ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவந்த ஐந்து அணிகளுக்கு இடையிலான தேசிய சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் சரித் அசலன்க தலைமையிலான கொழும்பு அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட இறுதிப் போட்டியில் ஜனித் லியனகே தலைமையிலான யாழ்ப்பாணம் அணியை 92 ஓட்டங்களால் வெற்றிகொண்டு கொழும்பு அணி சம்பியனானது.
சரித் அசலன்க குவித்த இரட்டைச் சதம், அவிஷ்க பெர்னாண்டோ குவித்த சதம் என்பன கொழும்பு அணியின் வெற்றியை இலகுவாக்கின.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 413 ஓட்டங்களைக் குவித்தது.
தேசிய வீரர்களான குசல் மெண்டிஸ் (0) முதல் ஓவரிலும் கமிந்து மெண்டிஸ் (1) 3ஆவது ஓவரிலும் ஆட்டம் இழந்தனர்.
ஆனால், அவிஷ்க பெர்னாண்டோவும் சரித் அசலன்கவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 262 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.
அவிஷ்க பெர்னாண்டோ 113 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 126 ஓட்டங்ளைப் பெற்றார்.
தொடர்ந்து 4ஆவது விக்கெட்டில் நுவனிது பெர்னாண்டோவுடன் 69 ஓட்டங்களைப் பகிர்ந்த சரித் அசலன்க, 5ஆவது விக்கெட்டில் தசுன் ஷானக்கவுடன் மேலும் 77 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
சரித் அசலன்க 142 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், 16 சிக்ஸ்களுடன் 206 ஓட்டங்களைக் குவித்தார்.
நுவனிது பெர்னாண்டோ 20 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் லஹிரு மதுஷன்க 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
யாழ்ப்பாணம் அணியில் இடம்பெற்ற ஒரே ஒரு யாழ். வீரர் வியாஸ்காந்த் விஜயகாந்த் 10 ஓவர்களில் 59 ஓட்டங்களைக் கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 47.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 321 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
யாழ்ப்பாணம் அணி சார்பாக மூன்று துடுப்பாட்ட வீரர்கள் 40க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஏனையவர்கள் போதிய பங்களிப்பு வழங்காததால் அவ்வணி தோல்வியைத் தழுவியது.
லஹிரு மதுஷன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 86 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 104 ஓட்டங்களைக் குவித்தார்.
அவரை விட ரொன் சந்த்ரகுப்த 56 ஓட்டங்களையும் மொஹம்மத் ஷமாஸ் 49 ஓட்டங்களையும் ரன்மித் ஜயசேன 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் டிலும் சுதீர 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சரித் அசலன்க 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் துஷார 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த சரித் அசலன்க ஆட்டநாயகனாகத் தெரிவானார்.
சம்பியனான கொழும்பு அணிக்கு வெற்றிக் கிணணத்துடன் 30 இலட்சம் ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் அணிக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.
இதனைவிட ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் வென்ற சரித் அசலன்கவுக்கு மொத்தமாக 22 இலட்சத்து 50,000 ரூபா பணப்பரிசு கிடைத்தது.
சுற்றுப் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக அஹான் விக்ரமசிங்க, சிறந்த பந்துவிச்சாளராக முடித்த லக்ஷான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு தலா 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.