அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதோடு ஏனைய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களமிறங்கவுள்ள நிலையில் அதன் வியூகங்களை வெளிப்படுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறையும் தனியாகவும் கூட்டாகவும் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளோம்.
அதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் தனியாக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அந்த வகையில், எமது கட்சியானது வன்னி, புத்தளம், குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டிணைந்து போட்டியிடுவதற்கும் பேச்சுக்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
இதேநேரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை புதியவர்களையும், துறை சார்ந்த அனுபவம் வாய்ந்தவர்களையும் களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளது.
அத்துடன் வேட்பாளர்களுக்கான நேர்காணல்கள் இன்று முதல் கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது என்றார்.