நாளை மறுநாள் பௌர்ணமி தொடங்குகிறது. அன்றைய தினம் தோன்றும் நிலவு, சூப்பர் மூனாக(Supermoon) இருக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மட்டுமல்லாது, இந்த பௌர்ணமி, வேட்டையன் பௌர்ணமி(Hunter Moon) என்று அழைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஏன் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
குரங்கிலிருந்து மனிதர்கள் பரிணாமம் அடைந்தபோது, விவசாயம் பிரதானமாக கருதப்பட்டது. ஆனால் எல்லா காலத்திலும், எல்லா பயிர்களும் வளர்ந்துவிடாது. எனவே காலத்தை பார்த்து பயிரிட வேண்டியதை மனிதன் உணர்ந்துக்கொண்டான் . இப்படியாக காலத்தையும், நாட்களையும் மனிதன் பின்பற்ற தொடங்கினான். இதற்கு நிலவுதான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.
ஒரு பௌர்ணமிக்கும் அடுத்த பௌர்ணமிக்கும் இடையே ஏறத்தாழ 30 நாட்கள் இருப்பதை தெரிந்துக்கொண்ட மனிதன், அதை ஒரு மாதமாகவும், 12 முழு நிலவு வந்தால், அதை ஒரு வருடமாகவும் குறித்து வைக்க தொடங்கினான். இப்படித்தான் காலண்டர் உருவானது. ஆனால் எல்லா பௌர்ணமியும் ஒன்று போலவே இருப்பதில்லை என்பதை பின்னாட்களில் மனிதர்கள் கவனிக்க தொடங்கினர். அதாவது சில குறிப்பிட்ட பௌர்ணமியில் வரும் நிலவுகள், மற்ற முழு நிலவு நாட்களை விட அதிக வெளிச்சமாக இருப்பதை தெரிந்துக்கொண்டனர்.
இதை சூப்பர் மூன் என்றும் அழைக்க தொடங்கினர். வழக்கமாக நிலவு பூமியை சுற்றி வரும். இந்த சுற்று வட்டபாதையில், பூமிக்கு நெருக்கமாக நிலவு வரும்போது, பௌர்ணமி வந்தால், நிலவு இயல்பை விட 14% பெரியதாகவும், 30% அதிக ஒளியுடனும் இருக்கும். இதுதான் சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்தம் மூன்று சூப்பர் மூன் நிகழ்வுகள் இருக்கின்றன. இதில் 2 முடிந்துவிட்டது. நாளை, அதாவது அக்டோபர் மாதம் 17ம் தேதி வரும் முழு நிலவு, ஆண்டின் மூன்றாவது சூப்பர் மூன் ஆகும்.
இதனை வேட்டையன் நிலவு என்றும் அழைக்கிறார்கள். அதாவது, பழங்காலத்தில் மனிதர்கள் இந்த சூப்பர் மூன் நாட்களில் வேட்டைக்கு செல்வார்களாம். இது குளிர்காலம் எனவே உடலுக்கு கொழுப்பு சத்து நிறைந்த உணவு அவசியமாகிறது. பகலில் வேட்டையாடினால் இரை தப்பிக்க வாய்ப்பு அதிகம். எனவே, இரவில் வேட்டையாட இந்த பௌர்ணமியை முன்னோர் பயன்படுத்தியுள்ளனர். மேலே சொன்னதை போல இந்த இரவில் வெளிச்சம் அதிகமாக இருக்கும் என்பதால் வேட்டையாட கொஞ்சம் வசதியாகவும் இருக்கும்.
எனவேதான் இதனை வேட்டையன் பௌர்ணமி(Hunter Moon) என்றும் குறிப்பிடுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை 17ம் தேதி மாலை 4.56லிருந்து நிலவு தெரிய தொடங்கிவிடும் என்று நாசா கூறியுள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதால் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். எனவே நிலவை காண்பது சற்று கடினம். இருப்பினும் உள்தமிழக மாவட்டங்களில் நிலவை தெளிவாக பார்க்க வாய்ப்பு இருக்கிறது.