அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் என தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் முதலாவது வாக்குகள் எண்ணப்பட்டு வெளியான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்த வேளையில், அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கூறி தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்த மனோகணேசன், அப்பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
'மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். அதேபோன்று சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக நாம் கடுமையாகப் பணியாற்றிய மத்திய, மேல், சப்ரகமுவ, ஊடக மாகாணங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நாம் நன்றி கூறுகின்றோம். ஜனநாயக செயன்முறை வெளிப்பட்டிருக்கிறது. அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த வெற்றி பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.