இந்தியாவின் வட எல்லை பகுதியான ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மூன்று கட்டங்களாக பொது தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர்கள் உற்சாகத்துடன் பங்கு பற்றி தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மூன்று கட்டங்களாக இந்திய தேர்தல் ஆணையம் பொது தேர்தலை நடத்துகிறது.
இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி அன்று நடைபெற்றது. இதன் போது 61.13 சதவீதம் வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட தேர்தல் ஒக்டோபர் 25 ஆம் திகதியன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 56.79 சதவீத வாக்கு பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
முதல் கட்ட தேர்தலில் 24 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டத் தேர்தலில் 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் மீதமுள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 28.12 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த மூன்றாவது கட்ட தேர்தலில் ஜம்மு பிராந்தியத்தில் 24 தொகுதிகளுக்கும், காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 415 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
தேர்தல் ஆணையம் 5,060 வாக்கு சாவடிகளை அமைத்து விரிவான பாதுகாப்பு ஏற்பாட்டையும் மேற்கொண்டு இருக்கிறது.
குப்வாரா மாவட்டத்தில் வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் ஜனநாயகத்தை கொண்டாடும் வகையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதியில் மரக்கன்றை பதியமிடுகிறார்கள்.
இந்தத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி , காங்கிரஸ் கட்சி , பாரதிய ஜனதா கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது. மேலும் இந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர்களும் போட்டியிடுகிறார்கள்.
இன்று மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அதன் பிறகு அனைத்து வாக்குப்பதிவு விவரங்களும் சேகரிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமான வாக்கு சதவீதம் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
மேலும் ஜம்மு & காஷ்மீரில் நடைபெற்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி எதிர்வரும் எட்டாம் திகதியன்று மேற்கொள்ளப்படுகிறது.
இதனிடையே வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு ஒக்டோபர் ஐந்தாம் திகதியன்று மாலை வெளியாக கூடும் என அவதானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.