திப்பிட்டிய நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர் தர மாணவி ஒருவரை ஏமாற்றி விடுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் அதே பாடசாலையில் கடமையாற்றும் அதிபருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி பெற்றோர்கள் சிலர் குறித்த பாடசாலைக்கு முன்பாக இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபரான 42 வயதுடைய பாடசாலை அதிபர் தனது பாடசாலையில் கல்வி கற்கும் உயர் தர மாணவி ஒருவரிடம் பரீட்சை வினாத்தாளின் பதில்களைச் சொல்லித் தருவதாகக் கூறி மாணவியை ஏமாற்றி விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான பாடசாலை அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், சந்தேக நபர் குறித்த பாடசாலையில் அதிபராகத் தொடர்ந்து கடமையாற்றி வருவதாகவும் சந்தேக நபருக்குப் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் சிலர் ஆதரவளித்து வருவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.