JVP யினர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர்களை இடதுசாரிக் கொள்கை உடையவர்கள் என்று கூறப்படுகின்ற காரணத்தினால் இன்று அதிகமானோர் இடதுசாரி, வலதுசாரி என்ற வார்த்தையை உச்சரிப்பதுடன், அது எவ்வாறு உருவானது? அவ்வாறு அழைப்பதற்கான காரணம் என்ன என்ற தேடல்களை ஆரம்பித்துள்ளனர்.
பிரெஞ்சு புரட்சியின் போது. 1789–99 காலத்தில் மன்னன் லூயிஸ் XVI ஆட்சியில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவானது. ஆனாலும் அரசுக்கு நெருக்கமானவர்களும், செல்வந்தர்களும் ஆடம்பரமாகவும், செழிப்புடனும் வாழ்ந்தனர்.
மக்கள் அடிமட்ட ஏழைகளாகவும், விவசாய கூலிகளாகவும் இருந்தனர். பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அடிமட்ட ஏழை மக்கள் மீது வரி சுமத்தப்பட்டது. இதனால் மக்கள் ஆட்சிக்கு எதிராக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த கால கட்டத்தில் அரசவை கூட்டப்பட்டது. அரசவையில் வலது புறமாக ஒரு சாராரும், இடது புறமாக ஒரு சாராரும் தனித்தனி கருத்துக்களை முன்வைத்தனர்.
அன்றைய மன்னராட்சியை ஆதரிப்பவர்களும், பழமைவாத கொள்கை உள்ளோரும், செல்வந்தர்களும், பிரபுக்களும் வலது புறமாக இருந்து கருத்துக்களை முன்வைத்தனர்.
சாமானிய மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும், ஏற்றத்தாழ்வுகள் கூடாது, செல்வந்தர்களுக்கு வரி தளர்வு கூடாது, ஆட்சிமுறையில் மாற்றம் வேண்டும், ஒடுக்கப்பட்டோர் சமமாக நடத்தப்பட வேண்டும் போன்ற கருத்துக்களை அவையில் இடது புறமாக இருந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
இதிலிருந்துதான் அரசியலில் இடது, வலது என்ற வார்த்தைகள் உருவானதற்கான காரணமாகும்.
தேசிய உடமை, சமூக உடமை, மக்கள் ஆட்சி அதாவது அனைத்தும் மக்களுக்காகவேயன்றி மன்னர்களுக்காக அல்ல. என்ற கொள்கை உடையவர்கள்தான் இடதுசாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். மார்க்ஸியம், லெனினியம் வலுவடைந்தபோது இடதுசாரி அரசியல் தீவிரமடைந்தது.
ஆனால் இலங்கையில் அதிகமான அரசியல்வாதிகள் பேச்சளவில் தங்களை இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டு நடைமுறையில் வலதுசாரிகளாக செயற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் உலகில் இடதுசாரிக் கொள்கையுடையவர்களில் அதிகமானோர் வலதுசாரிகளுக்குள் உறுஞ்சப்பட்டு காணாமல் போயுள்ளனர்.