காசா மருத்துவமனையின் வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலையும், அக்கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததையும் நேரில் பார்த்த ஒருவர், அந்த பயங்கர சம்பவத்தையும், மக்கள் கொல்லப்பட்டதை - காயமடைந்ததை பார்த்ததையும், அவ்வேளை ஏதும் செய்ய இயலாமல் தான் தவித்த அனுபவத்தையும் பிபிசியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
நான் பார்த்த மிக மோசமான காட்சி இது என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததும் அதிலிருந்து தப்புவதற்காக மக்கள் அதனை கிழித்து எறிந்ததையும் அலறியதையும் பார்த்ததாக யுவதியொருவர் தெரிவித்துள்ளார்.
தீயில் எரிந்து உயிரிழந்தவர்களை காப்பாற்ற முடியாததால் நான் கண்ணீர் விட்டு கதறியழுதேன் என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை இஸ்ரேல் மத்திய காசாவின் டெய்ர்அல்பலா வளாகத்தில் உள்ள அல்அக்சா மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்தன.
நால்வர் கொல்லப்பட்டனர். பெருமளவு சிறுவர்களும் பெண்களும் காயமடைந்தனர் என ஹமாஸின் மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
நபரொருவர் தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை காண்பிக்கும் வீடியோவை பிபிசி ஆராய்ந்து உறுதி செய்துள்ளது.
கதறல்கள், வெடிப்புச் சத்தங்களுக்கு மத்தியில் தீயை அணைப்பதற்காக மக்கள் ஓடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கார் தரிப்பிடமொன்றுக்குள் காணப்பட்ட தளமொன்றிலிருந்து செயற்பட்ட ஹமாஸ் உறுப்பினர்களையே இலக்குவைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தீப்பிடித்திருக்கலாம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அந்த பகுதியில் செயற்பட்டதாக அறியவில்லை. அது மருத்துவமனை போன்றே இயங்கியது என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அதன் பணியாளர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
அங்கிருந்த மக்கள் தீயில் சிக்கி எரிந்து உயிரிழந்தார்கள் என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான முகவர் அமைப்பு தெரிவித்துள்ள அதேவேளை வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் வெளியாகியுள்ள காட்சிகள் மனதை உலுக்குகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலின் பின்னர் பொதுமக்கள் உயிருடன் தீப்பிடித்து எரிவதை காண்பிக்கும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன. இஸ்ரேலுக்கு இது குறித்த எங்கள் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளோம் என சிபிஎஸ்ஸுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கவேண்டிய தேவை இஸ்ரேலுக்குள்ளது. இங்கு இடம்பெற்ற சம்பவம் மிகவும் பயங்கரமானது. ஹமாஸ் அப்பகுதியில் செயற்பட்டிருந்தாலும் கூட இது பயங்கரமானது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநோயாளர்கள் காத்திருக்கும் பிரிவுக்கு வெளியே காணப்பட்ட பல தற்காலிக கூடாரங்களை இஸ்ரேல் தாக்கியது என காசாவுக்கான எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனா ஹல்போர்ட் தெரிவித்துள்ளார்.
பாரிய வெடிப்புச்சத்தங்களை கேட்டு நான் உறக்கத்திலிருந்து கண்விழித்தேன். கூடாரங்களை சுற்றி தீ பரவிக்கொண்டிருந்தது என தற்காலிக கூடாரங்களில் வசித்த தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எல்லா பக்கத்திலும் வெடிப்புகள் இடம்பெற்றன. அது வாயுவா அல்லது வெடிகுண்டா என நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
நான் என் வாழ்க்கையில் பார்த்த மோசமான காட்சிகள் இவை என தெரிவித்துள்ள அவர் நாங்கள் இதுபோன்ற அழிவை ஒருபோதும் பார்த்ததில்லை என்றார்.
பிபிசி ஆராய்ந்து உறுதி செய்துள்ள சில வீடியோக்களை படம் பிடித்த புகைப்படப் பிடிப்பாளர் அட்டியா டார்விஸ் அது மிகப் பெரும் அதிர்ச்சி. மக்கள் எரிவதை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
நான் மிகவும் மனமுடைந்து போனேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பலர் தீயில் சிக்குண்டு எரிவதை, உயிருடன் எரியும் கோரக் காட்சியை பார்த்தோம். நாங்களும் எரியுண்டுபோவோம் என நினைத்தோம் என மருத்துவமனையில் வசிக்கும் உம் யாசெர் அப்தெல் ஹமீட் டஹெர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் அவரின் மகனும் ஒருவர். மகனது மனைவியும் குழந்தையும் காயமடைந்துள்ளனர். இவரின் 11 வயது பேரப்பிள்ளை லினாவின் காலிலும் கையிலும் குண்டுச்சிதறல்கள் உள்ளன. மக்கள் அலறுவதை நான் கேட்டேன் என அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.