சட்டமொழுங்கை பேணுவதற்கும் பொலிஸார் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்க்ள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளார்.
பொலிஸார் அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உடனடியாக உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டினை வழங்குவதே தனது அமைச்சு எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினை என தெரிவித்துள்ள அவர் கடவுச்சீட்டு விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டிற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன,ஒக்டோபர் 15 முதல் 20 திகதிக்குள் புதிய கடவுச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்,அந்த காலத்திற்குள் இந்த விடயத்திற்கு தீர்வை காண விரும்புகின்றேன்,என அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மீதான பொதுமக்கள் நம்பிக்கை குறைவடைந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அவர் நம்பிக்கையை மீள கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்தும்போது செய்த தவறுகளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் திருத்திக்கொள்ளவேண்டும், என விஜித ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டமொழுங்கை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவேன் எந்த அரசியல் தலையீடும் இருக்ககூடாது அரசாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ள மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.