எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்படுவதுடன் கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது அங்கு கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக வாக்களிக்க, வாக்குச் சீட்டினை தொட்டுணரக்கூடிய வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தலன்று வாக்காளர்களுக்கு ஒரு தரப்பினர் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சட்ட விரோதமானது. இயலாமையுடையவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாயின் அதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் “வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு ” இன்று புதன்கிழமை (18) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எஸ். அச்சுதன் மற்றும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கே.ஜே.எஸ். மாதவ ஆகியோரின் தலைமையின் கீழ் இடம்பெற்றது.
இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் எவ்வாறு தமது வாக்குகளை இடவேண்டும் எனவும் வாக்காளர்களுக்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் குறித்தும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர். எஸ் அச்சுதன் ஆகியோரினால் எடுத்துரைக்கப்பட்டது.
அதன்படி,இன்று 18 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைவதுடன் அமைதி காலம் பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். எனவே இதனைக் கருத்திற்கொண்டு அச்சு ஊடகங்களும் சமூக ஊடகங்களும் தேர்தல் தொடர்பான செய்தி வெளியீட்டு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டனர்.
நாடளாவிய ரீதியில் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகச் சுவரொட்டி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இலகுவாக வாக்களிப்பதற்காகவும் இலகுவாக வாக்குச் சாவடிகளை அணுகுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமது வாக்குரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதா ? எனவும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமது வாக்குரிமை தொடர்பில் கிராம சேவகரைச் சந்தித்துத் தேர்தல் தொடர்பிலான தகவலினை பெற்றுக்கொள்ள முடியும்.
வாக்களிப்பதற்காக அடையாள அட்டை ,சாரதி அனுமதிப் பத்திரம் ,கடவுச்சீட்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கப்பட்ட பத்திரம் , மத குருமார்களுக்கான அடையாள அட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி வாக்களிக்கமுடியும்.
அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவை அணுகி தற்காலிக அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் வசதி வாய்ப்புக்கள் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை கிடைக்காவிடில் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி விநியோகிக்காமல் இருக்கும் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது www.elections.gov.lk என்ற இனையத்தளத்திற்குள் உட்பிரவேசித்து தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்காளர் அட்டை மாதிரியைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
இதற்கு மேலதிகமாக இயலாமை கொண்டவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக, கண்பார்வையற்ற வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்கு செல்லும் போது அங்கு கடமையில் இருக்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தரின் உதவியுடன் இலகுவாக வாக்களிப்பதுடன் வாக்குச் சீட்டினை தொட்டுணரக்கூடிய வகையில் ஏற்பாடுகளும் செவிப்புலனற்றவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் போது சைகை மொழி பிரயோகம் போன்ற ஏற்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையானது முறைமைகள் நாடளாவிய ரீதியில் உள்ள 13423 வாக்குச் சாவடிகளிலும் பின்பற்றப்படும்.
வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையத்தில் பின்பற்றக்கூடியவை
எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கமுடியும். எனவே கால தாமதமின்றி வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாக்களிக்கச் செல்லும் போது அயலவர்கள் , நண்பர்கள் என்பவர்களோடு வாக்குச் சாவடிக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும் . வாக்காளர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் தான் வாக்களிக்க முடியும். எனவே நேர்த்தியான முறையில் தனது வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் வாக்குகளை அளித்த பின்னர் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
வாக்களிக்கும் முறைமை
தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்கும் போது வேட்பாளரின் பெயருடன் காணப்படும் வாக்குச் சீட்டில் வாக்களிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள கூட்டுக்குள் வாக்கினை அளிக்க வேண்டும்.
தனது முதல் வாக்கினை அளிக்கும் போது 1 எனவும் விருப்பு வாக்குகளை அளிக்கும் போது 2,3 எனவும் வாக்களிக்க முடியும்.
அதற்கு மேலதிகமாக தேர்தல் ஆணைக்குழுவின் சட்டதிட்டத்துக்கு அமைய விருப்பத் தெரிவினை இடுவதற்காக புள்ளடி இட முடியும் என்பதுடன் மேலதிக கோடுகள் காணப்படும் போது வாக்கு நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க , தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர். எஸ் அச்சுதன் ஆகியோர் குறிப்பிட்டனர்.