ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதக் காலப்பகுதிக்குள் இலங்கையினால் மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் ‘வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையை கையாளுங்கள் என்ற பரிந்துரையை அநுரகுமார அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?
ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தீவைச் சூழ அமைந்துள்ள கடற்பரப்பு நாட்டுக்கு கிடைத்துள்ள அருங்கொடையாக பார்க்கப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல ஆண்டுகளாக இலங்கைக்கு நெருக்கடி நிலைமையை தோற்றுவித்துள்ள இலங்கை - இந்திய மீனவர் விவகாரத்துக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமல் உள்ளது.
கடந்த வருடம் கச்சதீவு விவகாரம் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில் அதனோடு இணைந்ததாக தற்போது மீண்டும் இந்த மீன்பிடி விவகாரமும் தலைதூக்கியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையில் ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் கடந்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த சந்திப்பில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில் கவலை வெளியிட்டிருந்தார். குறிப்பாக இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென தெரிவித்திருந்த அவர், இந்திய மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகூடிய அபராதம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேநேரம் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்த மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையானது இந்த விவகாரத்தை தீர்த்து வைப்பதற்கான சிறந்த உத்தியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீன்பிடித்துறை, மீனவர் சங்கங்கள் குறித்த கூட்டுப்பணிக் குழுக்கூட்டம் உரிய காலத்தில் நடத்தப்படும் என உறுதியளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், கடந்த 4ஆம் திகதி 50 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பில் அயலுறவுக்கு முதலிடம் மற்றும் சாகர் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்பு நிலைநிறுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் பணித்திட்டங்கள் ஊடாக இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்ற அபிவிருத்தி சார் உதவிகள் தொடரும் எனவும் உறுதியளித்திருந்தமையானது இலங்கை மீதான இந்தியாவின் கண்ணோட்டத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடரும் என்பது உறுதியாகிறது. அதற்கு இலங்கையின் அமைவிடமே முக்கிய காரணியாக அமைந்திருப்பதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த விடயத்தில் கடந்த கால அரசாங்கங்களையும் கடுமையாக விமர்சித்திருந்தது. இந்நிலையில் மீன்பிடி விவகாரத்தில் இந்த அரசாங்கத்தின் நகர்வு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கை ஆரம்பகாலம் முதல் கடந்த 2002 மற்றும் 2022 ஆகிய காலப்பகுதிகளில் முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடிகளின்போது இந்தியாவே நாட்டுக்கு கைகொடுத்து உதவியது.
இந்நிலையில் மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு பின்னர் இலங்கையின் வடபகுதியில் தென்னிந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. ஆனால், இந்த விடயத்தை இரு நாடுகளுமே மெளனமாக கடந்து செல்கின்ற விதமானது இரு நாட்டு நட்புறவை தக்கவைத்துக்கொள்வதற்கான காய்நகர்த்தலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கையின் நிலப்பரப்பை விட 8 மடங்கு மிகப்பெரிய கடற்பரப்பும் மீன்வளமும் கொண்ட இலங்கைத் தீவின் கடற்பரப்பு இந்திய மீனவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் விவகாரத்தில் இரு நாட்டு மீனவ சமூகங்களும் வாழ்வாதார ரீதியில் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி பிரயோகங்களால் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு இந்திய, இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
அதேநேரம் இலங்கை கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது. இதன்போது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான டொலர் உள்வருகையை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் இலங்கையின் மீன் வளம் மிக முக்கியமானது என துறைசார் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், இந்த விடயத்தில் இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இந்திய அரசாங்கங்களுடன் சுமுகமான ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்குரிய காய்நகர்த்தல்களை மேற்கொள்ளவில்லை.
குறிப்பாக இந்த விவகாரத்தில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு மதிப்பீட்டு கணிப்பீடுகள் இதுவரை எமது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
இலங்கையின் கடல்வளத்தை ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் உரியவாறு பயன்படுத்தியிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு இந்தத் துறை மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக அமைந்துள்ளது.
இழுவை மடிப்படகுகள் இலங்கையில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் இவற்றை பயன்படுத்துவதால் மீன்களின் இருப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களாலும் சமூக ஆய்வாளர்களாலும் கல்விமான்களாலும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்ற போதிலும் இது தொடர்பில் இலங்கையின் கடந்த அரசாங்கங்கள் மெளனம் காத்து வந்துள்ளன. அவ்வப்போது இந்த விடயத்துக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பும் வேளைகளில் இந்திய மீனவர் கைது சம்பவங்களும் இழுவைப்படகுகள் பறிமுதல் செய்யும் சம்பவங்களும் மாத்திரம் நடந்தேறுகின்றன.
இலங்கையில் நடந்தேறிய மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மாத்திரமன்றி இலங்கை மீனவர்களுக்கும் மீன்பிடிக்க முடியாமல்போனமையானது குறித்த பகுதிகளில் மீன்வளம் பெருக்கமடைய வழிகோலியது. இதனால் யுத்தம் நிறைவடைந்த கையோடு தென்னிந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இந்த விடயத்தில் அப்போது அதிகாரத்திலிருந்த அரசாங்கம் அறிந்தும் அறியாததைப்போன்று நடந்துகொண்டதன் விளைவாகவே இன்று இந்த மீனவர் விவகாரம் தலைதூக்கியுள்ளது என துறைசார் நிபுணர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மீன் இறக்குமதியில் ஆர்வம் காட்டும் இலங்கை
மிகப்பெரிய கடல்வளத்தைக் கொண்டுள்ள இலங்கை வெளிநாடுகளிலிருந்தே மீன்களை இறக்குமதி செய்கிறது. ஆனால் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கங்கள் இதுவரை காலமும் மெளனம் சாதித்து வருகின்றன.
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதிக்குள் இலங்கையினால் 39 பில்லியன் மெட்ரிக் தொன் மீன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சின் தரவுகளுக்கு அமைய மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதன் டொலர் பெறுமதி 80 மில்லியனாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் வருடாந்தம் இலங்கை 900 பில்லியன் ரூபாய் பெறுமதியான மீன்வளத்தை இந்தியா சூறையாடுவதாக வடமாகாண கடற்றொழில் இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்
இந்திய மீனவர்களது அத்துமீறலால் கடற்றொழிலை நம்பி வாழ்ந்துவரும் உள்நாட்டு மீனவக் குடும்பங்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒருதரப்பாக இந்த மீனவ சமூகம் காணப்படுகிறது.
இது தொடர்பில் கடந்த காலங்களில் இந்த விவகாரம் சூடுபிடித்தபோது இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் நடுக்கடலில் பேச்சுவார்த்தை என்றார்கள், இந்திய நாட்டு மீனவப் படகுகளுக்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி வழங்கப்போவதாக தெரிவித்தனர்.
ஆனால் இவை அனைத்தும் பெயரளவிலேயே நடந்தேறின. இந்திய மீனவர்களின் அத்துமீறலால் நாட்டின் மீன் வளம் மாத்திரமன்றி மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வலைகளையும் அறுத்துச் செல்கின்றனர். அதேநேரம் இழுவை மடிப்படகுகளால் மீன்களின் இனப்பெருக்கம் படிப்படியாக அழிக்கப்படுகிறது.
இதன் விளைவாக இலங்கையின் கடல்வளம் அழிக்கப்படும் அபாயம் நிலவுவதாக துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இருநாட்டு மீனவர்களையும் நடுக்கடலில் மோதவிட்டு இலங்கை அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காலத்துக்குக் காலம் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்ந்தும் நடந்தேறுவதுடன் பரிதாப உயிரிழப்புக்களும் பதிவாகின்றன.
காங்கேசன்துறை கடற்பரப்பில் அண்மையில் இழுவை மடிப்படகு மோதியதில் காயமடைந்த கடற்படை வீரர் அண்மையில் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தது. அதேநேரம் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் 29ஆம் திகதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 4 வருடங்களுக்குள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 1143 இந்திய மீனவர்களும் 157 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் வேடிக்கை என்னவெனில், இந்திய மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் எவ்விதமான மதிப்பீடுகளையும் மேற்கொள்வதற்கு இதுவரை ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான்.
அதேநேரம் இலங்கையின் கடல்வள பயன்பாட்டுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் போதிய நிதி கூட ஒதுக்கப்படுவதில்லை எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கடல் வளத்தை இலங்கை சரியாக பயன்படுத்தியிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியிருக்க முடியும் என்பதே துறைசார் நிபுணர்களின் பரிந்துரையாகவுள்ளது.