நாளுக்கு நாள் ரயில்களில் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது.. இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதுடன், ரயில்வே நிர்வாகமும் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகிவிடுகிறது. நேற்றுகூட, ரயில்களில் நடந்த சோதனையில் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.
இந்திய மக்களுக்கு ரயில் சேவைகளின் தேவைகள் தவிர்க்க முடியாதது.. அதனால்தான், ரயில்களின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.. ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதாலும், பாதுகாப்பு நிறைந்ததாலும், விரைந்து பயணிக்க முடியும் என்பதாலும்தான், சாதாரண மக்களும், ரயில்களை பயன்படுத்துகிறார்கள்.
திருட்டு சம்பவம்: எனினும் ரயில்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதாவது, ரயில்களில் வழங்கப்படும் பெட்ஷீட், தலைகாணி, டவல் உள்ளிட்டவற்றையும், சிலர் கையிலேயே எடுத்து சென்றுவிடுகிறார்களாம்.. இதனால், இந்திய ரயில்வேக்கு தொடர்ந்து புகார்கள் வருவதுடன், ரயில்வே துறைக்கு பெரும் நஷ்டமும் ஏற்படுகிறது.. இப்படித்தான், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மண்டலத்தில் உள்ள ரயில்களில் சுமார் 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மக்கள் திருடிச்சென்றுவிட்டார்களாம்.
ரயில்வே நிர்வாகம்: இதுபோன்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்தும்கூட திருட்டு சம்பவங்கள் குறையவில்லை.. எனவே, பெட்ஷீட் மற்றும் தலையணை திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, ரயில்களின் ஏசி பெட்டிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க மேற்கு ரயில்வே முடிவு செய்திருப்பதாக தகவல்களும் வெளியாகியிருந்தன..
குறிப்பாக, ரயிலில் பயணம் செய்யும்போது மட்டுமே, அந்த துண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், பெட்ஷீட் உள்ளிட்டவற்றை கையோடு எடுத்துச்செல்ல வேண்டாம் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
சொத்துக்கள்: ரயில்வே சொத்துகளை திருடுவது, சேதப்படுத்துவது என தெரிந்தால், ரயில்வே சொத்து சட்டம் 1966ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இதற்கான அதிகபட்ச தண்டனை 5 ஆண்டுகள் ஆகும்.. ஆனால், அபராதம் எவ்வளவு என்பது நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும். இப்படி ரயில்களில் உள்ள பொருட்களை திருடுவது ஒருபக்கம் என்றால், ரயில் பயணிகளிடம் நடக்கும் திருட்டுகள் அதற்கு மேல் அதிகரித்து வருகின்றன.. தற்போதுகூட ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது..
ஓடும் ரயிலில் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த சிறுமி, தன்னுடைய செல்போனில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென ஜன்னலில் கையை விட்டு, சிறுமியிடமிருந்து செல்போனை பறித்து ஓடுகிறார்.
செல்போன்: இச்சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால், சிறுமியிடம் அந்த நபர் செல்போனை பறிக்க முயல்கிறார். ஆனால், சிறுமியோ, கெட்டியாக செல்போனை பிடித்து கொண்டு, 'அம்மா, என் போன்… என் போனை எடுக்கறாங்க என்று கத்தி கூச்சலிடுகிறாள்.. ஆனாலும் அந்த நபர் செல்போனை பறித்து கொண்டு, மின்னல் வேகத்தில் மறைந்துவிடுகிறார். இந்த வீடியோதான் இணையத்தில் பரவி வருகிறது.
நேற்று ஒரு சம்பவம் நடந்து உத்தரப்பிரதேச மாநிலத்தை அதிர வைத்து வருகிறது.. உத்தரப்பிரதேசம் முரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் S 4 மற்றும் S 5 பெட்டிகளில் உள்ள கழிவறைகளில் இருந்து வினோதமான சத்தம் கேட்டிருக்கிறது.. எனவே, பயணிகள் அங்கிருந்த போலீசாருக்கு தகவல் தந்து வரவழைத்துள்ளனர். பிறகு இந்த 2 பெட்டிகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
ரயில்வே போலீஸ்: தினமும் ரயில்வேயில் பலத்த பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வந்த போதிலும்கூட, எப்படி இந்த கஞ்சா பொட்டலங்கள் ரயிலுக்குள் வந்தன என்பது போலீசாரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டதாம். இந்த கஞ்சா மதிப்பு ரூ. 12 லட்சம் வரை இருக்கும் என்கிறார்கள்.. எனவே, சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து ரயில்களில் உள்ள கழிவறைகளிலும் சோதனை நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.