அண்மையில் கனடாவின் ஓக்வில்லில் "சந்தேகத்திற்கிடமான" முறையில் உயிரிழந்த தமிழ் பெண் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 20ஆம் திகதி அதிகாலை ஓக்வில்லில் பதிவான பெண்ணின் "சந்தேகத்திற்கிடமான" திடீர் மரணம் குறித்து ஹால்டன் பொலிஸும், ஒன்ராறியோவின் தலைமை மரண விசாரணை அதிகாரியின் அலுவலகமும் விசாரணை நடத்தி வருகின்றன.
சன்னிங்டேல் பொது பாடசாலைக்கு வெளியே காலை 6:30 மணியளவில் 20 வயது பெண் ஒருவர் "மருத்துவ நெருக்கடியுடன்" காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் தமிழர் என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். "பாதிக்கப்பட்டவர் பாடசாலைக்கு வெளியே எப்படி வந்தார் என்பதற்கான சூழ்நிலைகளை துப்பறிவாளர்கள் தற்போது விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஆக்ஸ்போர்டு அவென்யூ மற்றும் ஓக்வில்லில் உள்ள மில்லர் வீதிப் பகுதியில் இருந்து காணொளி கண்காணிப்பு ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாக" பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில், புலனாய்வாளர்கள் பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடவில்லை."
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தப் பெண்ணின் இறுதிக் கிரியைகள் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.