குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, வீடு, மனைகளை தவணை முறையில் வழங்கும் திட்டம் குறித்து, புதிய தகவல் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.. வீட்டுவசதி வாரியம் சார்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த, நடுத்தர, உயர் வருவாய் என, பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு, வீடு, மனைகள் ஒதுக்கப்படுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு, வீடு, மனைகள் விற்பனையில் வாரிய அதிகாரிகளால் தொய்வு ஏற்பட்டதுடன், தவணை முறையில் வீடு விற்கும் முறை படிப்படியாக நிறுத்தப்பட்டது.
கோரிக்கை: இது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினர் வீடு வாங்குவதில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.. அதனால், தவணை முறையை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை எழுந்ததையடுத்து, மீண்டும் தவணை முறை கொண்டுவரப்பட்டது. அந்தவகையில், வீட்டுவசதி வாரியத்தின் மூலம், ஏராளமான திட்டங்களில் குறிப்பாக, பொதுமக்களுக்கு மாதத்தவணை திட்டம், மொத்த கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதி திட்டம் போன்றவற்றின் அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.. இப்படி வீடுகளை ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தொகையை தவணை முறையில் செலுத்த வேண்டும்.
நிலுவைத்தொகை: இந்த நிலுவைத்தொகை செலுத்த வேண்டியவர்கள், உடனடியாக தொகையை செலுத்திவிட வேண்டும். அப்படி குடியிருப்புகளுக்குரிய முழுத்தொகையும் செலுத்திய பிறகு, கிரயப்பத்திரமும் உடனுக்குடன் வழங்கப்பட்டுவிடும்.. முழு பணத்தையும் செலுத்தியிருந்தும்கூட, விற்பனை பத்திரத்தை பெறாதவர்களும், நிலுவைத்தொகை உள்ளவர்களும், விரைவாக விற்பனை பத்திரம் பெறும்வகையில், செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.. ஒருவேளை உரிய காலத்தில் தவணை தவறினால், வட்டிக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
வீட்டு வசதி வாரியம்: அதற்கேற்றவாறு, குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினரிடம், தவணை முறையில் வீட்டுக்கான தொகையை வசூலிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், இத்தகைய பிரிவினருக்கு, நகர்ப்புற வாழ்விட வாரியம் வழங்கும் வீடுகளிலும் தவணை வசூல் முறையாக நடக்கவில்லை என்றும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகின்றன.
அதுமட்டுமல்ல, மக்களிடம் இருந்து தவணை தொகையை வசூலிப்பதில், வாரியத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. நிலுவைத் தொகை இப்படி அதிகரித்ததால், வாரியத்துக்கு வர வேண்டிய வருவாய் நிலுவையும் பல மடங்காக உயர்ந்துவிட்டது.. அதனால்தான், அபராத வட்டி தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டது..
இதை பயன்படுத்தி, சலுகைகளுடன் நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கு, விற்பனை பத்திரம் வழங்க, வாரியம் நடவடிக்கை எடுத்தது. தவணை தொகை: இப்படி சலுகையை அறிவித்தும்கூட, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1,500க்கு மேற்பட்டோர் தவணை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.. எனவே, இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க, வாரியம் உத்தரவிட்டிருக்கிறதாம்.
இதுகுறித்து வாரிய அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "இப்போது நடைமுறையில் உள்ள புதிய திட்டங்களில், தவணை முறை இல்லை... ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களில்தான், தவணை முறையில் வீடு, மனை பெற்றவர்கள் நிலுவை வைத்திருக்கிறார்கள்.. பெரும்பாலானோர், ஓரிரு தவணைகளை மட்டுமே செலுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள்.. இதனால், அவர்களுக்கான வீடு, மனை ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வாரியத்துக்கு முழு அதிகாரம் உள்ளது.
ஒதுக்கீடு ரத்து: ஆனாலும், தவணை செலுத்தாதவர்களுக்கு கடைசியாக, 30 நாட்கள் அவகாசம் அளிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.. இதற்கான அறிவிப்பு, கோட்ட அலுவலகங்கள் வாயிலாக வெளியிடப்படும்... அதற்கு பிறகும் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த வீடு, மனைகள் வேறு நபர்களுக்கு ஒதுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.