தென்னிலங்கையின் பிராந்தியங்களில் இருந்து குறிப்பாக, சிங்கள பௌத்தர்கள் அதிக பெரும்பான்மையாக வாழும் பாகங்களில் இருந்து பெரும்பான்மையானவர்களின் ஆதரவைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதற்கு மாறாக, சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளின் குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கூடுதலான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள்.
அதன் விளைவாக, திசாநாயக்கவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக சிறுபான்மைச் சமூகங்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை அவரின் ஆதரவாளர்கள் கண்டனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். திசாநாயக்கவுக்கு பதிலாக பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களிப்பதற்கு இந்த சமூகங்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள் என்று வாதிடும் அவர்கள் அரசியல் யதார்த்தங்களை விளங்கிக்கொள்ளாதவர்களாக "அறிவிலிகள்" என்று அந்த மக்களைக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அதேவேளை, பிரேமதாசவையும் விக்கிரமசிங்கவையும் ஆதரித்த தாராளவாத முகாமைச் சேர்ந்த ஆதரவாளர்கள் தெற்கைச் சேர்ந்த இரு சிங்கள பௌத்த பேரினவாதிகளான நாமல் ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீரவுடன் தமிழ்ப் பொதுவேட்பாளரான பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஒப்பிட்டிருப்பதுடன் மூவரும் ஒரே விதமான கோட்பாடுகளை கொண்டவர்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.
மேலும், பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்ச் சமூகம் வழங்கிய ஆதரவு அவர்கள் பெருமளவுக்கு பொதுமைப்பட்ட, தேசிய அரசியலுக்கு சாதகமாக தமிழ் அடையாள அரசியலை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்று அந்த தாராளவாத போக்குடைய முகாமைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
முதல் கண்ணோட்டத்தில், இந்த இரு வாதங்களும் வேறுபட்டவையாக தோன்றலாம். ஆனால், உன்னிப்பாக அவதானித்தால் அவை ஒரே மாதிரியானவை. இருப்பதையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த இரு கருத்துக் கோணங்களுமே இந்த சமூகங்களுக்கு இடையில் இருக்கும் தனித்துவமான கலாசாரம், நடத்தை ஒழுக்கங்களையும் அடையாள வேறுபாடுகளையும் கொண்டவை என்பதை ஏற்றுக்கொள்ளத் தவறுகின்றன. இந்த குழுக்களின் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அபிலாசைகள் ஒற்றைத்தன்மை கொண்டவையல்ல.
இந்த கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இப்போது இல்லை என்று கருதுவதுடன் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டுவிட்டால் சமத்துவமும் இணக்கநிலையும் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறார்கள்.
அனால், இந்த கருத்தியல் நோக்கு யதார்த்தத்தில் இருந்து வேறுபட்டது. நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, இலங்கை தனித்துவமான அடையாளங்களையும் முன்னுரிமைகளையும் கொண்ட பிராந்தியங்களாக பிளவுபட்டிருக்கிறது. இந்தப் பிளவு இலங்கை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மிகவும் வெளிப்படையாகத் தெரியும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் வேறுபட்ட ஒரு நிலப் பிராந்தியம், வரலாறு, சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட அடையாள உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள்.
நாடு சுதந்திரமடைந்த பிறகு பல தசாப்தங்களாக அவர்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டமை, 30 வருடகால உள்நாட்டுப்போர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகியவை காரணமாகவும் அரசாங்கங்கள் பொறுப்புக்கூறத் தவறியமை காரணமாகவும் இடைவெளி விரிவடைந்துவிட்டது. இந்த காரணிகள் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவர்களிடமிருந்து தமிழ்ச் சமூகத்தை மேலும் தூர விலக்குகின்றன.
2009ஆம் ஆண்டுக்கு பிறகு, வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகம் போரின் இறுதிக்கட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைந்தளவு ஈடுபாட்டைக் கொண்டிருந்த அரசியல் பிரிவுகளுடன் தொடர்ச்சியாக அணிசேர்ந்து வந்திருக்கிறார்கள். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை அவர்கள் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகவே வாக்களித்தார்கள்.
ஆனால், இந்த தேர்தலில் பிரதான வேட்பாளர்களில் ஒரு ராஜபக்ச இல்லாத நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அங்கமாக இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மீது கவனம் குவிந்தது. குறிப்பாக, போரின் இறுதிக்கட்டங்களில் ஜே.வி.பி. சம்பந்தப்பட்டிருந்தது. "எந்த வழியில் என்றாலும்" போருக்கு முடிவைக் கட்டிவிடுமாறு மகிந்த ராஜபக்சவை தாங்களே வலியுறுத்திக் கேட்டதாக ஜே.வி.பி.யினர் தேர்தல் பிரசாரங்களின்போது பெருமை பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது.
இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் பேர் மாண்டார்கள். வடக்கில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை அந்த படுகொலைகளில் இழந்திருக்கிறார் என்ற உண்மை நிலைவரத்தின் பாரதூரத்தன்மையை தெளிவுபடுத்தி நிற்கிறது. அதனால் தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்படவேண்டிய ஒரு கட்சி என்று அவர்கள் கருதியது இயல்பானதேயாகும்.
தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லால்காந்த போரில் தனது கட்சியின் ஈடுபாடு குறித்து பெருமையாகப் பேசினார்.
மேலும், கறைபடிந்த சிங்கள பௌத்த பேரினவாத வரலாறு ஒன்றைக் கொண்ட ஜே.வி.பி. ஒரு குறைந்தபட்ச அதிகாரப் பரவலாக்கல் வடிவத்தைக் கூட கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது.
வடக்கு பிராந்தியத்தில் உள்ள வர்த்தகர் குழாத்துடன் ஊடாட்டங்களைச் செய்வதற்கு சில முயற்சிகளை ஜே.வி.பி. மேற்கொண்ட அதேவேளை தமிழ் மக்களுடனான அல்லது ஏனைய சிறுபான்மைக் குழுக்களுடன் அர்த்தபுஷ்டியான முறையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு எதையும் செய்யவில்லை. அதனால் ஜே.வி.பி.க்கு வாக்களிப்பதை தமிழர்கள் தவிர்த்துக்கொண்டது முற்றிலும் நியாயமானதே.
அதேபோன்று தமிழர்கள் இப்போது தேசிய இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்ற காரணத்தினால் அவர்கள் தமிழ் வேட்பாளரை நிராகரித்து பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தார்கள் என்ற தாராளவாத போக்குடைய முகாமின் வாதமும் தவறானது. சிங்கள பௌத்த பேரினவாத வரலாற்றையும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தொடர்பையும் கொண்ட ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்கு ஒரே வழி என்று நம்பியதன் காரணத்தினாலேயே தமிழர்கள் அந்த இருவருக்கும் வாக்களித்திருப்பார்கள் எனலாம்.