இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப் பயிற்றுராக சனத் ஜயசூரியவை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று திங்கட்கிழமை நியமித்தது.
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டிவரை இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநராக சனத் ஜயசூரிய பதவி வகிப்பார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்தது.
இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் சனத் ஜயசூரியவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி மிகச் சிறப்பாக விளையாடியதை அடுத்து அவரை தொடர்ந்து பயிற்றுநராக நியமிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்தது.
இந்த மூன்று கிரிக்கெட் தொடர்களிலும் இடைக்காலப் பயிற்றுநராக பதவி வகித்த சனத் ஜயசூரிய, இன்று முதல் 2026 மார்ச் 31ஆம் திகதிவரை இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர தலைமைப் பயிற்றுநராக பதவி வகிக்கவுள்ளார்.
சனத் ஜயசூரியவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி கடந்த 27 வருடங்களில் இந்தியாவுக்கு எதரான முதலாவது ஒருநாள் தொடரைக் கைப்பற்றியிருந்தது. தொடர்ந்து இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 10 வருடங்களுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.
இறுதியாக நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை முழுமையாக வெற்றிகொண்டிருந்தது.
தலைமைப் பயிற்றுநராக சனத் ஜயசூரிய தனது பணியை மேற்கிந்தியத் தீவுகளுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் ஆரம்பிக்கவுள்ளார்.