ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்ணியாகும். அதற்கு பலமான ஆணையை வழங்க வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் கோரியுள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போரின் பின்னரான சூழலில் தமிழ் மக்கள் ஒற்றுமையை மையப்படுத்தியே தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். அந்த வகையில் தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக நாம் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
இந்தக் கூட்டணியில் குறைகள் நிறைகள் இருந்தாலும் கூட, தமிழ் மக்களின் விருப்புக்கு அமைவாகவும், அவர்களின் அபிலாஷைகளைப் அடைந்துகொள்வதற்காகவும் இணைந்து செயற்படும் முக்கியமானதொரு அரசியல் சக்தியாக இருக்கின்றமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு விடயமாகும்.
எமது கூட்டினை பலவீனப்படுத்துவதற்கு அண்மைய நாட்களில் எதிர்மறையான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தமிழ் மக்கள் யதார்த்தத்தினை நன்கு அறிவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
அந்த வகையில், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. திருப்புமுனையை ஏற்படுத்துவதாகவே இருக்கப்போகிறது.
ஆகவே, தமிழ் மக்கள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை பலப்படுத்துவதன் ஊடாகவே ஏகோபித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும். அதற்காக வடக்கு, கிழக்கு பூராகவும் தமிழ் மக்கள் தங்கள் ஆணையை உயர்ந்தளவில் வழங்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது என்றுள்ளது.