மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பிரிட்டன் எண்ணெய் கப்பமீது ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனானிலும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை எதிர்த்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந் நிலையில் ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
செங்கடல் வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம் என்று ஹவுதிக்கள் தரப்பில் இருந்து கப்பல் நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் செங்கடலில் வந்த பிரிட்டன் எணணெய் கப்பல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர்.
கார்டெலியா மூன் (Cordelia Moon) எனப்படும் பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் படகை மோதவைத்து ஹவுதிக்கள் வெடிக்கச்செய்துள்ளனர்.
ஏமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான ஹுதைதா (Hodeidah) வில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் நடந்த இந்த தாக்குதல் நடந்துள்ளது.
கார்டெலியா மூன் கப்பல் மீது 8 பாலிஸ்டிக் மிசைல்களை ஏவியும், டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தினோம் என்று கூறியுள்ள ஹவுதிக்கள், கப்பல் தீப்பற்றி எரியும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.