மாநிலங்களவை திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி ஆர். சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில்தான், அந்த தனி நீதிபதி விக்டோரியா கவுரியின் உத்தரவை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி. ஆர் சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை மேல்முறையீடு செய்யும் போது அந்த வழக்கிலிருந்து தனி நீதிபதி விலக வேண்டும்.
ஆனால் இந்த வழக்கில் நீதிபதி சுப்பிரமணியனுடன், தனி நீதிபதி விக்டோரியா கவுரியும் இருந்தார். இந்த மேல் முறையீட்டு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், டிஎன்பிஎஸ்சி வழக்கில் நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவை சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் நீதிபதி ஆர்.சுப்பிரமணியனோ, நீதிபதி கவுரியை இந்த வழக்கிலிருந்து வில்சன் விலக சொல்வதாக நினைத்துக் கொண்டு அவரை கோர்ட்டிலேயே அவதூறாக பேசியதாக தெரிகிறது.
வழக்கு விசாரணைகளின் போது Open கோர்ட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவனமுடன் பேச வேண்டும் என பலமுறை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி வில்சனிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக, நீதிபதி ஆர் சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் மற்றும் வழக்கில் ஆஜரான வழக்கறிஞரை நோக்கி கண்ணிய குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும், வழக்கறிஞர்களை உரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதை உறுதிசெய்ய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தாலோ, தவறாக நடந்து கொண்டாலோ, அதுகுறித்து வழக்கறிஞர்கள் புகார் அளிக்க குறை தீர்ப்பு நடைமுறை கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.