கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 19 மாடுகள் உயிருடனும் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பகுதியில் இருந்து நேற்று புதன்கிழமை (09) லொறி ஒன்றில் 20 மாடுகளை ஏற்றி யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மீசாலை பகுதியில் வைத்து லொறியை வழிமறித்துள்ளனர்.
அதன்போது லொறியில் இருந்த 20 மாடுகளில் ஒரு மாடு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதிக மாடுகளை ஏற்றியமையால் நெரிசலினால் மாடு உயிரிழந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து மாடுகளை கடத்தி வந்த லொறி சாரதி மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்ததுடன், மாடுகளையும் லொறியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.