Bootstrap

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மைச் சமூகங்கள் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க,  50% + 1 வாக்குகளைப் பெறாவிட்டாலும், அதில் வெற்றிபெற்று இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு வந்திருக்கிறார். முன்னைய ஜனாதிபதி தேர்தல்களில் செய்ததைப் போன்றே இந்த தடவையும் தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றிபெறாத வேட்பாளருக்கே சென்றன.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாவட்டங்களில் எந்த ஒன்றிலும் திசாநாயக்க வெற்றிபெறவில்லை. இந்த விடயம் பற்றி  குறிப்பாக சமூக ஊடகங்களில் பல கருத்துக்களும் விமர்சனங்களும் வெளியாகின்றன. இந்த கருந்துரையாளர்கள் உணர்ச்சிபூர்வமான இந்த பிரச்சினை குறித்து  பெரும்பாலும் அரசியல் குறித்து ஆழமான புரிதலின்றி திடீர் உணர்ச்சிக்கு ஆட்பட்டு கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.

சிங்களவர்களும் தமிழர்களும் வேறுபட்ட முறையில் வாக்களிப்பதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் முகங்கொடுக்கின்ற சமூக - அரசியல் பிரச்சினைகள் வேறுபட்டவையாக இருப்பதேயாகும். தமிழ் மக்களும்  சிங்கள மக்களும்  வேறுபட்ட பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறுபட்ட கருத்துக்களையும் அபிலாசைகளையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஊழல், துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடுகள் தமிழர்களின் அரசியல் அக்கறைக்குரியவை இல்லை. ஊழலையும் மோசடிகளையும்  ஒழித்துவிட்டால் தமிழர்களின் வாழ்க்கை நிலைமைகளிலோ அல்லது அரசியல் அபிலாசைகளிலோ மாற்றம் வந்துவிடப் போவதில்லை.

ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரை, நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே ஊழலும் மோசடிகளும் குடும்ப ஆதிக்க அரசியலுமே முக்கியமான சாபக்கேடாக இருந்து வருகிறது. இதுவரையான காலப்பகுதியில் மக்கள் ஊழல்தனமான  அரசியல்வாதிகளின் வெவ்வேறு முகாம்களுக்கே வாக்களித்து வந்தார்கள். ஒரு முகாமை விடவும் மற்றைய முகாம் சிறப்பாகச் செயற்படும் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். அந்த முகாம்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அதிகாரத்துக்கு வந்தபோது தங்களுக்கு சொத்துக்களைக் குவித்ததுடன் எதிரணியில் இருந்தவர்களையும் பாதுகாத்தார்கள்.

இந்த அரசியல்வாதிகள் வாக்குகளைக் கைப்பற்றுவதற்காக இனவாதத்தைப் பயன்படுத்தினார்கள். 2015 ஆம் ஆண்டில் இருந்து மக்கள் மாற்றத்துக்காக குறிப்பாக ஊழலற்ற அரசொன்றுக்காக வாக்களித்தார்கள்.  2015 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் நல்லாட்சி சுலோகத்தை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டார்கள். மக்களும் அவர்களை நம்பி வாக்களித்தார்கள். அதற்கு பிறகு மக்கள் கோட்டாபய ராஜபக்ச இயல்பான அரசியல்வாதி இல்லை என்பதால் அவருக்கு வாக்களித்தார்கள். தாங்கள் விரும்பிய மாற்றத்தை அவர் கொண்டுவருவார் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால் இறுதியில் அந்த இரு அரசாங்கங்களுமே தங்களது ஊழல் சகாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்தியை மீட்பாராகக் கருதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) இந்தியாவுக்கும் அதிகாரப்பரவலாக்கத்துக்கும் எதிரான உணர்வுகளைக் கொண்ட ஒரு கடந்த காலத்தையுடையது. சட்ட நடவடிக்கை ஊடாக ஜே.வி.பி.யே வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு துண்டிக்கப்படுவதையும்  அவற்றின்  தனியான ஒரு மாகாணசபை   அந்தஸ்து இல்லாமல் செய்யப்படுவதையும்  உறுதிசெய்தது.

சுதந்திரத்துக்கு பிறகு இலங்கை அரசாங்கம் ஒன்று இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுத்திருக்கக்கூடிய ஒரேயொரு அர்த்தபுஷ்டியானதும் நேர்மறையானதுமான அரசியல் நடவடிக்கை என்றால் அது வடக்கு - கிழக்கு இணைப்பேயாகும். அநுர குமார திசாநாயக்கவின் மின்னல்வேக எழுச்சியும் கூட ஒரளவுக்கு 13 வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிரான அவரின் எதிர்ப்பின் விளைவானதே என்று கூறலாம். சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட  சுனாமிக்கு பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்புக்கு ( Post - Tsunami Operational Management Structure -- PTOMS ) எதிரான ஜே.வி.பி.யின் நிலைப்பாடு நன்கு தெரிந்ததே.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது எந்த இடத்திலும் தேசிய மக்கள் சக்தி  தமிழர்களினதோ அல்லது முஸ்லிம்களினதோ அரசியல் அபிலாசைளை அல்லது மனக்குறைகளை பற்றி பேசியதில்லை. பிரசாரங்களின் ஆரம்பக்கட்டத்தில், சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் முதன்மையான அந்தஸ்தை வழங்குகின்ற அரசியலமைப்பின் பிரிவுகளை தேசிய மக்கள் சக்தி இல்லாமற்செய்யும் என்ற ஒரு சர்ச்சை தோன்றியது.

ஆனால், புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்காக கூட்டப்பட்ட அரசியலயைப்புச் சபையின் ( Constitutional Assembly ) கூட்டங்களில் அரசியலமைப்பின் 8 வது சரத்து குறித்து எதுவும் பேசப்பட்டதில்லை என்று கூறி ஒரு கட்டத்தில் அதை திசாநாயக்கவே நிராகரித்தார். எனவே அந்த கருத்து தொடர்ந்து இருக்கும். மத விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சராக பதவியேற்றபோது விஜித ஹேரத்தும் அந்த நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

சகல இனங்களும் மதங்களும் சமத்துவமானவை என்றும் சகலரும் சமத்துவமான குடிமக்களாக நடத்தப்படுவர் என்றும் மாத்திரமே திசாநாயக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் கூறினார். போரின் முடிவில் மகிந்த ராஜபக்சவும்  தனது பதவியேற்பு உரையில் கோட்டாபய ராஜபக்சவும் அதையே கூறினர். பல்கலாசார நாடொன்றில்  மக்களுக்கு இடையிலான இனத்துவ மற்றும் கலாசார வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு  அரசியலமைப்பு மற்றும் சட்டச்செயன்முறைகள் ஊடாக சமத்துவத்தை உறுதிப்படுத்துவதும்  சகல குடிமக்களும் சமத்துவமானவர்களாக இருப்பதற்கு தேவையான  சூழ்நிலை ஏற்படும் என்று கருதுவதும் வேறுபட்ட இரு விடயங்கள்.

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சமத்துவமானவர்களாக நடத்தப்படவேண்டும் என்பதையே தேசிய மக்கள் சக்தி உண்மையாக  விரும்புவதாக இருக்கலாம். அவ்வாறு கூறுவதில்  அவர்கள் நேர்மையானவர்களாகவும் இருக்கலாம். ஆனால், சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசியல் கட்டமைப்பு ஒன்று இல்லாத பட்சத்தில் ஒரு தனிநபரின் எண்ணமோ அல்லது ஒரு கட்சியின் கோட்பாடோ காலத்தின் சோதனைக்கு தாக்குப்பிடிக்கப் போவதில்லை.

தேசிய மக்கள் சக்தி உண்மையான அக்கறையுடையதாக இருந்தால் அவர்கள் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்கவேண்டும். அதைச் செய்வதற்கு போதுமான துணிவாற்றல் இல்லாத பட்சத்தில் அவர்களது பேச்சுக்களினால் எந்த பயனும் இல்லை. இத்தகைய பின்புலத்தில் , அநுர குமார திசாநாயக்கவுக்கு தமிழர்கள் அமோகமாக வாக்களிக்கவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்குை ஒன்றுமில்லை.

தமிழர்களின் நிலைப்பாடு

”தமிழ்த் தேசியவாதக் கோட்பாடு“  ஒரு  ' அரசியல் ஆயுதமாக ' வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானவர்களினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை இந்த ஜனாதிபதி தேர்தல் மீண்டும் ஒரு தடவை வெளிக்காட்டியிருக்கிறது. பொதுத் தமிழ் வேட்பாளரின் தோல்வி இதை தெளிவுபடுத்துகிறது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் " தமிழ்த்தேசிய பெ்துக்கட்டமைப்பு " பொதுத் தமிழ் வேட்பாளரரை களமிறக்கியது. தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து அவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள் என்பதையும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கான அரசியல் விருப்பாற்றல்  இலங்கை அரசாங்கங்களுக்கு இல்லை என்பதை உலகிற்கு காண்பிப்பதுமே பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதன் நோக்கம் என்றால் அது வெற்றிபெறவில்லை.

பொதுத் தமிழ் வேட்பாளர் தமிழ் மாவட்டக்களில் எந்தவொன்றிலுமே  முதலாவது இடத்துக்கு வரவில்லை. யாழ்ப்பாணத்தில் கூட இரண்டாவது இடத்தை மாத்திரமே அவரால் பெறக்கூடியதாக இருந்தது. இதே போன்ற ஒரு முடிவையே 2015 பாராளுமன்ற  தேர்தலிலும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு தீவிரவாத நிலைப்பாட்டை முன்வைத்து தமிழ் மக்களிடம் வாக்குக்கேட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஒரு ஆசனத்தைக் கூட பெறமுடியவில்லை.

இந்த முடிவுகள் எல்லாம் தமிழ் அரசியல்வாதிகள் அரசியலில் தாங்கள் தப்பிப்பிழைப்பதற்காக '  தமிழ்த் தேசியவாதத்தை ' பயன்படுத்துவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கயையும் பிரச்சினைகளையும் புறக்கணித்து,  தேர்தல்கள் நெருங்கும்போது உணர்ச்சிகளை கிளப்பிவிடுவதற்கு " தமிழ்த் தேசியவாத" வெற்று ஆரவார உரைகளை  நிகழ்த்துகின்ற ஒரு சூழ்நிலை ஒன்றை பாரம்பரியமான தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் உருவாக்கியிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் சந்தர்ப்பவாத " அரசியல் வர்த்தகர்களுக்கு " ஒரு புகலிடமாக மாறிவிட்டன. " உணர்ச்சிகளைக் கிளறும் அரசியலின் " பலியாட்களாக சிறுபான்மைச் சமூகங்கள் மாறிவிட்டன.

இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மைச் சமூகத்தைச் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்களுடன்  சமத்துவமானவர்களாக அமைதியாக கௌரவத்துடன் வாழவிரும்புகிறார்கள். இது வெறுமனே ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. ஒரு சமூக - அரசியல் பிரச்சினையாகும். சட்டரீீதியான ஆதாரத்துடன் கூடிய அரசியல் கட்டமைப்பு இல்லாதபோது  தங்கள் இருப்புக்காக அரசியல்வாதிகள்  பயன்படுத்துகின்ற ஒரு மிதிபலகையாக இது மாறுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.

அநுர எதிர்நோக்கும் சவால்கள்

தேசிய மக்கள் சக்தி எதிர்நோக்கும் சவால்கள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியுடன் முடிவடைவதில்லை    உண்மையான சவால்கள் அங்குதான் தொடங்குகின்றன.  இந்த வெற்றி எழுபது வருடகால ஊழல் அரசியலை அனுபவித்த மக்கள் தேக்கி வைத்திருந்த வெறுப்பின் ஒரு பிரதிபலிப்பேயாகும். 2015 ஆம் ஆண்டு முதல் மக்கள் ஒரு மாற்றத்துக்காக வாக்களித்து வந்திருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே  ஊழல் எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில்  முக்கியமான காரணி இல்லை. பொருளாதார நெருக்கடியின் ஊடாக வெற்றிகரமாக நாட்டை வழிநடத்துவதும் உறுதியான ஒரு  பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுமே ஜனாதிபதி திசாநாயக்கவுக்கான பிரதான சவாலாகும்.

இந்த பயணத்துக்கு தயாராவதற்கான பரீட்சைக்களமாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் அமையப் போகின்றது.சிக்கல் இல்லாமல் சீரான முறையில் பணியாற்றுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு ஒரு பாராளுமன்றப் பெரும்பான்மை தேவை. தேர்தல்களுக்கு பிறகு ஏனைய முக்கிய கட்சிகள் அவற்றின் சொந்த அரசியல் எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கு சேர்ந்து பணியாற்றும். ஏனைய கட்சிகளைப் போலன்றி  மிகவும் உறுதியான தேர்தல் தொகுதி / மாவட்ட அடிப்படையிலான தலைமைத்துவம் ஒன்று இல்லாமல் இருப்பது தேசிய மக்கள் சக்தி எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும்.

கோட்டாபய ராஜபக்ச 2019 ஜனாதிபதி தேர்தலில் 16 மாவட்டங்களில் வெற்றிபெற்றார். அவற்றில் 15 மாவட்டங்களில் அவர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். நான்கு மாவட்டங்களில் அவர் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இந்த தடவை திசாநாயக்க 15 மாவட்டங்களில் வெற்றிபெற்ற அதேவேளை அவற்றில் நான்கு மாவட்டங்களில் மாத்திரமே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். எதிலுமே 60 சதவீதமான வாக்குகளைப் பெறவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கும்போது அரசாங்கத்தை அமைப்பதற்கான  சாதாரண பெரும்பான்மையை பெறுவது தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சவாலாக இருக்கப்போகிறது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் அரசியல் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு பல்வேறு திட்டங்களை வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை  பிரதான அரசியல் கட்சிகள் அல்லாதவை ஒரு கணிசமான எண்ணிக்கையில் ஆசனங்களைப் பெறத்தவறினால்  அவற்றின் எதிர்கால இருப்பு நிச்சயமற்றதாக வந்துவிடும்.  ஆனால் தேர்தல் வெற்றிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தியும் ஜனாதிபதியும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றுவதை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஊழலை ஒழித்துக்கட்டி சிறந்த சமூகச் சூழ்நிலையை உருவாக்குவதற்கும்  நல்லாட்சியை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை  எடுப்பதில் ஏனைய முன்னைய அரசாங்கங்களில் எந்த ஒன்றையும் விட பெருமளவுக்கு சிறப்பான முறையில்  தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் செயற்படும் என்பதில் சந்தேகமில்லை. சட்டவிரோத செயல்களுக்காக அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களை பொறுப்புக்கூற வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இப்போது இருக்கிறது. இதுவரை காலமும் அரசியல்வாதிகளும் ஏன் அவர்களின் ஆதரவாளர்களும் கூட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு அவற்றின் விளைவுகளுக்கு முகங்கொடுக்காமல் தப்பிச் செல்லக் கூடியதாக இருந்தது.

ஜனாதிபதியும் அவரது பொருளாதார ஆலோசகர்களும் உகந்த முறையில் பொருளாதாரத்தை முகாமை செய்து பொருளாதார மீட்சியை நோக்கி எம்மை வழிநடத்துவார்களாக இருந்தால் நாளடைவில் ஏனைய அரசியல் கட்சிகள் பொருத்தமற்றவையாக மாறிவிடக்கூடும். இந்த சாத்தியப்பாடு அந்த கட்சிகளை பொறுத்தவரை அவற்றின் இருப்புக்கான ஒரு போராட்டமாக பாராளுமன்ற தேர்லை மற்ற்றியிருக்கிறது.

சிறுபான்மைக் கட்சிகள் உட்பட இலங்கையில் உள்ள சகல பிரதான கட்சிகளும் மிகவும் உறுதியற்றவையாகவும் மக்களாால் நிராகரிக்கப்படுகின்றவையாகவும் மாறியிருக்கின்றன. பிரதான கட்சிகள் எதிர்வரும் தேர்தலுக்காக கூட்டணிகளை அமைப்பதில் நாட்டம் காட்டின.

தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் தங்களது அரசியல் தந்திரோபாயத்தை மாற்றியமைத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின  பாராளுமன்ற உறுதிப்பாட்டை உத்தரவாதம் செய்யவேண்டியது அவசியமாகும். ஏனைய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஊழல்தனமான அரசியல்வாதிகளுடன்  தேசிய மக்கள் சக்தி கைகோர்ப்பது சாத்தியமில்லை. அதனால் சிறுபான்மைக் குழுக்களிடமிருந்து நம்பகமான பங்காளிகளை அவர்கள் கண்டுபிடிக்கவேண்டியிருக்கும்.

சிறுபான்மைக் குழுக்கள் மத்தியில் ஐக்கியத்தையும் கலாசார வேறுபாடுகளின் தனித்துவத்தையும் பேணுவதற்கு இனத்துவ மற்றும் மத அடையாளங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியது  இன்றியமையாததாகும். ஆனால் இது அரசியல்வாதிகளின் அல்லது அரசியல் கட்சிகளின் இருப்பை உறுதிசெய்வதற்கான ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படக் கூடாது. புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு புதிய மூலோபாயங்களைக் கடைப்பிடிக்கக்கூடிய புதிய அரசியல் தலைவர்கள் எமக்கு தேவை.

பெரும்பான்மைச் சமூகத்தின் மதத்துக்கும் மொழிக்கும் ஒரு விசேட அந்தஸ்தை வழங்குகின்ற அரசியலமைப்பைக் கொண்ட இலங்கை போன்ற ஒரு நாட்டில் இனத்துவ குழுக்களுக்கும்  மத ரீதியான  குழுக்களுக்கும்  அவற்றின் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும்.  இந்த சூழ்நிலை பெரும்பாலும் தனியான ஒரு அரசியல் விவாதத்தை வேண்டிநிற்கிறது.

பல வருடகால மோதல் அரசியலைக் கடந்துவந்த பிறகு எமது அரசியல் அடையாளதனதைப் மேணுகின்ற அதேவேளை, அபிவிருத்திச் செயன்முறைகளின் ஊடாக எமது மக்களின் சமூக -  பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்துவதற்கு அதிகாரத்தில் இருக்கும் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.

ஒன்றுசேர்ந்து செயற்படுவதற்கான இந்த செயன்முறையில் விட்டுக்கொடுப்பு அவசியமாகும். நல்லெண்ணமும் பரஸ்பர மதிப்பும் புரிந்துணர்வும் இருக்குமானால்,  பிரகாசமான எதிர்காலம் ஒன்றை நம்பிக்கையுடன் எம்மால் நோக்கமுடியும்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural Newspaper Canada is the first human rights-focused newspaper launched from abroad to serve the Sri Lankan Tamil community. Based in Canada, it aims to highlight human rights issues, political developments, and social challenges faced by Sri Lankan Tamils, both in Sri Lanka and the diaspora. By amplifying marginalized voices, it seeks to foster dialogue and advocate for justice, while offering a platform for critical news, opinions, and analysis from a Tamil perspective.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc