பதவி கவிழ்க்கப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடு கடத்துமாறு கோருவதற்கான திட்டங்கள் குறித்து பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் விசாரணை மன்றத்தின் (International Crimes Tribunal) பிரதம வழக்குத் தொடுநர் அறிவித்திருக்கிறார். "பிரதான குற்றவாளி நாட்டை விட்டு தப்பிச் சென்றதால் அவரை நாட்டுக்கு திருப்பிக் கொண்டுவருவதற்கான சட்ட நடைமுறைகளை நாம் தொடங்குவோம்" என்று முஹமட் தாஜுல் இஸ்லாம் செப்டெம்பர் 8ஆம் திகதி கூறினார்.
தன்னை பதவியில் இருந்து இறங்க நிர்ப்பந்தித்த மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு ஆகஸ்டில் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் நாட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் எதிராக பெருவாரியான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. கொலை, சித்திரவதை, சட்டவிரோத ஆட்கடத்தல், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கின்றன.
மேலும், ஹசீனா வழக்கு விசாரணைகளுக்கு முகங்கொடுப்பதற்காக அவரை நாட்டுக்கு திருப்பியனுப்புவதை அனுமதிக்கக்கூடிய இருதரப்பு நாடுகடத்தல் உடன்படிக்கை ஒன்று இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இருக்கிறது.
உடன்படிக்கை என்ன கூறுகிறது?
பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடத்தப்பட்ட 1971 போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணை மன்றத்தை ஹசீனா 2010ஆம் ஆண்டில் அமைத்தார்.
1973 ஆம் ஆண்டின் சர்வதேச குற்றங்கள் (விசாரணை மன்றங்கள்) சட்டத்தின் கீழ் ஹசீனா இல்லாமலேயே பங்களாதேஷ் நீதிமன்றங்கள் குற்றவியல் விசாரணைகளைத் தொடர முடியும். ஆனால், விசாரணைகளின் நேர்மை குறித்தும் உகந்த செயன்முறைகள் கடைபிடிக்கப்பட்டனவா என்பது குறித்தும் அக்கறைகள் கிளம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற அதேவேளை நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் முன்னாள் பிரதமரை நாடு கடத்தவேண்டியது முக்கியமாகிறது.
கிளர்ச்சியையும் இரு எல்லையோர பயங்கரவாதத்தையும் கையாளுவதற்கான ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக இந்தியாவும் பங்களாதேஷும் 2013ஆம் ஆண்டில் நாடுகடத்தல் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன. இரு நாடுகளினாலும் தேடப்படும் தலைமறைவுப் பேர்வழிகளை பரிமாறிக்கொள்ளும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக 2016ஆம் ஆண்டில் அந்த உடன்படிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.
முக்கியமான பல அரசியல் கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கு உடன்படிக்கை வசதியாக அமைந்தது. உதாரணமாக, ஹசீனாவின் தந்தையார் ஷேய்க் முஜிபுர் ரஹ்மான் 1975ஆம் ஆண்டில் இராணுவ சதிப் புரட்சியின்போது கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதற்காக பங்களாதேஷுக்கு 2020ஆம் ஆண்டில் நாடு கடத்தப்பட்டனர்.
அதே போன்று டாக்காவில் 18 வருடங்களாக சிறையில் இருந்த தடைசெய்யப்பட்ட அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரான அனூப் சேத்தியா இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். குறைந்தபட்சம் ஒரு வருடச் சிறைத் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளியாகக் காணப்பட்டவர்களை நாடுகடத்துவதற்கான கட்டாய ஏற்பாட்டை உடன்படிக்கை கொண்டுள்ளது.
ஒருவரை நாடு கடத்த வேண்டுமானால் 'இரட்டைக் குற்றக் கோட்பாடு' (Principle of dual criminality) பிரயோகிக்கப்பட வேண்டியது முக்கியமான ஒரு நிபந்தனையாகும். அதாவது இரு நாடுகளிலும் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்தவராக அவர் இருக்கவேண்டும்.
ஹசீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இந்தியாவில் வழக்குத் தொடுக்கப்படக் கூடியவையாக இருப்பதாலும் அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கான தண்டனைகளும் கணிசமானவையாக இருப்பதாலும் இந்த அடிப்படைகளில் அவர் நாடுகடத்தப்படக்கூடியவராக இருக்கிறார்.
மேலும், குற்றங்களைச் செய்வதற்கு முயற்சித்தல், உதவிசெய்து ஒத்தாசையாக இருத்தல், தூண்டிவிடுதல் அல்லது அத்தகைய குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருத்தல் ஆகியவற்றையும் நாடுகடத்தலுக்கான செயல்களாக இந்த நாடுகடத்தல் சட்டம் அதன் வீச்செல்லைக்குள் அடக்கியிருக்கிறது.
குறிப்பாக, நாடுகடத்தல் உடன்படிக்கையில் 2016ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தம் குற்றத்தைச் செய்தவருக்கு எதிராக தெளிவான சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவையை அகற்றியதன் மூலம் நாடுகடத்தலுக்கான நிபந்தனையின் படிநிலையை கணிசமானளவுக்கு தாழ்த்தியிருக்கிறது. நாடுகடத்தல் கோரிக்கையை விடுக்கும் நாட்டின் தகுதிவாய்ந்த நீதிமன்றம் ஒன்றினால் பிறப்பிக்கப்படும் பிடியாணை ஒன்று மாத்திரமே நாடுகடத்தல் செயன்முறையை தொடங்குவதற்கு போதுமானதாகும் என்று உடன்படிக்கையின் 10வது சரத்து கூறுகிறது.
நாடுகடத்தலை நிராகரிக்க முடியுமா?
குற்றச்செயல் "அரசியல் தன்மை" ஒன்றைக் கொண்டிருக்குமானால் நாடுகடத்தல் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்று உடன்படிக்கையின் 6வது சரத்து கூறுகிறது. ஆனால், இந்த குறிப்பிட்ட விதிவிலக்கு மீது கடுமையான மட்டுப்பாடுகள் இருக்கின்றன. கொலை, பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் ஆட்களைக் கடத்திச் செல்லுதல் போன்ற பெருமளவு குற்றங்கள் அரசியல் தன்மையானவை என்று வகைப்படுத்தப்படும் குற்றங்களில் இருந்து பிரத்தியேகமாக புறந்தள்ளப்படுகின்றன.
ஹசீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் பல (கொலை மற்றும் ஆட்களை வலிந்துகாணாமல் போகச்செய்தல் போன்றவை) இந்த விதிவிலக்கு எல்லைக்கு வெளியிலேயே இருக்கின்றன. அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவற்றை அரசியல் ரீதியான அத்துமீறல்கள் என்று நியாயம் கூறி நாடுகடத்தலை இந்தியாவினால் நிராகரிக்க முடியாமற்போகும்.
நாடுகடத்தல் கோரிக்கையை நிராகரிப்பதற்கான இன்னொரு அடிப்படை உடன்படிக்கையின் 8ஆவது சரத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. நீதியின் நலன்களுக்காக நேர்மையான காரணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படாவிட்டால் அல்லது பொதுவான குற்றவியல் சட்டத்தின் கீழான ஒரு குற்றச்சாட்டாக கருதப்படாத இராணுவக் குற்றங்கள் சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டு இருக்குமானால் நாடுகடத்தல் கோரிக்கையை நிராகரிப்பதற்கு அந்த சரத்து அனுமதிக்கிறது.
ஹசீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நேர்மையான காரணங்களுக்காக நன்னோக்குடன் சுமத்தப்படவில்லை என்ற அடிப்படையிலும் அவர் பங்களாதேஷ் திரும்பும் பட்சத்தில் அரசியல் ரீதியான கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகக்கூடிய சாத்தியம் இருக்கிறது அல்லது நேர்மையற்ற ஒரு விசாரணை நடத்தப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்ற அடிப்படையில் நாடுகடத்தல் கோரிக்கையை இந்தியா நிராகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
அத்தகைய அக்கறைகளை வலுப்படுத்தக்கூடிய முறையில் அண்மைய செய்திகள் அமைந்திருக்கின்றன. ஹசீனாவின் அமைச்சரவையின் அமைச்சர்கள் விளக்கமறியல் விசாரணைக்காக வாகனங்களில் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட்டபோது வீதியோரம் நின்றவர்களினால் அவர்கள் அடாத்தாகக் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
சாத்தியமான விளைவுகள்?
இறுதித் தீர்மானம் கூடுதலான அளவுக்கு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் அரசியல் அக்கறைகளிலும் தங்கியிருக்கும் என்பதால் ஹசீனாவின் நாடுகடத்தலை உடன்படிக்கை உத்தரவாதம் செய்யவில்லை என்று ஓ.பி. ஜின்டால் குளோபல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச உறவுகள் பேராசிரியர் சிறீராதா டத்தா 'தி இந்து' வுக்கு கூறினார்.
"நாடுகடத்தல் கோரிக்கையை இந்தியா நிராகரிப்பதாக இருந்தால் கூட, அது ஒரு சிறிய அரசியல் எரிச்சலை உண்டாக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறதே தவிர இருதரப்பு உறவுகளில் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகளைப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு தாக்கத்தை செலுத்துவது சாத்தியமில்லை" என்றும் அவர் கூறினார்.
தெற்காசியாவில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி பங்களாதேஷ் விளங்குகிறது. 2022 - 2023 நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி 15.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டது. ஹசீனா பதவியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னதாக பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக விரிவான பொருளாதார கூட்டுப்பங்காண்மை உடன்படிக்கை (Comprehensive economic partnership agreement) ஒன்றை செய்துகொள்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவிருந்தன.
டாக்காவில் ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஷின் புதிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதம ஆலோசகர் முஹமட் யூனுஸுடன் பேசி தற்போது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஆதரவு தொடரும் என்று