டெல் அவிவ்: "லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 117 பேர் காயமடைந்துள்ளனர்" என்று லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹெஸ்புல்லாஅமைப்பின் முக்கிய தலைவர் வஃபிக் சஃபா என்பவரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே வியாழன் அன்று காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 63 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சூழலில் "காசாவில் உள்ள சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீது வேண்டுமென்றே இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. அந்நாடு போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை செய்து வருகிறது" என ஐ.நா சார்பில் விசாரணை செய்யும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காசாவில் அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல்களில் 42065 பேர் உயிரிழந்துள்ளனர். 97886 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 1139 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 200 க்கும் மேற்பட்ட மக்கள் சிறைபிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.