இமாலயப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் பயணத்தில் உலகத் தமிழர் பேரவையிடமிருந்து நாம் விலக நிற்க மாட்டோம். இது ஒரு பரீட்சார்த்த முயற்சியானாலும் அந்த பயணத்தில் கனடிய தமிழர் பேரவை தொடர்ந்து தன்னை இணைத்துக் கொள்ளும். இமாலயப் பிரகடனத்தின் மூலம் இதுவரையில் எமது தமிழ் மக்கள் எதிர்பார்த்தவை நிச்சயம் கிட்டும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு''
இவ்வாறு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 2ம் திகதி கனடாவின் மார்க்கம் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் கருத்தரங்கு மண்டபம் ஒன்றில் கனடிய தமிழ் ஊடகங்களைச் சந்தித்த கனடிய தமிழர் பேரவையின் தலைவி ரவீணா ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு மிகவும் உறுதிபடத் தெரிவித்தார்.
அன்றை சந்திப்பில் கனடாவிலிருந்து இயங்கிவரும் அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்த போதே திருமதி ரவீணா ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பில் கனடிய தமிழர் பேரவையின் சார்பில் அதன் தலைவி ரவீணா ரட்ணசிங்கம். முன்னாள் தலைவர் சிவன் இளங்கோ. செயலாளர் நாகநாதன் வீரசிங்கம் மற்றும் இயக்குனர் சபை உறுப்பினர் டில்சன் நவரட்ணராஜா ஆகியோர் பிரதான மேசையில் அமர்ந்திருந்தனர். ஆரம்பத்தில் செயலாளர் அவர்கள் 'இமாலயப் பிரகடனம் தொடர்பான வரைபுகளை இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க. அத்துடன் அங்கு உள்ள பல அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பௌத்த பிக்குகள். இந்து மத பீடங்களின் தலைவர்கள். கிறிஸ்தவ மத பீடங்களின் தலைவர்கள் ஆகியோரிடம் சமர்ப்பித்து உலகத் தமிழர் பேரவையோடும் ஏனைய சில தமிழர் அமைப்புக்களோடு இணைந்து கனடிய தமிழர் பேரவை இந்த முயற்சியில் தொடர்ந்து பயணிக்கவுள்ளதான தகவல் அடங்கிய விபரங்களையும் ஏனைய சில தகவல்களையும் தெரிவித்து, இந்த பிரகடனம் தொடர்பாக கனடா வாழ் தமிழர்கள், தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழர் அமைப்புகள் ஆகியவற்றின் மத்தியிலிருந்து எழுந்துள்ள ஆட்சேபனைகளுக்கு பதிலளிக்கு முகமாகவே அன்றை சந்திப்பை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கேள்வி நேரத்தில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தலைவியிடத்தில் முன்வைத்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே திருமதி ரவீணா ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திரு லோகேந்திரலிங்கம் தனது தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்தின் பின்னர் தனது ஆசிரிய தலையங்கம் ஒன்றில் தான் கனடிய தமிழர் பேரவைக்கு எழுதிய பகிரங்க மடலில் '' உலகத் தமிழர் பேரவையிலிருந்து கனடிய தமிழர் பேரவை முற்றாக விலகிக் கொள்ள வேண்டும் என்றும் கனடாவில் அந்த அமைப்பு ஆற்ற வேண்டிய பொதுச் சேவைகள் அதிகம் உள்ளன என்று குறிப்பிட்டதை அவருக்கு ஞாபகப் படுத்தி தமது வேண்டுகோளை கனடிய தமிழர் பேரவை நிறைவேற்றுமா? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு 'இல்லை' என்று தலையாட்டிய தலைவர்,அவ்வாறு விலகும் எண்ணம் தங்கள் அமைப்புக் கு இல்லை எனவும். ''இமாலயப் பிரகடனத்தை பரீட்சித்துப் பார்க்கும் முற்சியிலிருந்து நாம் விலகி நிற்க மாட்டோம். அந்த பயணத்தில் ஏனைய அமைப்புக்களோடு இணைந்து முயற்சிகளை மேற்கொள்வோம்' என்று உறுதியாகத் தெரிவித்தார்.
திரு லோகேந்திரலிங்கத்தைப் போன்றே ஏனைய சில ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முதலில் கனடிய தமிழர் பேரவை இமாலயப் பிரகடனத்தை பரீட்சித்துப் பார்க்கும் முயற்சியிலிருந்து விலக வேண்டும் என்ற கருத்தை மிகவும் உரத்த குரலில் முன்வைத்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அங்கு கனடிய தமிழர் பேரவையின் தலைவி உட்பட ஏனைய மூவரும் ஊடக வியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஒருமித்த கருத்துக்களை கொண்டிருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு முக்கிய காரணகர்தாக்களாகளில் ஒருவராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவை சந்தித்த விடயமான உலகத் தமிழர்களிடத்தில் மிகுந்த வேதனையை கோபத்தையும் தோற்றுவித்துள்ளது என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்ட சில ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த கனடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் நால்வரும் ஒருமித்த குரலில் "அவர் தென்னிலங்கையின் முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக இன்னும் விளங்குவதால் இமாலயப் பிரகடனத்தை சமர்பித்த குழுவினர் அவ்வாறு அவரை அணுக வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று பதிலளித்த போது அதற்கு ஊடகவியலாளர்கள் ஆத்திரம் மேலிட தங்கள் அதிருப்தியை அந்த இடத்தில் கனடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுக்கு வெளிக் காட்டினார்கள் என்பது இங்கு குறிப்பிட்த்தக்கது.
இரண்டு மணி நேரத்திற்கு மேற்படி சந்திப்பு இடம்பெற்றாலும் கனடிய தமிழ் ஊடகங்கள் முன்வைத்த பல கேள்விகளுக்கு தகுந்த பதில்கள் கிட்டவில்லை என்பதும் இதை கனடா உதயன் பிரதம ஆசிரியர் நேரடியாகவே அதைச் சுட்டிக்காட்டினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைமையில் கனடிய தமிழர் பேரவையும் இணைந்து செயற்படும் 'இமாலயப் பிரகடனம் மற்றும் 'இனப்படுகொலையின் காரணகர்தா மகிந்த ராஜபக்சாவை சந்தித்த விடயம் ஆகியவற்றும் கனடிய அமைப்புக்கள். ஊர்ச்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய பகுதியினரிடமிருந்து எழுந்த எதிர்ப்புக்களை அணைக்கும் முயற்சியின் சிறுபகுதியையேனும் கனடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் 'இமாலயப் பிரகடன பயணம் தொடர்பான எதிர்ப்புக்கள் கனடாவிலும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் "நீறு பூத்த நெருப்பாகவே' தொடர்ந்து இருக்கப்போகின்றது என்ற கருத்தும் அங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டது.