இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் நின்றுவிடாதீர்கள்; தேசிய அரசியல், பொருளாதார சூழ்நிலைகளைப் பகுத்தாராய்ந்து வாக்களியுங்கள் - 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தல்

நாம் எமது ஜனாதிபதித்தெரிவினை மேற்கொள்ளும்போது தனியே இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் குறுக்கிவிடாது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார சூழ்நிலை குறித்துப் பகுத்து ஆராய்வது அவசியமாகும். தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலாநிதி ஏ.அந்தோனிராஜன், கலாநிதி எஸ்.அறிவழகன், பேராசிரியர் பி.ஐங்கரன், கலாநிதி எஸ்.ஜீவசுதன், கலாநிதி ஏ.கதிர்காமர், பேராசிரியர் ஆர்.கபிலன், கலாநிதி என்.ராமரூபன், கலாநிதி எம்.சர்வானந்தன், என்.சிவகரன், பேராசிரியர் ஆர்.ஸ்ரீகரன், கலாநிதி ஆர்.தர்ஷன், கலாநிதி எம்.திருவரங்கன், கலாநிதி என்.வரதன், பேராசிரியர் கே.விக்னரூபன் மற்றும் எஸ்.விமல் ஆகிய 15 புத்திஜீவிகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக உருவான மக்கள் எழுச்சிப்போராட்டங்களின் பின்னர் நாடு சந்திக்கும் முதலாவது மிகமுக்கிய தேர்தல் இதுவாகும்.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இந்நாட்டில் வாழ்க்கைச்செலவு கடந்த இரு வருடங்களில் பன்மடங்காக உயர்வடைந்திருக்கிறது. வறுமையும், வேலையின்மையும் மக்களை வாட்டுகிறது. உரம் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கான மானியக்குறைப்பின் காரணமாக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வட்டிவீத அதிகரிப்பு சிறு முயற்சியாளர்களின் வருமானத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.  கட்டடத்துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியினால் நகர்ப்புற முறைசாரா மற்றும் கிராமப்புற மக்களின் தொழில்வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து, எரிபொருள், மின்கட்டண அதிகரிப்பினால் சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமைகளை நாம் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான வாழும் நாட்டின் வட, கிழக்குப் பகுதிகளிலும் அவதானிக்கிறோம். போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஆயுதக்கலாசாரம், வன்முறைகள், இந்திய இழுவைப்படகுப் பிரச்சினை போன்றனவும் வடக்கை வெகுவாகப் பாதித்திருக்கின்றன.

இவ்வாறு நிலைமை மோசமடைந்து செல்கையில் நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஊழலில் ஈடுபட்டு நாட்டின் வளங்களையும், செல்வத்தையும் கொள்ளையிட்டவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவற்றால் மக்கள் வெகுவாக அதிருப்தியுற்றிருக்கிறார்கள். இத்தகு பின்னணியில் 2022 இல் மக்கள் எழுச்சியின் அடிப்படையாகக் காணப்பட்ட 'கட்டமைப்பு மாற்றம்' என்ற கோஷம் தற்போது குறிப்பாக தென்னிலங்கையில் ஓங்கி ஒலிப்பதனைக் காணமுடிகிறது. போராட்டத்தின் மூலம் ஏற்படாத மாற்றங்களைத் தேர்தலின் மூலமாகவேனும் ஏற்படுத்தவேண்டும் என்பதில் தெற்கு மக்கள் ஆர்வமாக இருப்பதை உணரமுடிகிறது.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலை வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் மிகக்கவனமாகவும், புத்திசாதுரியமாகவும் கையாளவேண்டியது அவசியமாகும். தென்னிலங்கையில் பல தசாப்தங்களின் பின்னர் இனவாதத்தினை முன்னிறுத்தாத தேர்தல் பிரசாரத்தினை பிரதான வேட்பாளர்கள் முன்னெடுத்துவருவதாக அறிகிறோம்.

மக்களின் நலனை முன்னிறுத்தும் பொருளாதார ரீதியான மாற்றங்கள், ஆட்சி முறைமையில் மாற்றம், ஊழல் ஒழிப்பு போன்ற கோஷங்களை முன்வைக்கும் வேட்பாளர்களின் பின்னால் தென்னிலங்கை மக்கள் பெருமளவில் திரள்வதையும் நாம் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பார்க்கிறோம்.

எனவே தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் மாற்றத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் மக்களுடன் இம்முறைத்தேர்தலில் பயணிப்பது குறித்து ஆராயவேண்டும். அதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளியவர்களைத் தோற்கடிப்பதும் அவசியம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு, மதச்சார்பற்ற அரசினை உருவாக்குதல், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் பிரதான வேட்பாளர்கள் முற்போக்கான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாமை குறித்து நாம் சுட்டிக்காட்டுகின்றோம். அதேவேளை பொருளாதார நெருக்கடியும், ஊழலினால் ஏற்படும் பொருளாதார, அரசியல் சீர்கேடுகளும் சிறுபான்மை சமூகங்களையும் மோசமாகப் பாதித்துள்ளன என்பதை மனதிலிருத்தி இம்முறைத் தேர்தலில் நாம் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது அவசியம்.

சர்வதேசத்தினால் தான் எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை குறித்து நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் நாம் எமது தேர்தல் தெரிவுகளை மேற்கொள்வது அரசியல் ரீதியாக உள்நாட்டில் எம்மை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.

இவ்வாறான காரணங்களால் தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

பொருளாதார ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எமது சமூகங்களும், ஊழல் மற்றும் ஏனைய சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள எமது பொது நிறுவனங்களும் முன்னேறுவதற்கு இந்தத் தேர்தல் ஏதாவதொரு வழியில் சந்தர்ப்பங்களைத் திறக்குமா என நாம் சிந்திக்கவேண்டியது அவசியம். தென்னிலங்கையில் இனவாதம் சற்று அடங்கியிருக்கும் இவ்வேளையிலே, ஒட்டுமொத்த இலங்கையிலும் ஜனநாயகத்தன்மை மிக்க, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்துகின்ற அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக நாம் இந்தத் தேர்தலை நோக்குவது பொருத்தமானதாக இருக்கும் என நாம் கருதுகின்றோம்.

அதன்படி தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்து, முற்போக்கானதும், ஊழலுக்கு எதிரானதும், பொருளாதார மீட்சியில் அக்கறை கொண்டதும், முற்போக்கான அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கான கோஷங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியதும், நம்பகத்தன்மை வாய்ந்ததும், இனங்களை ஒற்றுமைப்படுத்தக்கூடியதுமான ஒரு வேட்பாளருக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc