இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு’ வழங்கப்பட்ட ஆணையை விஸ்தரிக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை

இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விஸ்தரிக்கவேண்டும் என என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது

உலக தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையர் இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் (Situation of Human Rights in Sri Lanka) மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 57 ஆவது அமர்வில் நடைபெற்ற உரையாடல் ஆகியன அடங்கிய அறிக்கையொன்றை சமீபத்தில் வெளியிட்டமையை உலகத் தமிழர் பேரவை (GTF) வரவேற்கிறது. தொடரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி இலங்கையில் பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் முன்னெடுக்கப்படுவதற்கு தேசிய, சர்வதேச செயற்பாடுகள் அவசியம் என்பதை இவ்வறிக்கை முன்வைக்கிறது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆகியோருக்குத் தொல்லை தருதல், காணி பறிப்பு, இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளைத் தடுத்தல் போன்ற எழுந்தமானமான பொலிஸ் நடவடிக்கைகள் போன்ற மனித உரிமை மீறல்கள் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக நிறுத்துவோம் என்று அரசாங்கம் அளித்த உறுதிமொழியையும் மீறி இச்சட்டம் தொடர்ந்தும் பிரயோகப்படுத்தப்படுகிறது என இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கடந்த 18 மாதங்களில் மட்டும் 46 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்; 2,845 துன்புறுத்தல் சம்பவங்களும் 21 சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் 26 தடுப்புக் காவல் மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

காணாமற் போனோர் அலுவலகத்தின் திறனின்மை, போதாமை போன்ற குணாதிசயங்களைத் தான் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமலாக்கப்பட்டிருந்தும் ஒரே ஒருவரது மரணத்தையும், 4 பேர் கணாமற் போனமை பற்றியுமே இவ்வலுவலகம் இதுவரை கண்டறிந்திருக்கிறது. தமது விசாரணை அதிகாரங்களைப் பயன்படுத்தி உண்மைகளைக் கண்டறிவதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் மேலதிக தகவல்களைக் கேட்டு கோப்புக்களை மூடுவதற்கான முயற்சிகளை எடுப்பதன் மூலம் அவர்களை மீண்டும் மன உளைச்சலுக்கு இவ்வலுவலகம் ஆளாக்குகிறது.

பிரேதப் புதைகுழிகளும் ஆணையரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. கடந்த பல பத்தாண்டுகளாகப் பல புதைகுழிகள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் முடிந்திருந்தாலும் மனித எச்சங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு அவரவர் குடும்பங்களிடம் கையளிக்கப்படவில்லை என இவ்வறிக்கை கூறுகிறது. அகழ்வுகள் மற்றும் அடையாளம் காண்பதற்குத் தேவையான மனித, பண, தொழில்நுட்ப உதவிகளை வழங்கி சரவதேச நியமங்களுக்கேற்ப இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் தேவையானால் இவ்விடயத்தில் அரசாங்கம் சர்வதேச உதவிகளைக் கோரவேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையர் சிபார்சு செய்திருக்கிறார்.

இவ்விடயம் தொடர்பாக தாம் நேசித்தவர்களுக்காக உண்மையும் நீதியும் கிடைக்கவேண்டும் எனப் பல தசாப்தங்களாகப் பொறுமையோடு காத்திருக்கும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் கோரிக்கைகள் பற்றி “இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல்” (Accountability for Enforced Disappearances in Sri Lanka) எனப்பெயரிடப்பட்டு மனித உரிமை ஆணையரால் மே 2024 இல் வெளியிடப்பட்ட அறிக்கையை உலகத் தமிழர் பேரவை பெரிதும் மெச்சுகிறது. இக்குடும்பங்களுக்கு உண்மையைத் தெரிவிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது எனவும் இக்குற்றங்கள் மீது விசாரணைகள் நடத்தப்படுவது இக்குடும்பங்களுக்கு மட்டுமல்ல இலங்கையின் சமூகங்களிடையேயான ஆற்றுப்படுத்தலுக்கும் ஆவசியம் என ஆணையர் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையும் நீதியும் கிடைக்கவேண்டுமென்பதற்காகப் பல தசாப்தங்கள் காத்திருந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரக்தியே எஞ்சி நிற்கிறது. “பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு வேறு வழிகள் கண்டறியப்படவேண்டும்”, “தண்டிக்கப்படாமை என்ற சுழற்சிக்குள் இருந்து வெளியே வர சர்வதேச சமூகம் அதிகம் பிரயோகிக்கப்படாத சர்வதேச விதிகளின் எல்லை தாண்டிய பிரயோகம் போன்ற மாற்று உத்திகளைப் பிரயோகிக்கவேண்டும்” என்பன போன்ற மேற்கோள்கள் இவ்வறிக்கையில் காணப்படுவதை அவதானிக்கையில் ஆணயரின் விரக்தியும் இதில் அம்பலமாகிறது.

‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் (Sri Lanka Accountability Project (SLAP)) வெற்றிகரமான அமுலாக்கமே மேற்கூறப்பட்ட விடயங்களைச் சாத்தியமாக்கும். மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch), சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) ஆகிய அமைப்புகளின் கோரிக்கைகளின் பிரகாரம் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு’ (SLAP) வழங்கப்பட்ட ஆணையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது விஸ்தரிக்குமாறு ஐ.நா.மனித உரிமைகள் சபை அங்கத்துவ நாடுகளிடம் கோருவதோடு இம்முக்கியமான செயற்பாடு நிதிக் குறைபாடுகளால் முடக்கப்படாதவாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பார்த்துக்கொள்ளவேண்டுமெனவும் உலகத்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.

இத்திட்டத்தின் வெற்றிகரமான அமுலாக்கலைத் தொடர்ந்து இதன் பெறுபேறுகளை, வட கொரியா மற்றும் மியன்மார் நாடுகள் மீதான ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் மற்றும் விசாரணைக் கமிசன் அறிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டதைப் போன்று, மனித உரிமைகள் ஆணையர் இவ்வறிக்கையையும் இதர ஐ.நா. அமைப்புகளுக்கும், ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கும் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்க வேண்டுமென உலகத்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

இதன் மூலம் தசாப்த கால செயற்பாடுகள் சர்வதேச உயர்மட்ட கண்காணிப்புகளுக்குட்படுத்தப்பட்டு தொடர்ச்சியும் பேணப்படுமெனவும் தொடர்ச்சியான சர்வதேச அவதானம் மற்றும் அர்த்தமுள்ள செயற்பாடுகளும் இலங்கை உண்மையான பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம் ஆகியவற்றை எட்ட உதவிசெய்யுமெனவும் உலகத் தமிழர் பேரவை நம்புகிறது.

புதிதாகத் தெரிவாகிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவை உலகத் தமிழர் பேரவை வாழ்த்தியிருந்ததோடு , ஊழலை ஒழித்து தண்டனை வழங்கப்படாமையை முடிவுக்குக் கொண்டுவந்து இந்நிர்வாகம் நல்லாட்சியைப் பேணுமென நாம் நம்புகிறோம் எனவும் தெரிவித்திருந்தோம். பல தசாப்தங்களாக இலங்கையில் குற்றங்கள் – அவை பொருளாதாரக் குற்றங்களாகவிருந்தாலென்ன அல்லது மோசமான மனித உரிமை மீறல்களாகவிருந்தாலென்ன – எவரும் தண்டிக்கப்படாமல் இருப்பது தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இது எந்த வடிவத்தில் வந்தாலும் அவை முறியடிக்கப்படும்போது மட்டுமே உணமையில் ‘தண்டிக்கப்படாமை’ என்பது நிரந்தரமாக ஒழிக்கப்படும்.

ஐ.நா., சர்வதேச சமூகம், இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்கள் ஆகியவற்றுடன் நெருக்கமாகச் செயற்படுவதன் மூலம் மட்டுமே புதிய அரசாங்கம் தனது இலக்குகளை அடைய முடியும் என்பதோடு இச்சிரமமான பயணத்தின்போது சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் எனவும் உலகத் தமிழர் பேரவை நம்புகிறது. இதைச் சாத்தியமாக்குவதற்காக உலகத் தமிழர் பேரவை தனது பங்கை செவ்வனே ஆற்றும் எனவும் உறுதி செய்கிறது

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc