தமிழ் மக்களுக்கு எந்தவொரு இடையூறுமின்றி சேவை செய்வதற்கு கட்டாயம் அரசியல் தேவைப்படுகிறது. அதற்காக இந்த தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைப்பினர் சுயேச்சைக்குழு இல. 11இல் போட்டியிடுகிறோம். எனவே, தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் மக்களுக்கான சமூக சேவையை தொடர்ந்து எமது அமைப்பு செய்துவரும் என சுயேச்சைக் குழு - 11இல் தாயக்கட்டை சின்னத்தில் போட்டியிடும் பொன்னுத்துரை சுதர்சன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெஸ்ஒப் மீடியாவில் இன்று புதன்கிழமை (16) நடைபெற்ற சுயேச்சைக் குழு 11 வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொன்னுத்துரை சுதர்சன் தலைமையில் சிங்கராசா மதவாணன், செல்வராசா அமுதினி, சாமித்தம்பி வேலாயுதம், சிவலிங்கம் லோகேஸ்வரன், அமரசிங்கம் வினாயகமூர்த்தி, குணராசா ஜெகதீஸ்வரன், நித்தியானந்தன் நிமல்ராஜ் ஆகிய 8 பேர் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். இவர்களில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்விமான்கள், இளைஞர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
மேற்படி நிகழ்வில் உரையாடிய பொன்னுத்துரை சுதர்சன் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாண மாவட்டத்திலே தமிழ் கொடி அமைப்பு ஊடாக சமூக சேவை செய்துகொண்டிருந்த சகோதரி ஒருவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களாக சிறையில் இருந்தார். ஆகவே, சமூக சேவையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்ததன் காரணமாக அதற்கு எந்தவொரு இடையூறுமின்றி மக்களுக்கு சேவை செய்வதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
இலங்கையை பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதியில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சமூக சேவையினை திறன்பட கல்வி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற சகல வகைகளிலும் எமது சமூக மக்களை முன்னேற்றுவதற்காக இலங்கையிலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் செயற்பாட்டாளர்கள், உதவி செயற்பாட்டாளர்கள், ஊழியர்கள் போன்ற ஒரு கட்டமைப்பினை அடிப்படையாக வைத்து திறம்பட சேவை செய்துவருகிறோம்.
இதன் காரணமாக சமூக அமைப்பாக மக்கள் மனதில் குடிகொண்ட அமைப்பு தற்பொழுது அரசியல் களத்திலே களமிறங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அது மக்களுக்கு சிறந்த ஊழல் அற்ற சமூக சேவையை செய்வதற்காக அரசியலில் இறங்கியுள்ளோம். எனவே, மக்கள் உங்கள் ஆதரவை வழங்குங்கள் என அன்புடன் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.