நிந்தவூரில் உள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பாக ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த அந்நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்கள், உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இன்னும் மூன்று வாரங்களில் விசாரணை நடாத்தி பொருத்தமான தீர்வினை வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர், மாணவர்கள் மீது கெடுபிடிகளை பிரயோகிப்பதாகவும் மத கடமைகளுக்காக பள்ளிவாசலுக்குச் செல்வதற்கு தடை விதிப்பதாகவும் குறிப்பிட்டு மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை (09) ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
அவ்வேளை இந்த பிரதிப் பணிப்பாளரை இடம் மாற்ற வேண்டும் என்று மாணவர்கள் கோரினர்.
இந்த மேலதிகாரியின் முறையற்ற நிர்வாகச் செயற்பாடுகளால் தாம் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் மாவட்டத்தின் பயிற்றுவித்தல் செயற்பாட்டில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் கடமை புரியும் போதனாசிரியர்கள், உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த அமைதியின்மையை அடுத்து, இது தொடர்பான உண்மை நிலைவரத்தை கண்டறிவதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, தொழில்பயிற்சி அதிகார சபை தலைவர் எஸ்.குமார் ராஜபக்ஷ ஆகியோர் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி வளாகத்துக்கு புதன்கிழமை (11) அவசர விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இங்கு ஏற்பட்ட குழப்பநிலைக்கான காரணங்கள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்த கல்வி அமைச்சர், இன்னும் மூன்று வாரங்களில் விசாரணைக் குழுவொன்றை நியமித்து அதன் அறிக்கையின்படி, நல்லதொரு முடிவை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.