இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்கவின் பயணம் இலகுவானதாக இருக்கவில்லை. ஆனால், அவரது முன்னையவர்களுக்கு அது மலர்ப்பாதையாக காணப்பட்டது.
மிகச் சாதாரண ஆரம்பமும் கடும் போராட்டங்களும் அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக காணப்பட்டன. பல போராட்டங்களை அவர் எதிர்கொண்டார்.
“ஒரு முறை பௌத்த விகாரையொன்றின் மதகுரு அனுரகுமார திசநாயக்கவை துறவறத்துக்கு அனுப்புமாறு கேட்டார். அப்போது அவருக்கு 12 வயது. நான் அதனை ஏற்கவில்லை” என்கிறார் ஜனாதிபதியின் தாயார் டி.எம்.சீலாவதி.
“பல வருடங்களின் பின் பொலிஸார் அவரை தேடிக்கொண்டிருந்ததால் தனது தந்தையின் இறுதி நிகழ்வில் அனுரகுமார கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து அவர், “மகன் பிறந்து ஆறாம் மாதம் நான் அவரது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் கொண்டுபோய் கொடுத்தேன். அவர் அதிர்ச்சியடைந்து, எனது முகத்தை பார்த்துவிட்டு ’உங்கள் மகன் ஒரு நாள் அரசாள்வான்’ என்றார்” என்றும் கூறுகிறார்.
கலாவே தேர்தல் தொகுதியில் மகாவலி எச் பிரிவின் கீழ் காணப்படும் சாதாரண வீடொன்றில் நான் ஜனாதிபதியின் தாயாரை சந்தித்தேன். 1972இல் அவர்கள் அந்த வீட்டில் குடியேறியுள்ளனர்.
தம்புத்தேகம என்ற விவசாய கிராமத்திலிருந்து கரடுமுரடான வீதி ஊடாக பயணம் செய்து ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லவேண்டும்.
ஒரு விளையாட்டு மைதானத்தை கடந்து செல்லவேண்டும்.
அமைதியான கிராமத்துக்குள் கிரிக்கெட் நுழைந்த பிறகு, அங்கு புற்கள் இல்லாமல் போய்விட்டன. ஆடுகளத்தின் மூலம் அது தெரிகின்றது.
அதற்கு அருகில் பௌத்த ஆலயம். சில நிமிடங்களின் பின்னர் முட்கம்பிகளினால் பாதுகாக்கப்பட்ட வீடு.
வீடு திருத்தப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன - ஒரு பகுதி கூரையில் புதிய சீட்கள் காணப்படுகின்றன.
ஜனாதிபதியின் சகோதரி சிரியலதா என்னை சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவரது அம்மாவிடம் அழைத்துச்செல்கின்றார். தாயார் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருக்கின்றார்.
'அம்மா ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு செய்தியை பார்ப்பார். எனது சகோதரன் தொலைக்காட்சியில் தோன்றும்போதெல்லாம், எனது மகனா என கேட்பார்" என்கிறார் சகோதரி சிரியலதா.
'அம்மா மீது எனது சகோதரனுக்கு பாசம் அதிகம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவை வந்து பார்ப்பார்" என்கிறார் அவர்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிறு வயது நாட்களை அவரது அம்மா நினைவுகூருகிறார்.
“அவர் பட்டம் விடுவார். நீச்சலடிப்பதில் அதிக நேரத்தை செலவிடுவார். அருகிலுள்ள நலாச்சியா குளத்துக்கு செல்வார். அது வீட்டிலிருந்து ஐந்து நிமிட தொலைவில் உள்ளது” என்கின்றார் ஜனாதிபதியின் தாயார்.
தனது மகன் வாசிப்பின் மீது தீவிர ஆர்வம் உள்ளவர் என்கின்றார் ஜனாதிபதியின் தாயார். 'புத்தகங்கள் அவருக்கு சாப்பாடு போன்றவை. எங்கள் வீட்டுக்கு அருகில் அரலிய மரம் உள்ளது. மரத்தின் கிளையில் அமர்ந்திருந்து வாசிப்பார்" என சிரித்தபடி தெரிவிக்கின்றார் அவரது தாயார்.
'உணவு உண்பதற்காக மேசையில் அமர்ந்தால் அவருக்கு புத்தகமோ அல்லது பேப்பரோ தேவை. படியுங்கள் என நான் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்றும் இருந்ததில்லை. அவர் தானாகவே படிப்பார்" என்கின்றார் அவர்.
அனுரவின் தந்தை நிலஅளவையாளர் ஆணையாளர் திணைக்களத்தில் பணியாற்றினார். அவர் 1982இல் காலமானார். அதுவே எங்களுக்கு மிகவும் கஷ்டமான காலம். எனினும், அது தனது பயணத்தை தொடர்வது குறித்த அனுரவின் மன உறுதியை அதிகரித்தது” என்கிறார் சீலாவதி.
“உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையே அனுரகுமாரவின் அரசியல் ஆர்வம் தீவிரமடைந்தது. அவ்வேளை அவர் கொலைமிரட்டல்களை எதிர்கொண்டிருந்தார். அவருக்கு நெருக்கமாக இருந்த அவரது தந்தையின் சகோதரர் கொல்லப்பட்டார். எனது மகன் இன்றுள்ள நிலையை பார்த்து நான் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்” என்கிறார் அவரது தாயார்.