Bootstrap

இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கான சிறந்த தருணம்

இலங்கை சிறுவர் தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டின் அரசியல் களநிலவரம் பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றது. அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு அடுத்ததாக மிகவும் விரைவில் பொதுத் தேர்தலும் இடம்பெறவுள்ளது.

எனவே, இச்சூழ்நிலையில்  மிகவும் இலகுவில் பாதிப்புறக்கூடிய மற்றும் சமூகத்தின்  இன்றியமையாத அங்கத்தவர்களான சிறுவர்களை மீண்டும் முன்னுரிமைப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.  அரசியல் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் தெரிவுகள் இலங்கை சிறார்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே, இத்தருணத்தில் சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் 3(1) ஆம் உறுப்புரையில் பொதிந்துள்ள ‘சிறுவர்களுடன் சம்பந்தப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளிலும் அவர்களின் நலன்களுக்கே முன்னுரிமை வழங்குவது அவசியம்’எனும் வாசகங்களின் ஆழத்தை புரிந்து செயலாற்றுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

1991 ஆம் ஆண்டு சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயத்தை ஏற்று கைச்சாத்திட்ட முதன்மையான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதுடன் சிறுவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் கண்டுள்ளது . இலங்கை 1989 ஆம் ஆண்டு உலகளாவிய சிறுவர் தடுப்பூசியேற்றல் என்ற இலக்கினை எய்தது முதல் 1998 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவியது வரை நாட்டின் பொதுக் கொள்கைகளில் சிறுவர்களை முன்னுரிமைப்படுத்திய பெருமைமிக்க வரலாற்றினைக் கொண்டுள்ளது.

என்றாலும், இன்னும் நிறைவேற்றுவதற்கு நிறைய விடயங்களுள்ளன. இதுவே, அதற்கான பொருத்தமானதருணமாகும். அதாவது, அனைத்து தேசிய கொள்கைகளிலும் சிறுவர்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தை முன்னுரிமைப்படுத்தி நாட்டின் நிர்வாகத்தில் அவர்களின் விடயங்களுக்கு கவனம் செலுத்துவதை உறுதிப்படுத்துவது அவசியம்.

அரசியல் செயன்முறைகளில் சிறுவர்களைப் பாதுகாத்தல்

நாட்டின் அரசியல் களநிலவரம் மாற்றங்களுக்கு உட்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இத்தகைய திடீர் மாற்றங்களின் போது மிகவும் இலகுவில் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களாகும் என்பதை நினைவிற்கொள்வது மிகவும் முக்கியமானது.  அந்த வகையில், தவறாக வழிநடாத்தப்படும் அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் ஏனைய பாதகமான முடிவுகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது  அனைவரதும் பகிரப்பட்ட பொறுப்பாகும்.

இச்சந்தர்ப்பத்தில், சிறுவர்களுககு உரித்தாகா அரசியல் கோட்பாடுகளை அல்லது கோசங்களை எழுப்புவதற்கோ அல்லது ஊக்குவிப்பதற்கோ அவர்களை பயன்படுத்துவதில்லை என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் நலன்களுககு முக்கியத்துவமளிக்கப்பட வேண்டுமென்ற சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் வழிகாட்டல்களை  இலங்கையின் அரசியல் செயற்பாட்டாளர்கள்  கடைப்பிடிக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துவதும் இன்றியமையாதது.

மேலும், சிறுவர்களைப் பாதிக்கின்ற விடயங்களில் அவர்களின் கருத்துக்களுக்கு வாய்ப்பளிப்பது  அவசியம். சிறுவர்களை தீங்குகள் அல்லது தேவையற்ற வற்புறுத்தல்களிருந்து பாதுகாத்து அவர்களின் எதிர்காலம் பற்றிய கலந்துரையாடல்களில் பங்கேற்கச் செய்வது பாதுகாவலர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் அல்லது ஒட்டுமொத்த சமூகம் என்ற வகையில் வயதில் மூத்தோரின் பொறுப்பாகும்.

சிறுவர்களுக்கான பிரதான சேவைகளில் முதலீடு செய்தல்

எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திலும் சுகாதாரம் மற்றும் கல்வி மீதான முதலீடுகள் முக்கியமானவை. துரதிஷ்டவசமாக சர்வதேச அளவுகோல்களுடன் ஒப்பிடுகையில் இத்துறைகளில் இலங்கையின் செலவினங்கள் மிகவும் குறைவு. இலங்கை அரசாங்கம், 2023 ஆம் ஆண்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.6 சதவீதத்தினையே கல்விக்காக ஒதுக்கியது.

இது சர்வதேச ரீதியான பரிந்துரைத்துள்ள  4 முதல் 6 சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான ஒதுக்கீடாகும். அவ்வாறே, சுகாதாரத் துறை மீதான செலவினமும் வெறும் 1.6 சதவீதமாகும். முழுமையான சுகாதார தழுவலுக்கு அவசியமான 5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இதுவும் மிகவும் குறைவானது.

எனவே, இலங்கை சிறுவர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து துறைகளிலும் அதன் முதலீட்டினை கணிசமானளவு அதிகரிக்க வேண்டும். ஏனைய முதலீடுகளுடன் பொது நிதிகளை மீண்டும் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் கவனம் செலுத்துவது அவசியம்.

இது வெறுமனே வரவு செலவுத்திட்டப் பிரச்சினையல்ல. மாறாக, ஒரு தார்மீக கடமையுமாகும். போதிய வளங்கள் இல்லாத போது சிறுவர்களின் உரிமைகளும் நலன்களும் ஆபத்தில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதன் விளைவுகளை இத்தலைமுறை மட்டுமல்ல எதிர்கால தலைமுறைகளும் உணரும் என்பதில் சந்தேசமில்லை.

சிறுவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு தீர்வுகாணல்

இன்று இலங்கை சிறுவர்கள் எதிர்கொள்ளும் மிகவும் முக்கியமான  சவால்களுள் ஒன்று ஊட்டச்சத்துக் குறைபாடாகும். தற்போது ஐந்து சிறுவர்களுள் மூவர் ஏதோ ஒரு வகை ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களின் உடல் மற்றும் அறிவுத் திறன்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இது வெறுமனே ஒரு சுகாதாரப் பிரச்சனையல்ல. மாறாக, ஒன்றிணைந்த, பல்துறைசார் துலங்கல்களை வேண்டிநிற்கின்ற பல் பரிமான பிரச்சனையாகும். பல்துறை ஊட்டச்சத்துச் செயல்திட்டம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தாலும், அதன் முழுமையான அமுலாக்கம் இதுவரையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.

சிறுவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு தீர்வுகாண்பதற்கு தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் மிகவும் பலமான தலைமைத்துவமும் ஒன்றிணைந்த நடவடிக்கைகளும் தேவைப்படுவது போன்று இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு போதியளவு நிதி ஒதுக்கீடுகளும் அவசியமாகின்றன.

எனவே, சகல தரப்பினரும் ஒன்றிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்காத போது எமது ஒட்டுமொத்த சிறுவர் தலைமுறையும் தமது வாழ்நாள் முழுவதும் பல்வேறு சுகாதாரப் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

முன்பிள்ளைப் பருவப் பராமரிப்பு வளர்ச்சியை முன்னுரிமைப்படுத்துதல்

ஒரு குழந்தை கருத்தரித்ததிலிருந்து இரண்டு வயது வரையான முதல் 1,000 நாட்களே குழந்தையின் மூளை துரிதமாக விருத்தியடைகின்ற பருவமாக இருப்பதோடு அது குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான அத்திவாரத்தை இடுகின்றது.

ஒரு குழந்தையின் முதல் ஆரம்ப வருடங்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. ஏறத்தாழ 90 சதவீதமான மூளை விருத்தி ஒரு குழந்தையின் முதல் ஆறு வயதிற்குள் இடம்பெறுவதாக ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே, முன்பிள்ளைப் பருவப் பராமரிப்பு மற்றும் விருத்தியில் மேற்கொள்ளும் முதலீடே எந்தவொரு நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கான சிறந்த முதலீடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இலங்கை அண்மையில் முன்பிள்ளைப் பருவப் பராமரிப்பு மற்றும் விருத்தி தொடர்பாக தேசிய பல்துறைசார் மூலோபாய செயல்திட்டத்தினை (2024-2028) தயார்செய்து இத்துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. என்றாலும், இதனை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு பலதுறைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுவதுடன் அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலிருந்து போதுமான முதலீடுகளும் தேவைப்படுகின்றன. அப்போது மாத்திரமே, இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொரு பிள்ளைக்கும் நியாயமான துவக்கம் இருக்கும் என்பதை எங்களுக்கு உறுதிப்படுத்த முடியும்.

குடும்பங்களிலிருந்து பிரிக்கப்படுவதை தடுத்தல்

இலங்கையில் ஏறத்தாழ 10,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் நிறுவன ரீதியான பராமரிப்பில் வாழ்கின்றனர். இது அவர்களின் விருத்திக்கு உதவுவதற்குப் பதிலாக உண்மையிலேயே அவர்களை துன்புறுத்துவதாகவே அமைகின்றது. இங்கு கவனத்திற்கொள்ள வேண்டிய அம்சம் யாதெனில், இவ்வாறான பிள்ளைகளுள் கிட்டத்தட்ட 90 சதவீதமானோருக்கு குடும்பங்கள் இருப்பதுடன் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கினால் அந்தப் பிள்ளைகளுக்கும் தமது குடும்பத்துடன் இணைந்து வாழ முடியும்.

எனவே, நிறுவன ரீதியான பராமரிப்பிலுள்ள பிள்ளைகளுக்கு குடும்பத்தினை மையமாகக்கொண்ட தீர்வுகளை வழங்கும் நோக்கில் அரசாங்கம் மாற்றுப் பராமரிப்புக் கொள்கையை அங்கீகரித்துள்ளது. அனைத்து அமைப்புக்களிலும் உடல் ரீதியான தண்டனையை தடைசெய்து சிறுவர்களுக்கெதிராக வன்முறையைக் குறைத்து இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதென்பது சிறுவர்கள் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றும் தம்மை போஷிக்கும் சூழலில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பதையும் உறுதிப்படுத்துவதற்கு இன்றியமையாதது.

கல்வியைப் பாதுகாப்பதும் கற்றல் இழப்புக்களைக் குறைத்தலும்

கொவிட்-19 தொற்று நோய் மற்றும் அதனைத் தொடர்ந்து நாடு முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளால் இலங்கையின் கல்வி முறைமை அண்மைய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டது.

நீண்டகாலமாக பாடசாலைகள் மூடப்பட்டமை மற்றும் பொருளாதாரக் கஷ்டங்கள் போன்ற காரணங்களால் கல்வி வாய்ப்புக்களின் ஏற்றத்தாழ்வுகள் தீவிரமடைந்தன. அந்த வகையில, தரம் மூன்றினைச் சேர்ந்த மாணவர்களுள் வெறும் 14 சதவீதத்தினருக்கே எதிர்பார்க்கப்பட்ட எழுத்தறிவுத் திறன்கள் இருப்பதாகவும், வெறும் 15 சதவீதத்தினருக்கு மட்டுமே அடிப்படை எண்ணறிவுத் திறன்கள் இருப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆகவே, கல்வி இழப்புக்களை மீட்டெடுப்பதற்கு குறிப்பாக எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் அடிப்படைக் கற்றல் வாய்ப்புக்களை முன்னுரிமைப்படுத்துவது அசியம். இலங்கை சிறுவர்களுக்கு 21ஆம் நூற்றாண்டினை வெற்றிகொள்வதற்கான ஆற்றல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக முன்பிள்ளைப் பருவ கல்வியை பலப்படுத்துவதும் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துவதும் கற்றல் இடர்களுக்கு முகங்கொடுக்கின்ற மாணவர்களுக்கு ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமான மூலோபாயங்களாகும்.

சமூகப் பாதுகாப்பினை பலப்படுத்துதல்

கொவிட்-19 தொற்று நோயின் பாதிப்புக்களை அடுத்து நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையின் அதிகமான குடும்பங்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்பட்டனர். இந்தக் குடும்பங்களை பழைய நிலைமைக்கு மீட்டெடுப்பதற்கு தேவையான உதவிகளை வழங்கவும் எந்தவொரு பிள்ளையும் விடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது இன்றியமையாதது.

இலங்கை விருத்திசெய்துள்ள தேசிய சமூகப் பாதுகாப்புக் கொள்கையானது வறுமை மற்றும் இலகுவில் பாதிப்புக்குள்ளாகும் நிலையைக் குறைப்பதற்கு அவசியமானது. புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதால் மிகவும் பின்தங்கிய பின்னணிகளைக் கொண்ட சிறுவர்கள் முதல் சகல சிறுவர்களுக்கும் தேவையான உதவிகளும் ஒத்துழைப்புக்களும் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக போதிளவு நிதி ஒதுக்கீடுகளை ஏற்பாடு செய்வதோடு பொருத்தமான சட்டங்களை வகுப்பதற்காக இந்தக் கொள்கைளை நடைமுறைக்குக் கொண்டுவருவது இன்றியமையாதது.

காலநிலை நடவடிக்கைகளை முன்னுரிமைப்படுத்துதல்

காலநிலை நெருக்கடிகளின் போது சிறுவர்களே முதலில் பாதிக்கப்படுகின்றனர். அந்தவகையில், 2030 ஆம் ஆண்டளவில் ஆறு இலங்கையர்களில் ஒருவர் வெள்ளப் பெருக்கேற்படும் நிலங்களில் வாழக்கூடும் என்றும், தண்ணீர் பற்றாக்குறை, போதிய விளைச்சலின்மை மற்றும் உட்கட்டுமான  வசதிகள் சேதமடைதல் ஆகியன மிகவும் சாதாரண  நிகழ்வுகளாக இருக்கக்கூடுமெனவும் காலநிலை பற்றிய கணிப்புக்கள் எதிர்வுகூறுகின்றன.

கடந்த இரு தசாப்தங்களாக பருவநிலையுடன் தொடர்புடைய இழப்புக்கள் வருடத்திற்கு 313 மில்லியன் டொலரை தாண்டியுள்ளதுடன் இலகுவில் பாதிப்புறக்கூடிய குடும்பங்களுக்கு இந்நிலைமையை சமாளிப்பது மிகவும் சிரமமாகவுள்ளது.

சிறுவர்கள் வளர்ச்சியடையும் பருவத்தில் அவர்களின் உடல் நிலைமை காலநிலையுடன் தொடர்புடைய நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உளவியல் அதிர்ச்சி போன்ற  அசாதாரண நிலைகளுக்கு எளிதில் ஆளாகுவதால் அவர்களுக்கு கணிசமான சுமைகளை தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும்.

பகிரப்பட்ட பொறுப்பு

நாம் எதிர்காலத்தை இலக்காகக்கொண்டு செயற்படுவதால், நாம் இன்று தீர்மானிக்கும் தெரிவுகளின் அடிப்படையிலேயே இலங்கை அதன் சிறுவர்களுக்கு எந்த மாதிரியான நாடாக இருக்கும் என்பதை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். எனவே, எந்தவொரு பிள்ளையும் தவறவிடப்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் இலங்கை அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும். இந்த சர்வதேச சிறுவர் தினத்தில் நாம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களிலும் சிறுவர்களை முதன்மைப்படுத்துவோம்.

சிறுவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதென்பது அரசியல் மற்றும் சமூக அரங்குகளில் பேசப்படும் வழிகாட்டல் கோட்பாடுகளாக மட்டுமல்லாது இலங்கையர் என்ற வகையில் எம் அனைவரதும் பகிரப்பட்ட பொறுப்பாகும். அப்போது மாத்திரமே அனைத்து சிறுவர்களுக்கும் மிகவும் சிறந்ததொரு எதிர்காலத்தை எம்மால் உருவாக்கிக்கொடுக்க முடியும்.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural Newspaper Canada is the first human rights-focused newspaper launched from abroad to serve the Sri Lankan Tamil community. Based in Canada, it aims to highlight human rights issues, political developments, and social challenges faced by Sri Lankan Tamils, both in Sri Lanka and the diaspora. By amplifying marginalized voices, it seeks to foster dialogue and advocate for justice, while offering a platform for critical news, opinions, and analysis from a Tamil perspective.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc