ராகம வைத்தியசாலையில் உயிரிழந்த தனது தாய்க்கு நீதி கோரி தகராறில் ஈடுபட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் நுரையீரல் தொடர்பான நோய் காரணமாகக் கடந்த 22ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (24) உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த தாயின் மகன் தனது தாய்க்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும் தாயை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறி வைத்தியசாலையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகராறில் வைத்தியசாலையிலிருந்த வைத்தியர் ஒருவரும் தாதியர் ஒருவரும் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.