எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகள், 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 17 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதேவேளை மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.
வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய ஜனநாயக முன்னணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு உட்பட மூன்று சுயேட்சை குழுக்களுமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.
சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை, சரியான முறையில் விண்ணப்பத்தை கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கடந்த 4ஆம் திகதி தொடக்கம் இன்று (11) வரை மதியம் 12 மணி வரை இந்த வேட்புமனு தாக்கல் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.