உலகின் மிக முக்கியமான பொருளாதார துறைகளில் ஒன்று சுற்றுலாத்துறை ஆகும். சுற்றுலாவின் மூலம் சர்வதேச நாடுகளின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை அறிந்துகொள்வதோடு, அந்நாடு சம்பந்தமான ஒரு புரிந்துணர்வும் ஏற்படுகிறது.
பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, மக்களுக்கிடையிலான தொடர்பு, நாடுகளுக்கு இடையிலான சமாதானம், மொழி ஆகியவற்றை மேம்படுத்தவும் இந்த சுற்றுலாத்துறை உதவுகிறது.
வருடந்தோறும் உழைத்துக்கொண்டிருக்கும் மனிதனுக்கு ஓய்வு, மன அமைதி, புத்துணர்வு, புத்தாக்கம், மகிழ்ச்சி, குடும்ப அன்னியோன்யம், சிறந்த நட்புக்களை வளர்த்தெடுப்பது அவசியமாக உள்ளது.
மன அழுத்தம், தீராத நோய், பிரச்சினைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை, சோகம், சோம்பேறித்தனம் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கான ஒரு மார்க்கமாக இன்று சுற்றுலா அமைந்துள்ளது. இதனாலேயே ஒவ்வொருவரும் தமது ஓய்வினைக் கழிப்பதற்காக உள்ளூர்களிலும் வெளியூர்களிலும் சுற்றுலா செல்வதனை வழமையாகக் கொண்டுள்ளனர்.
இன்று உலக நாடுகள் பலவும் தத்தமது வருமானத்தினை அதிகரித்துக்கொள்வதற்காக சுற்றுலாத்துறையினை பெருமளவு நம்பியுள்ளன.
உலக சுற்றுலா அமைப்பின் தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பயணம் மற்றும் சுற்றுலாவின் பங்களிப்பு சுமார் 1.6 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது உலக மொத்த தேசிய உற்பத்தியில் மூன்று சதவீதமாகும்.
சுற்றுலாத்துறையில் இன்று மருத்துவ சுற்றுலா, கல்விச் சுற்றுலா, கலாசார சுற்றுலா, சுற்றுச் சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, தொழில் சார் சுற்றுலா என பல வகைகள் உண்டு.
சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவதன் மூலமாக ஒரு நாட்டில் உள்ள பல்வேறு பிரிவினர் பயனடைகின்றனர்.
விமான சேவைகள் தொட்டு போக்குவரத்துத்துறை, ஹோட்டல் துறை, வரவேற்புத்துறை, தங்குமிட வசதிகள் செய்து கொடுப்பவர்கள், உணவுத்துறை, சுற்றுலாத்துறை வழிகாட்டிகள், வணிக விற்பனை நிலையங்கள், போன்ற துறைகளில் கடமையாற்றும் பல்வேறுபட்ட நபர்கள் தத்தமது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள இத்துறை உறுதுணையாக உள்ளது.
உலகில் உள்ள பத்து பேரில் ஒருவர் இன்று சுற்றுலா சார்ந்த துறைகளில் பணி புரிகின்றார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலக பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு இன்று முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
உலகத்திலுள்ள பல கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதும் சுற்றுலாத்துறைதான்!
உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) 1979ஆம் ஆண்டில் உலக சுற்றுலா தினத்தை கடைபிடிக்கத் தொடங்கியது. அதற்கான கொண்டாட்டங்கள் அதிகாரபூர்வமாக 1980ஆம் ஆண்டில் தொடங்கியது.
அன்றிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பினால் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி "உலக சுற்றுலா தினம்" அனுசரிக்கப்படுகிறது.
இத்தினத்துக்கான இந்த ஆண்டின் கருப்பொருள் "சுற்றுலா மற்றும் அமைதி" ( Tourism and Peace) என்பதாகும்.
நாடுகளுக்கு இடையில் அமைதியை ஊக்குவிப்பதில் சுற்றுலாவின் பங்கு முக்கியமானது ஆகும். சுற்றுலா மேற்கொள்வதன் மூலம் பல்வேறு கலாசாரங்களை, மக்களை, நாட்டின் புவியியல் அமைப்பினை அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகின்றது.
முதன் முதலில் உலக சுற்றுலா தினம் 1980ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா அமைப்பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் இந்த நிகழ்வானது இந்த ஆண்டு ஜோர்ஜியா நாட்டில் நடைபெறவுள்ளது.
கடந்த வருடங்களில் எம் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி, கொரோனா தாக்கம், போன்றவற்றின் காரணமாக உள்நாட்டு வர்த்தகங்கள் மாத்திரமல்லாமல், சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்து இருந்தது.
அந்நிய செலாவணியினை ஈட்டிக் கொடுக்கும் மூன்றாவது தரத்தில் இலங்கை சுற்றுலாத்துறை காணப்படுகிறது.
2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி வரை 1,1,98,059 உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுற்றுலா அபிவிருத்தி சபையானது குறிப்பிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது இது 56 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வருட இறுதியில் சுமார் 2.3 மில்லியன் உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருவார்களெனவும், இதன் மூலம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட முடியுமெனவும் எதிர்வுகூறப்படுகின்றது.
உலகப் பொருளாதார பேரவை ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலா செயற்பாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் இலங்கையானது 76ஆவது இடத்தை வகிக்கின்றது.
இந்தியாவின் புது தில்லியில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற "சர்வதேச சுற்றுலா விருதுகள் 2024" வைபவத்தில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) மதிப்புமிக்க "சிறந்த சர்வதேச சுற்றுலா சபை" எனும் விருதினைப் பெற்றமையானது பெருமைக்குரிய விடயமாகும்.
இலங்கையின் உல்லாசப் பிரயாணக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்கு வெளிநாடுகளில் இருக்கின்ற எமது தூதரகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
பாரம்பரிய தூதுவராலய கடமைகளுக்கு மேலதிகமாக இன்றைய தூதரகங்கள், நாடுகளின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு ஊக்குவிப்புக்கள், மக்கள் தொடர்பு, உல்லாசப் பிரயாணக் கைத்தொழில், காலநிலை மாற்றம், போன்ற பல விடயங்களை மேம்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்தி வருவதனை நாம் நோக்க முடியும்.
இது போல சர்வதேச மட்டத்தில் நடைபெறுகின்ற உல்லாச பிரயாண கைத்தொழில் தொடர்பான கண்காட்சிகளிலும் கலந்துரையாடல்களிலும் எமது நாடு தொடர்ச்சியாக பங்குபற்றி, அதன் மூலம் எமது நாட்டின் உல்லாசப் பிரயாணக் கைத்தொழிலை ஊக்குவிக்கின்றது.
சர்வதேச ரீதியாக எமது நாட்டுக்கு எதிராக, பாதகமான பிரயாண அறிவுறுத்தல்களை ஏனைய நாடுகள் அறிவிக்கின்றபோது, எமது தூதரகங்கள் அதற்கு எதிராக அந்நாட்டு அரசுகளுடன் கதைத்து அதனை சாதகமாக மாற்றிய நிகழ்வுகளையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
சில நாடுகளுக்கு இடையிலான நேரடி விமான சேவையினை மேம்படுத்துவதன் மூலம் அதிகளவிலான உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுக்க முடியும்.
மேற்கூறப்பட்ட காரணங்களின் மூலமாகத் தான் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
உல்லாச பிரயாணிகளின் பாதுகாப்பு, அவர்களது சுகாதாரம் ஆகியன இன்றியமையாதது. அவை உறுதிப்படுத்தப்படுகின்றபோது உல்லாசப் பிரயாணிகளின் வருகையானது இன்னும் அதிகரிக்கும் என்பது ஒரு கருத்து.
சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்!