அவர் மேலும் பேசுகையில்,
ஜூலை மாதம் தமிழர்களுக்கு கறுப்பு மாதம்.இந்த மாதத்தில் தான் வெலிக்கடை சிறையில் எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை ,குட்டிமணி உட்பட 58 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் இனவாதம்,இன அழிப்பு ,வன்முறை என்பன வெலிக்கடை சிறையில்தான் ஆரம்பித்தன. இந்த மாதத்தில் இன்றைய நாளான 25 ஆம் திகதி (நேற்று )தான் வெலிக்கடை சிறைப் படுகொலை இடம்பெற்றது.
இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணை இல்லை.சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களை எங்கே புதைத்தார்கள் என்று கூடத் தெரியவில்லை. படுகொலையில் ஈடுபட்டவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. எனவே 1983 ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பித்து 27 ஆம் திகதிவரை நடந்த இனப் படுகொலையை அரசு விசாரணை செய்ய வேண்டும். சிறையில் படுகொலை செய்யப்பட்டவர் எமது தலைவர்களை எங்கே புதைத்தார்கள் என்ற விபரத்தை வெளியிட வேண்டும் என இந்த சபையில் அரசிடம் வேண்டுகின்றேன்.
பிந்துனுவெவ சிறையிலும் 26 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள் .களுத்துறை சிறைப்படுகொலை.இவ்வாறு இந்த நாட்டில் பல இடங்களில் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அதற்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என்றார்.