இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு பிறகு ஒரு கணமேனும் தாமதிக்காமல் அவருக்கு நேசக்கரம் நீட்டின. தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மேற்குலக நாடுகளின் விருப்பத்துக்குரியவராக விளங்கினார் போன்று தோன்றியது.
பொருளாதாரத்தை விக்கிரமசிங்க கையாண்ட முறையைப் பாராட்டி அந்த நாடுகள் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டன. சர்வதேச நாணய நிதியமும் அதேபோன்று அவருக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டது. விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் மேற்குலக நாடுகளின் தலைமையிலான நடவடிக்கைகளுடன் தன்னை அடையாளப்படுத்துவதற்கு விசேட முயற்சிகளை முன்னெடுத்தது. செங்கடலில் கடற்படை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு போதிய வசதிகளுடனான கப்பல்கள் இல்லாவிட்டாலும் கூட அவற்றில் பங்கேற்பதற்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம்.
தேசிய மக்கள் சக்தியினதும் அதன் ஜனாதிபதி வேட்பாளரினதும் வெளியுறவுக் கொள்கைத் திசைமார்க்கமே பொதுவில் மேற்குலக நாடுகளினதும் குறிப்பாக இந்தியாவினதும் முக்கிய கரிசனைக்குரிய விடயமாக இருந்தது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மார்க்சிய - லெனினிச கோட்பாட்டை பின்பற்றுகின்றது என்பதால் அதே போன்ற ஒரு கோட்பாட்டையுடைய நாடுகளை நோக்கி தேசிய மக்கள் சக்தி சரிந்துவிடும் என்பதே ஊகமாகும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் அவரது அரசாங்கம் சீனாவையும் ரஷ்யாவையும் நோக்கிச் சாயும் என்று கருத்துக்கு வலுச்சேர்க்கும் பாங்கில் அமைந்திருந்தன. அந்த இரு நாடுகளும் நீண்டகாலமாக இலங்கையின் நெருங்கிய நேச சக்திகளாக இருந்து வருவதுடன் போர்க்காலத்திலும் பிறகு போரின் பின்புலத்தில் கிளம்பிய மனித உரிமைகள் தொடர்பான பிரச்சி னயிலும் சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றன.
ஆனால், ஜனாதிபதி திசாநாயக்க தனது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நலன்களையும் பொறுத்தவரை, இந்தியாாவுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார். அவரை முதலில் சந்தித்து வாழ்த்துக் கூறியவர் இந்திய உயர்ஸ்தானிகரே. திசாநாயக்க பதவியேற்ற பிறகு இலங்கைக்கு முதலில் விஜயம் செய்த வெளிநாட்டு அமைச்சரும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரேயாவார். அவர் கொழும்பில் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இந்தியவுடனான பொருளாதார அபிவிருத்தித் திட்டக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு இலங்கையின் முன்னுரிமை அக்கறைக்குரிய ஒரு விடயம் என்று ஜனாதிபதி திசாநாயக்க இந்திய அரசாங்கத்துக்கு உறுதியளித்தார். அதேவேளை, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் ரஷ்யா உட்பட சந்தை வாய்ப்புக்களையும் பொருளாதார உதவிகளையும் வழங்குவதால் இலங்கைக்கு முக்கியமானவையாக விளங்குகின்ற நாடுகளிடம் இருந்தும் உலகம் பூராவும் இருந்தும் நல்லெண்ணச் செய்திகள் வந்து குவிந்தவண்ணமே இருக்கின்றன.
புதிய தலைமைத்துவம்
அரசாங்கம் விரைவில் அதன் முதன் முதலான வெளியுறவுக் கொள்கைச் சவாலுக்கு முகங்கொடுக்கப் போகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறும் கடப்பாடு, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் கையாளப்படுகின்ற முறை தொடர்பில் இலங்கை மீதான அதன் கண்காணிப்பு மட்டத்தை இவ்வாரம் தீர்மானிக்கவிருக்கிறது.
வடக்கு போர்க்களத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டில் இருந்து மேற்குலக நாடுகள் தலைமையிலான சர்வதேச சமூகம் கடந்த காலத்தை விசாரணை செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. போரின் இறுதிக்கட்டத்தில் நடந்தது என்ன என்பது பற்றியும் காணாமல் போனவர்களை கண்டறிதல், மக்களின் காணிகளை திரும்பக் கையளித்தல், வடக்கு, கிழக்கில் இராணுவமய நீக்கம் செய்தல் உட்பட பல்வேறு விவகாரங்களில் பொறுப்புக் கூறப்படுவதை உறுதிப்படுத்து பற்றியும் பிரச்சினை இருக்கவே செய்கிறது.
2022 அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பல்வேறு விடயங்களுக்கு மத்தியில், மனித உரிமைமீறல்கள் தொடர்பிலான சான்றுகளைச் சேகரித்து பேணிக்காத்து வைப்பதற்கு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு ஏற்கெனவே வழங்கப்ட்ட ஆணையை நீடிப்பதற்கு தீர்மானித்தது. அதன் நோக்கம் தங்களது நியாயாதிக்கத்தின் கீழ் போர்க்குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்கு அனுமதிக்கும் நாடுகளில் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதும் நீதிவிசாரணைச் செயன்முறைகளுக்கு ஆதரவளிப்பதுமேயாகும்.
அந்த தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் உறுதியாக எதிர்த்தன. ஆனால், அவர்கள் முனவைத்த சட்டவாதங்களும் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் மேம்பட்டிருக்கிறது என்பதைக் காண்பிப்பதற்கு சமர்ப்பித்த சான்றுகளும் ஐக்கிய நாடுகள் முறைமையின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால், இந்த தடவை நிலைவரம் வேறுபட்டதாக இருக்கமுடியும் என்பதுடன் இலங்கை அரசாங்கம் பதிலளிக்கின்ற முறையும் வேறுபட்டதாக இருக்கலாம். 2009 ஆம் ஆண்டில் தொடங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவந்த இதுவரையான காலப்பகுதியில் முதல் தடவையாக போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற அத்துமீறல்களில் பங்கேற்றதாக குற்றஞ் சாட்டப்பட்ட ஒரு
உறுப்பினரைத் தானும் கொண்டிராத அரசாங்கம் ஒன்று இலங்கையில் பதவிக்கு வந்திருக்கிறது.
தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பாதுகாப்பு படைகளை நிலைவைப்பது தொடர்பாகவும் படைபலத்தைப் பயன்படுத்துமாறு உத்தரவிடுவது தொடர்பாகவும் தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடியதாக அதிகாரப் பதவிகளில் இருந்ததில்லை. 2004 -- 2005 காலப்பகுதியில் மாத்திரமே அவர்கள் அமைச்சரவையில் பதவிகளை வகித்தார்கள். அந்த வேளையில் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததுடன் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஆயுதமோதல்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. அந்த நேரத்தில் இன்றைய ஜனாதிபதி விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்தார்.
வெற்றிக்கதை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானம் இரு வருடங்களுக்கானது. அது இந்த மாதம் முடிவுக்கு வருகிறது. அதில் உள்ள முன்மொழிவுகளில் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தீர்மானத்தை காலாவதியாக மேற்குலக நாடுகள் முகாம் அனுமதிக்கப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மேலும் ஒரு வருடத்துக்கு அதை நீடிப்பதற்கான தீர்மான வரைவு ஒன்று மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
"51/1 தீர்மானத்தின் ஆணையையு அதன் பிரகாரம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திடம் எதிர்மார்க்கப்படும் சகல பணிகளையும் நீடிம்பதற்கும் தீர்மானிக்கப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையின் 58 வது கூட்டத்தொடரில் வாய்மூல அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வெளியிடவேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து 60 வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் கடப்பாடு பற்றிய விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்படவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது " என்று அந்த வரைவில் கூறப்பட்டிருக்கிறது.
முன்னைய இரு அரசாங்கங்களும் எடுத்த எதிர்முகமான பாதையைத் தொடருவதற்கு பதிலாக, தீர்மானத்தில் உள்ள ஏற்பாடுகளை ஆராய்வதற்கும் அதன் முன்மொழிவுகளின் நடைமுறைப்படுத்தலின் தற்போதைய நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு அடுத்த வருடத்தில் எவற்றை நடைமுறைப்படுத்தமுடியும் என்பதை தீர்மானிப்பதற்கும் கால அவகாசம் தேவை என்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பது புதிய அரசாங்கத்துக்கு நல்ல ஒரு தெரிவாக இருக்கமுடியும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை விடயத்தில் கடைப்பிடித்ததைப் போன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர்களில் தீர்மானத்துக்கு திருத்தங்களை பிரேரிக்கும் ஒரு நிலைப்பாட்டை திசாநாயக்க அரசாங்கம் எடுக்கலாம். இது இலங்கையும் மனித உரிமைகள் பேரவையும் இணக்கத்துக்கு வரக்கூடிய ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதே பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும். ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அயைதியான முறையில் இடம்பெற்ற அதிகார மாற்றம் ஐக்கிய நாடுகள் முறைமைக்குள் இலங்கை மீதான நல்லெண்ணத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
முன்னைய அரசாங்கங்களினால் தொடங்கப்பட்ட ஆனால் தொடர்ந்து முன்னெடுக்கப்படாத தேசிய நல்லிணக்கச் செயன்முறையை மீண்டும் முன்னெடுப்பதில் புதிய அரசாங்கம் ஆற்றலை வெளிக்காட்டுமேயானால் அதன் நம்பகத்தன்மை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.
தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 57 வது கூட்டத்தொடரின்போது ஒரு பக்கநிகழ்வில் அமெரிக்க தூதுக்குழுவினால் நடத்தப்பட்ட 'சகிப்புத்தன்மையின்மை, வெறுப்புக் குற்றச்செயல்கள் மற்றும் இஸ்லாமியப் பீதியை தோற்கடிப்பது' தொடர்பில் ஆராயப்பட்டது. அதில் இலங்கையில் சிவில் சமூகத்தினால் செய்ய்பப்பட்ட பணிகளுக்கு விசேடமான அங்கீகாரம் கிடைத்தது.
புதிய தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை உலகின் மனச்சாட்சியின் குரலாக விளங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சர்வதேச நியமங்களில் ஏற்பட்ட சீர்குலைவினால் உலகின் மனச்சாட்சி பெருமளவுக்கு தொந்தரவுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கு இலங்கை அதன் பங்களிப்பசை் செய்யமுடியும்.