யாருக்கும் மதுபானசாலைஅனுமதி பெற்றுக்கொடுக்கவில்லை என வெளிப்படையாக வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.
இன்று அவர் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நான் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டேன். உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.
அத்துடன் நான்; எனக்கோ என்னுடைய குடும்பத்துக்கோ, உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ அல்லது எனக்குத் தெரிந்த யாருக்கோ மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தைக் கோரவோ அல்லது மத்தியஸ்தம் பண்ணவோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி வெளிப்படையாக ஒரு வாக்குமூலத்தை வழங்குகிறேன்.
மாவட்டத்தின் என் சக வேட்பாளர்கள் குறிப்பாக பழைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதையே செய்ய வேண்டும் என நான் சவால் விடுக்கிறேன்.
அண்மைய மாதங்களில் வடக்கில் பல மதுபானக்கடைகள் தோன்றியதன் காரணமாக நாளாந்தக் கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.