துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 10 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா மிக இலகுவாக வெற்றிகொண்டது.
ஒருபக்க சார்பாக அமைந்த அப் போட்டியில் நொன்குலுலேக்கோ மிலாபாவின் துல்லியமான பந்துவீச்சும் அணித் தலைவி லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் தென் ஆபிரிக்காவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.
மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 119 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 119 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
லோரா வுல்வாட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 119 ஓட்டங்கள் ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் அதிசிறந்த இணைப்பாட்டமாக இப்பொதைக்கு பதிவாகியுள்ளது.
அத்துடன் இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் அரைச் சதங்கள் குவித்த முதலாவது வீராங்கனைகள் என்ற பெருமையை அவர்கள் இருவரும் பெற்றுக்கொண்டனர்.
லோரா வுல்வார்ட் 55 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள் உட்பட 59 ஓட்டங்களுடனும் தஸ்மின் 52 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள் உட்பட 57 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.
இவ் வருட உலகக் கிண்ணத்தில் முதல் 3 ஆட்டங்களில் இதுவரை முதலில் துடுப்பெடுத்தாடிய 3 அணிகளும் 120 ஓட்டங்களுக்கு குறைவாகவே எடுத்துள்ளன.
மேற்கிந்திய தீவுகளின் வீராங்கனைகள் ஓட்டங்களை வேகமாக பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.
துடுப்பெடுத்தாடிய அனைவரும் பெரும்பாலும் ஒரு பந்துக்கு ஒரு ஓட்டம் என்ற ரீதியில் ஓட்டங்களைப் பெற்றனர்.
ஸ்டெபானி டெய்லர், ஸய்டா ஜேம்ஸ் ஆகிய இருவரும பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 35 ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகளை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டது.
ஸ்டெபானி டெய்லர் 44 ஓட்டங்களுடனும் ஸய்டா ஜேம்ஸ் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
ஷெமெய்ன் கெம்ப்பெல் 17 ஓட்டங்களையும் டியேந்த்ரா டொட்டின் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
அபாரமாக பந்துவீசிய நொன்குலுலேக்கோ மிலாபா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.