Bootstrap

தரமற்ற மருந்துகளின் தாக்கமும், கொள்முதல் சட்டத்திற்கான அவசியமும்

64 வயதுடைய மக்கரி ராஜரத்னம், கந்தப்பளையைச் சேர்ந்தவர், தனது இடது கண்ணில் ஏற்பட்ட பார்வைக்குறைபாட்டினை நிவர்த்திப்பதற்காக  கடந்த ஆண்டு நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

2023 ஏப்ரல் 5ஆம் திகதி கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஏப்ரல் 6ஆம் திகதி வீடு திரும்பினார். அப்போது வைத்தியசாலையால் வழங்கப்பட்ட பிரட்னிசோலோன் கண்சொட்டு மருந்தைப் பயன்படுத்தினார்.

அதன் பின்னராக, அதிகமான கண்ணீர் வெளியேறல், கண் வலி, தலைவலி போன்ற கடுமையான நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். இதனால் மே 10ஆம் திகதி கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மக்கரி ராஜரத்னம் நிரந்தரமாக பார்வையை இழந்துள்ளார் என்ற துயரச் செய்தி வைத்திய அதிகாரிகளால் வெளியிடப்பட்டது.

அதேதினத்தில், பண்டாரவளை அளுத்கம பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பீ.ஏ.நந்தசேன நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்க்கொண்டிருந்தார். ஏப்ரல் 6ஆம் திகதி வீடு திரும்பியபின்னர் வைத்தியசாலையால் வழங்கப்பட்ட  பிரிட்சிசொலன் அசிரேட் கண்சொட்டு மருந்தைப் பயன்படுத்த  ஆரம்பித்தார்.

இவருக்கும் மக்கரி ராஜரத்னம் போலவே, கடுமையான கண் வலி, தலைவலி மற்றும் அதிக கண்ணீர் வெளியேறல் போன்ற அசௌகரியங்களை எதிர்கொண்டார். இதனால் மே 22ஆம் திகதி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அவர் தனது இடது கண் பார்வையை முழுமையாக இழந்துள்ளமை மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

இவர்களைப்போன்றே, தனது இடது கண்பார்வையை இழந்திருக்கிறார், 61 வயதுடைய மந்தனா ஆராய்ச்சி கல்யாணி. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் திகதி  நுவரெலியா பொது மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டாவருக்கு மருத்துவமனையால் பிரெட்னிசோலன் அசிடேட் கண்மருந்து வழங்கப்பட்டது.

அதனைப் பயன்படுத்திய பின், கடுமையான கண் வலி ,தலைவலி ஏற்பட்டது. இதனால், மே 18ஆம் திகதி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் இடது கண் பார்வை இழக்கப்பட்டுள்ளமை மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது.

கட்புரை சிகிச்சைக்காகச் சென்று ஈற்றில் கண்பார்வையைப் பறிகொடுத்தவர்களாக இருக்கும் மேற்படி நபர்களால் தற்போது கொழும்பு  உயர்நீதிமன்றத்தில் இழப்பீட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கில்  எதிரிகளாக கெஹெலிய  ரம்புக்வெல (முன்னாள் சுகாதார  அமைச்சர் ),  ஜனக சந்திரகுப்தா (முன்னாள் செயலாளர், சுகாதார அமைச்சு ), தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல்  ஆணையகம், எஸ்.டி.ஜெயரத்ன (தலைவர், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை  ஆணையகம் ) , விஜித்  குணசேகர  (இயக்குனர், தேசிய  மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்) , வைத்தியர் அசேல குணவர்த்தன (பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார அமைச்சு)  வைத்தியர் ரோகண  எதிரிசிங்க (கண் அறுவைச் சிகிச்சை நிபுணர், பொது வைத்தியசாலை நுவரெலியா ) வைத்தியர்  மகேந்திர செனவிரெட்ன (இயக்குனர் பொதுவைத்தியசாலை நுவரெலியா)  இந்தியானா ஆபத்தில்மிக்ஸ் குஜராத் 363035 (மருந்து நிறுவனம்), சட்டமா  அதிபர் திணைக்களம்  ஆகியோர்  பிரதிவாதிகளாக  சேர்க்கப்பட்டுள்ளனர்.

வழக்குத் தொடர்ந்த மூவரும் 100மில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளனர். இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பாராத பார்வையிழப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி  மற்றும் பொருளாதார இழப்புகள் மனரீதியான அச்சத்தை பெருமளவில் விட்டுச்சென்றிருக்கிறது.  சொந்த உழைப்பால் வருமான மீட்டியவர்கள்  இப்போது  தங்கி வாழ்பவர்களாக  மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இச்சம்பவம் இடம்பெற்று ஒருவருடத்திற்கும் அதிகமான  காலம் உருண்டோடியிருந்தாலும், அவர்களுக்குரிய  இழப்பீடுகள்  வழங்கப்படவில்லை. தமக்கான நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பலர் காத்திருந்தாலும், நியாயத்தை தேடும் பயணத்தை சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த கண்மருந்துப் பாவனையால் பார்வையிழப்பைச் சந்தித்த 6 பேர் தமக்கான இழப்பீட்டைக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இலவச வைத்திய  சேவை என்பது இலங்கையின் குறிப்பிடத்தக்க சிறப்பான திட்டங்களுள் முதன்மையானது. சுகாதாரத்துறையின் சேவைகளை  மக்கள் அனைவரும் சமவாய்ப்புடன்  இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும்.  இது நாட்டு மக்களின் அவசிய மருத்துவசேவையை  செலவின்றி பகிரக்  கூடிய வாய்ப்பையும்,  நம்பிக்கையையும்  பெற்றிருந்தது. ஆனால் தரமற்ற மருந்துகளின் தாக்கத்தால் உருவான அச்சம் , மீண்டும் பொதுமக்களிடையே சுகாதாரத்துறை மீதான நம்பிக்கையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

2022 மற்றும் 2023 ஆகிய காலகட்டங்களில்  நாட்டில் ஏற்பட்ட பொருளாதார  நெருக்கடி , சுகாதாரத்துறையில் மீது  கடும் அழுத்தத்தைப்  பிரயோகித்தது.  முக்கிய மருந்துப் பொருட்களுக்கு  ஏற்பட்ட  தட்டுப்பாடு  காரணமாக, மருத்துவத்துறை  ஸ்தம்பித்தது.  இதனை  நிவர்த்திக்கும்  நோக்கில், அப்போதைய  சுகாதார துறை அமைச்சினால் சில மருந்துப்பொருட்கள்  அவசரக் கொள்வனவின் மூலம்  இறக்குமதி  செய்யப்பட்டன. இவற்றுக்கான இறக்குமதிக்கான அனுமதிகள் முறையான செயன்முறைகளுடாக பெறப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவை  இந்திய  அரசாங்கத்தின் கடனுதவித் திட்டம் மற்றும் ஏனைய  உள்நாட்டு  நிதிப்பங்களிப்புடன்  இறக்குமதி  செய்யப்பட்டன.அந்த மருந்துகளைப் பாவித்த  நோயாளிகள் பல்வேறு  இழப்புக்களை  எதிர்கொண்டனர். அச்சந்தர்ப்பத்தில் நடைபெற்ற  பரிசோதனையின்  பின்  அந்த  மருந்துகள்  தரமற்றவை  எனத்தெரியவந்தது.

அவ்வாறு  இறக்குமதி  செய்யப்பட்ட  தரமற்ற மருந்துகளுள்  ஒன்றுதான்  ‘பிரட்னிசொலோன்’ எனப்படும் கண்சொட்டு  மருந்து.  இம்மருந்து  சத்திரசிகிச்சையின்  பின் பயன்படுத்தப்படுகிறது.

கடந்தாண்டு தரமற்ற மருந்துகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், இலங்கையின் சுகாதாரத்துறையின் கறுப்பு பக்கங்களை புரட்டியது. கண் சத்திர சிகிச்சைக்கு பின் சொட்டு மருந்தாக பயன்படுத்தப்படும் prednisolone  Acetate Ophthalmic suspension USP 10 – PRED-S எனும் மருந்தில்  உருவான பற்றீரியா காரணமாக இந்த மருந்தை பயன்படுத்திய 20 நோயாளிகள் தங்கள் கண்பார்வையை இழந்தனர்.

கொழும்பு, நுவரெலியா, அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. குறிப்பாக நுவரெலியா  வைத்தியசாலையில் பத்து நோயாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் மருத்துவ விநநோகப்பிரிவின்,  சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் பிரிவினால் வெளியிடப்பட்ட  சுற்றறிக்கை  இலக்கம் MSD/Q/P/2023/25 சுற்றறிக்கையின் கீழ் இந்த மருந்து தொகுதியை உடனடியாக  திரும்பப் பெறுமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்கும்  அறிவுறுத்தப்பட்டது.

இந்த மருந்துகள் இந்தியாவில் குஜராத்தை தளமாக கொண்ட இந்தியானா ஆபத்தில் மிக்ஸ்  மருந்து  நிறுவனத்திடமிருந்து   அவசரக் கொள்வனவு முறை  மூலம் இறக்குமதி  செய்யப்பட்டது  என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.

நட்டஈடு வழங்குவதை வலியுறுத்தும் குரல்கள்

“பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் என்று  அடையாளம் காணப்பட்ட  மருந்துத்  தொகுதிகள்  மட்டுமே  மீளப்பெறப்பட்டன. அந்த  நிறுவனத்தை  நாங்கள் தடைசெய்யவில்லை.  இது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட  நிறுவனம்” என்று தொடர்பாக  தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல்  அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் சவேன் சேமேஜ் குறிப்பிடுகின்றார்.

மருந்துகள் தர உறுதி  ஆய்வகத்தின்  அறிக்கையின் படி, சத்திரசிகிச்சையின்  பின்னர்  பயன்படுத்தப்பட்ட  பிரெட்னிசொலன்  மருந்து தொகுதியில் மாசுபாடு  மற்றும்  கோகோபாசில்லி   பற்றீரியாவால்  பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் சத்திரசிகிச்சையால் பார்வையிழப்பு ஏற்படவில்லை என்பதும் தரமற்ற மருந்தின் விளைவுதான் பார்வையிழப்பிற்கான  காரணம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தும் குறித்த நிறுவனம் தடை செய்யப்படாதிருப்பதற்கு காரணங்கள் எவையும் சுட்டிக்காட்டப்படவில்லை.

அரச  வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தின்  ஊடகப் பேச்சாளர் (தமிழ்) வைத்தியர்  சப்னாஸ்  மஹரூப், “நாங்கள் இந்த விடயத்தில் ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுக்கிறோம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு,  இந்த சம்பவம் இடம்பெற்ற போது கண் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கண்பார்வையை இழந்திருக்கிறார்கள். சிலர் பார்வை குறைபாடுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள் இதற்கான காரணமாக குறிப்பிட்ட மருந்தில் பற்றீரியா தாக்கம் இருந்ததாக  பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் அரசாங்கத்தின் ஊடாக மட்டுமல்ல, தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த நபர்கள் மற்றும் மருந்து தயாரித்த நிறுவனம் ஊடாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். மேலும் பார்வை இழப்புகள் சத்திர சிகிச்சைகளால்  ஏற்பட்டதல்ல. சத்திர சிகிச்சைக்கு பின்னராக பயன்படுத்தப்பட்ட மருந்து மூலம் ஏற்பட்டது என்பது ஆய்வுகளில் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, கண்சொட்டு மருந்து அவசர மருந்து கொள்வனவு  முறை மூலமாக இறக்குமதி செய்யப்பட்டது. மருந்துக் கொள்வனவில் வெளிப்படைத்தன்மை வேண்டும். நாங்கள் அவசரக் கொள்வனவை முழுமையாக எதிர்க்கிறோம்.  மருந்துகளின் தரம் மற்றும் மருந்துகளின் பாதுகாப்பு முறைகளை பின்பற்றல் சம்பந்தமாக தொடர்ந்தும் பேசுகிவருகிறோம் அத்துடன் மருந்துகளின் தரத்தை பரிசோதிப்பதற்காக சகல வசதிகளுடன் கூடிய ஆய்வகம் ஒன்று அவசியமாக உள்ளது இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி. வருகிறோம் “ என்றார்.

மருத்துவம் சார்ந்த இழப்பீடுகளுக்கான சட்ட ஏற்பாடு  தொடர்பாக,  சிரேஷ்ட சட்டத்தரணி குமரவடிவேல் குருபரன்,  “மருத்துவ அலட்சியத்தால் உண்டாகும் பாதிப்புகளுக்கான சட்ட ரீதியான தீர்வுகளுக்காக சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது ரோமன் டச் பிரிவில் இலங்கை பொதுச் சட்டத்தில் உள்ளடங்குகிறது. அதன்படி ‘கவனத்தை காட்ட வேண்டிய நபர் கவனயீனமாக  கவனத்தை காட்டாமல் தவறு இழைத்திருந்தால் அதன் போது ஏற்பட்ட விளைவுகளுக்கான சட்ட ஏற்பாடாக இந்த தீங்கியல்  சட்டம்  அமைந்துள்ளது’ என்றார்.

“இந்த சட்ட துணையை நாடும் பாதிக்கப்பட்ட நபர் இரண்டு வருடங்களுக்குள் தனக்கு நேர்ந்த பாதிப்புகளுக்கான ஆதாரங்களுடன் வழக்கு தொடர வேண்டும். இவ்வாறான வழக்கினை தொடரும் பாதிக்கப்பட்ட நபருக்கு வைத்தியதுறை சார்ந்த  வழக்காக  இருந்தால் சம்பந்தப்பட்ட வைத்தியர், வைத்திய அத்தியட்சகர், பரிசோதனை கூட ஆய்வாளர்கள், தாதியர் மற்றும் சம்பவத்தின் போது  பங்குபற்றுனர்களாக  இருந்தவர்களை  சாட்சியங்களாக  எடுத்துக்கொள்ள முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுக்கொள்வனவு சட்டத்தின் அவசியம்

பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டனர். இந்த விடயம் சுகாதாரத் துறை மீதான நம்பிக்கையீனத்திற்கு வழிவகுத்தது.ஊழல்களால்  உருவாக்கப்படும் இழப்புகள் பற்றிய அச்சத்தையும் விட்டுச் சென்றது.

பல தசாப்தங்களாக, வெளிப்படைத்தன்மையற்ற, பொதுக்கொள்வனவு முறை இலங்கையின் ஊழல் பக்கங்களுக்கு வடிவம் கொடுத்து வருகிறது என்பது வெளிப்படையான விடயம். ,ஆனாலும் அதற்கெதிரான மாற்றங்களுக்கான கோரிக்கைகள் பல வருடங்களாக ஒலித்தாலும் அவசர மருந்து கொள்வனவின் பின்னரான பாதிப்புகள் ஊழல்களுக்கு  சாதகமான எழுத்து வடிவங்களை மாற்றத் துணிந்துள்ளன.

அந்த வகையில் தேசிய ரீதியிலான திறந்த பொதுக்கொள்வனவு சட்டத்தின் அவசியத்தை சர்வதேச நாணயநிதியம்  தொடர்ந்தும்  வலியுறுத்தி  வருகிறது. இந்த விடயம் தொடர்பாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனத்தின் ஆளுகை மற்றும் ஊழல்  எதிர்ப்பு  பிரிவின் தலைவர் சங்கீதா  குணரத்ன, “சர்வதேச நாணயநிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக புதிய கொள்வனவு சட்டம் இவ்வருடம் டிசம்பர் மாதத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன்,  சட்டவரைபு  தயாரிக்கப்பட்டு, தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு  அனுப்பப்பட்டுள்ளது” என்று குறிப்பிடுகின்றார்.

“அச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் பொது ஆலோசனைக்கு  அனுப்பப்பட  வேண்டும். இன்னுமொரு புதிய கொள்முதல் வழிகாட்டல் கையேடு தயாரிக்கப்பட்டு, பாராளுமன்ற அனுமதிக்காக  அனுப்பப்பட்டுள்ளது.ஆனால் இன்னும் அதற்குரிய  அனுமதி கிடைக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், “தரமற்ற  மருந்துகளால் மக்கள்  நேரடியாகப்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் அதிகமாக  மக்களின்  கவனத்தைப்  பெற்றிருக்கிறது. இந்த அவசரக்  கொள்வனவால் இடம்பெற்ற  ஊழல்கள்  மிக நேர்த்தியாக  அவர்களைச் சென்று  சேர்ந்திருக்கிறது” என்று சங்கீதா  குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வெளிப்படைத் தன்மையற்ற கொள்வனவுகளால் உண்டாகும் ஊழல் வாய்ப்புகளை தடுப்பதற்கான முறைகளை பின்பற்ற வேண்டியது இன்றியமையாதது.அந்த வகையில் இலங்கையில் உள்ள பொருட்கொள்வனவு  வழிகாட்டியை  முழுமையாக பின்பற்றுதல், பொருட்கொள்வது செயல்முறையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தல் மற்றும் அவசியம் இல்லாத போது அவசர நிலைமைகளின் கீழ் பொருட்கொள்வனவு செய்வதை தவிர்த்தல், பாவனைக்கு முன் மருந்துகளின் தரத்தைப் பரிசோதித்தல்  என்பவை முக்கியமானவை.

அந்தவகையில் இந்த விடயப் பரப்பிற்கான முன்னுரிமை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் சூழல்  உருவாக்கப்பட வேண்டும். கிராம மற்றும் மாவட்டங்களில் காணப்படுகின்ற சுகாதார சேவை தொடர்பான ஊழல்களை அம்பலப்படுத்த மக்களுக்கான விழிப்புணர்வும் அவதானமும்  அவசியமானது.  இதற்காக, பொதுமக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் .

மேலும் பொதுமக்களை விழிப்பூட்டி ,சுகாதாரத்துறை  ஊழல்களை   ஒழிக்க சிவில் அமைப்புகள் மிகவும் காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டும்.இத்தகைய மாற்றங்கள் தென்படும் போது ஊழலுக்கெதிரான சூழல் கருக்கொள்ளும்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural Newspaper Canada is the first human rights-focused newspaper launched from abroad to serve the Sri Lankan Tamil community. Based in Canada, it aims to highlight human rights issues, political developments, and social challenges faced by Sri Lankan Tamils, both in Sri Lanka and the diaspora. By amplifying marginalized voices, it seeks to foster dialogue and advocate for justice, while offering a platform for critical news, opinions, and analysis from a Tamil perspective.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc