கூல் லிப், குட்கா, புகையிலை பயன்பாடுகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும், கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிபதி பரத சக்கரவர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் வழக்குகளை விசாரணை செய்து வருகிறார்.
இதில் அதிகமாக மாணவர்கள், இளைஞர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கணேஷ் ஹான்ஸ் போன்ற புகை பொருட்களை பயன்படுத்தியதாகவும், கூல் லிப் என்ற குட்காவை அதிகம் விற்பனை செய்ததாகவும் போலீசாரால் வழக்கு பதிவு செய்து ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
கடந்த விசாரணையின் போது நீதிபதி பள்ளி மாணவர்கள் இந்த கூல் லிப் குட்கா வகைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் மிகுந்த வேதனையாக உள்ளது. எனவே ஏன் கூல் லிப் குட்கா வகைகளை இந்தியா முழுவதும் தடை செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறார்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரத சக்கரவர்த்தியின் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி, தமிழக அரசு தமிழகத்தில் கூல் லிப் , குட்கா புகையிலை பொருட்களை முற்றிலும் தடை செய்து உள்ளது இருந்தபோதும் அண்டை மாநிலங்களில் இருந்து விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமாக கொண்டு வருகின்றனர்.
அவர்கள் கடுமையான நடவடிக்கையின் மூலம் தடுக்கப்பட்டு வருகின்றனர். மீறி விற்பனை செய்யும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பலர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும். மேலும் நமது அருகாமை மாநிலங்களின் அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
அதில் குட்கா பொருட்களின் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் குட்கா புகையிலை பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை கடிதம் அனுப்பி உள்ளது என வாதிட்டார். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூல் லிப், குட்கா வகை பொருட்கள் வேறு மாநிலங்களில் தான் அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தின் எந்த தயாரிப்புக்கும் அனுமதி வழங்கவில்லை. மேலும் இவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஒன்றிய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, தற்போது கூல் லிப், குட்கா புகையிலை பொருள் வாலிபர்கள் இளைஞர்களை தாண்டி பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது. பல பள்ளி மாணவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வாய் புற்று நோய் பாதிப்புக்கு உள்ளாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும். அரசு கள்ள சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது எவ்வாறு குண்டர் சட்டம் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கிறார்களோ? அதே போல கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதனை முற்றிலும் தடை செய்ய முடியும்.
எனவே, இந்த நீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு விரைவில் இதுபோன்ற பொருட்களை தடை செய்வது குறித்து உரிய வழிமுறைகளை உத்தரவுகளாக பிறப்பிக்க உள்ளது எனக் கூறி தீர்ப்புக்காக வழக்கை ஒத்தி வைத்தார்.