விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ப கொண்டு செல்வதுடன் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்கிறபோது இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ப லாபம் கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
இன்றைய தினம் (2) திருநெல்வேலி விவசாய கண்காட்சியினை ஆரம்பித்துவைத்து, அதில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி” எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி யாழ்ப்பாணம், திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறுதானியங்கள், பயிர் உற்பத்திகள் உட்பட பல்வேறு வகையான விவசாய செயல்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் விவசாய நிறுவனங்களை சார்ந்தவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.